கல்வி அமைச்சர் – இயக்குநர் அதிகார மோதல் உச்சம்! அமைச்சர் உத்தரவை மீறி ஆசிரியர்கள் பணி நிரவலுக்கு உத்தரவு! கல்வித்துறையில் பெரும் குழப்பம் – ஐபெட்டோ கண்டனம்!

0
167
director-defies-tn-education-minister-vels-media
AIFETO Annamalai condemns the Elementary Education Director for allegedly defying the Minister's orders on July 3 redeployment, citing concerns over service extension, administrative transfers, and potential vindictive actions.

தமிழகப் பள்ளிக்கல்வித்துறையில் தற்போது நடந்துவரும் நிர்வாகக் குளறுபடிகள், ஆசிரியர்கள் மத்தியில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தின் மீதும் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிறகும், துறையின் இயக்குநர் அதற்கு நேர்மாறாகச் செயல்படுவது, “அமைச்சரின் அதிகாரத்திற்கு என்ன ஆனது?” என்ற கேள்வியை உரக்க எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக, அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (AIFETO – ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு பணி நிரவல் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிக்கிறார். ஜுலை மூன்றாம் தேதி நடைபெற உள்ள மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கு பணி நிரவல் நடைபெறாது என்று திட்டவட்டமாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஊடகங்களிலும் அனைத்து நாளேடுகளிலும் கல்வி அமைச்சர் அளித்த பேட்டி வெளிவந்துள்ளது. ஆனால் தொடக்கக்கல்வி இயக்குநர் 3-ம் தேதி திட்டமிட்டபடி பணி நிரவல் நடைபெறும் என்று அறிவிக்கிறார்.

AIFETO Annamalai

காரணம் ஆசிரியர் சங்கங்கள் சொல்வது போல் மாநிலம் முழுவதும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் இன்னமும் நிரப்பப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பெரும்பான்மையான ஒன்றியங்களில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நூற்றுக்கு மேல் உள்ளன. அதனால் பணி நிரவலை இந்த ஆண்டு நிறுத்தி விடுகிறேன் என்று அமைச்சர் அறிவித்தார்.

ஆசிரியர்கள் மத்தியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பு மீது ஒரு நல்ல உணர்வு நிரம்பி வழிந்தது‌. ஆனால் தொடக்க கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ. நரேஷ், இணை இயக்குநர் சாமிநாதன் ஆகியோர் கூகுள் மீட் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் (தொடக்கக்கல்வி), திட்டமிட்டபடி ஜூலை மூன்றாம் தேதி பணி நிரவல் நடைபெறும் என்றும், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் உடனடியாக வட்டார கல்வி அலுவலர்களுக்கு தகவல் கொடுத்து பணி நிரவலில் கலந்து கொள்ளச் சொல்லி நேர்முகமாக குறிப்பாணையும் வழங்கியுள்ளார்.

61 பிள்ளைகள் ஒரு பள்ளியில் இருந்தாலும் மூன்று ஆசிரியர்கள் இருந்தால் ஒருவர் பணி நிரவல் என்று அறிவித்திருக்கிறார். இடம் காலியாக இருந்தாலும் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது என்று அறிவித்திருக்கிறார்.

Also Read : மாநில கல்விக் கொள்கையை உடனடியாக வெளியிட வேண்டும் – கோச்சிங் சென்டர்களை தடை செய்யவும் ஐபெட்டோ வலியுறுத்தல்!

இந்த ஆண்டு பணி நீட்டிப்பு இல்லை என புலனப் பதிவுகள் மூலம் ஆசிரியர்கள் கவலைகளை தெரிவித்து வந்தார்கள். ஆனால் தொடக்கக்கல்வி இயக்குநரை பொறுத்தவரையில் அவர் கொடுத்து வருகிற மறைமுக அழுத்தத்தில் பல மாவட்டங்களில் இரண்டு ஆசிரியர்கள், மூன்று ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் கூட பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டு வருகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களை கேட்டால் தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவுரைப்படி தான் நாங்கள் செயல்படுகிறோம் என்று தெரிவிக்கிறார்கள்.

அரசாணை தெளிவாக இருந்தும் தொடக்கக் கல்வித்துறையை ரெக்கவரி துறையாக மாற்றி இயக்குநர் செயல்பட்டு வருகிறார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்திலிருந்து ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணப் பயனை பறிக்கும் வகையில் தணிக்கை துறையினை கையில் எடுத்துக்கொண்டு இநயக்குநர் செயல்பட்டு வருகிறார். வெளிப்படையாக எழுத வேண்டும் என்றால், தொடக்கக் கல்வி ஆசிரியர்களை பழிவாங்கவே தொடக்கக்கல்வி இயக்குநர் பொறுப்பினை ஏற்று உள்ளது போல் அவரது நடவடிக்கை அமைந்துள்ளது. அவருடைய பணிக்காலத்தில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக ஒரு நாள் கூட பணியாற்றாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாக மாறுதலை நிறுத்தி விட்டதாக எங்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதி அளித்தார். ஆனால் தொடர்ந்து நிர்வாக மாறுதல் நடைபெற்று வருகிறது. பணி நிரவலினையும் விருப்பப்பட்டவர்களுக்கு, விருப்பப்பட்ட இடங்களை அளிப்பதில் பேரம் பேசி முடித்து விட்டதாக எங்களுக்கு ஆதாரப்பூர்வமாக தெரிகிறது. தொடக்கக்கல்வி இயக்குநருக்கு வேண்டியவருக்கு தேவையான இடத்தில் பணி நிரவல் செய்து கொடுப்பது, அவர் பரிந்துரையில் இடம் பெறாதவர்களை அப்படியே விட்டு விடுவது என்று செயல்படுகிறார்.

Also Read : நிர்வாக மாறுதல் முறைகேடு: ஆசிரியர்களின் கண்ணீரும், ஜனநாயகத்தின் கேள்வியும்! ஐபெட்டோ சுளீர்!

தொடக்கக் கல்வித் துறை வரலாற்றில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பினை புறந்தள்ளுவதும், அலட்சியப்படுத்துவதும், தன்னாட்சி நிர்வாகத்தினால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற வகையிலும் நடந்து வருகிற இயக்குநர் இவரைத் தவிர நாங்கள் இதுவரை எவரையும் கண்டதில்லை. தொடக்கக்கல்வித் துறையில் ஒரு வரலாற்று பிழையினையே இந்த அரசுக்கு ஏற்படுத்தி வருகிறார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளரும் உடன் தலையிட்டு பணி நிரவலினை நிறுத்துவதுடன் பணிநீட்டிப்பு, தன்னாட்சி நிர்வாகத்திற்கு உடன் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டுமாய் சங்கங்களின் மூத்த தலைவர் என்ற முறையிலும், அரசின் மீது அக்கறை கொண்டவர் என்ற முறையிலும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வியாழக்கிழமை ஜுன் 3-ந் தேதி பணி நிரவல் நடைபெற்றால், பணி நீட்டிப்பு தொடர்ந்து நிறுத்தப்பட்டால், கலந்தாய்வு மையங்களுக்கு முன்பாக தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பிலும், ஏனைய சங்கங்களின் சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Summary:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புக்கும், தொடக்கக் கல்வி இயக்குனரின் உத்தரவுக்கும் இடையே நிலவும் இந்த முரண்பாடு, ‘ஆட்சி அதிகாரம் யாருடைய கையில்?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஒரு அமைச்சர் பொதுவெளியில் ஒரு கொள்கை முடிவை அறிவித்த பிறகு, அவருக்குக் கீழான அதிகாரிகள் அதற்கு எதிராகச் செயல்படுவது, அரசின் நம்பகத்தன்மையையும், அமைச்சரவையின் ஒருங்கிணைந்த செயல்பாட்டையும் கேள்விக்குறியாக்குகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தனது அமைச்சரின் அதிகாரத்தைப் பாதுகாப்பதுடன், ஆசிரியர்கள் மத்தியில் நிலவும் குழப்பத்திற்கும், கவலைகளுக்கும் ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. கல்வித் துறையில் இதுபோன்ற நிர்வாகக் குளறுபடிகள் தவிர்க்கப்பட்டு, வெளிப்படையான, ஆசிரியர் நலன் சார்ந்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry