
சென்னை: தமிழகத்தில் அரசியல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் அதிக அளவில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளை முறைப்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில், இந்த புதிய விதிகளை அரசு வகுத்துள்ளது.
யாருக்கெல்லாம் பொருந்தும்?
* தமிழகத்தில் 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் அனைத்து பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கலை மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்வுகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.
* 5,000-க்கும் குறைவான மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள அனுமதி கோரும் முறையே தொடரும்.
* முந்தைய வரைவு அறிக்கையில் வைப்புத்தொகை (Security Deposit) வசூலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது, ஆனால் இறுதி அறிவிப்பில் அது கட்டாயமாக்கப்படவில்லை.
விதிவிலக்குகள்:
ஜனவரி 5, 2026 தேதியிட்ட அரசாணையின்படி, வழிபாட்டுத் தலங்களில் வழக்கமாக நடைபெறும் மத நிகழ்வுகள் அல்லது ஏற்கனவே காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட தடத்தில் அல்லது இடத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு இந்த SOP பொருந்தாது.
இடங்களைத் தேர்வு செய்தல்:
* மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களும் (எஸ்பி ஆலோசனைப்படி), மாநகராட்சிகளில் (சென்னை தவிர) மாநகர காவல் ஆணையர்களும் பொதுக்கூட்டங்களுக்கான இடங்களை அறிவிப்பார்கள்.
* சென்னையில், கூடுதல் ஆணையர்களுடன் கலந்தாலோசித்து சென்னை மாநகர காவல் ஆணையர் இடங்களை அறிவிப்பார்.
* இடங்களை இறுதி செய்வதற்கு முன்பு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்கப்படும். தேசிய அல்லது மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகில் கூட்டம் நடத்த வேண்டுமானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன்கூட்டியே இசைவு பெற வேண்டும்.
உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வு:
* ஒவ்வொரு இடத்தையும் பொதுப்பணித்துறை பொறியாளர் ஆய்வு செய்து, அங்கே எத்தனை பேர் அமரலாம், நிற்கலாம், வாகன நிறுத்துமிடம், நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள், அவசரகால வழிகள் ஆகியவற்றைக் கணக்கிட்டுச் சான்றளிக்க வேண்டும். இந்த இடங்கள் ஆண்டுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
* கூட்டம் நடத்த விரும்பும் தனிநபர் அல்லது அமைப்புகள் அந்தந்தப் பகுதி காவல் நிலையத்திலோ அல்லது துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலோ எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும்.
* விண்ணப்பத்தில்: இடம், தேதி, நேரம், எதிர்பார்க்கப்படும் மக்கள் எண்ணிக்கை, முக்கியத் தலைவர்களின் பெயர்கள், வாகனங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
காலக்கெடு:
1. நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் நடத்த குறைந்தது 10 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் (21 நாட்களுக்கு முன்பாகவும் விண்ணப்பிக்கலாம்).
2. மாற்று இடங்களில் நடத்த குறைந்தது 15 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் (30 நாட்களுக்கு முன்பாகவும் விண்ணப்பிக்கலாம்).
3. அவசரகாலப் போராட்டங்கள்: திடீர்ச் சம்பவங்களால் எழும் அவசரப் போராட்டங்களுக்கு, அந்தச் சம்பவம் நடந்து 3 நாட்களுக்குள் விண்ணப்பித்தால், மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் ஆணையர் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அனுமதி அளிக்கலாம்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
* விண்ணப்பதாரர்கள் முதலுதவி மையங்கள், ஆம்புலன்ஸ், தன்னார்வலர்கள் மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், SOP விதிகளுக்குக் கட்டுப்படுவதாக உறுதிமொழி அளிக்க வேண்டும்.
முன்னுரிமை மற்றும் அனுமதி:
* ஒரே இடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால், ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் பரிசீலிக்கப்படும். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை உண்டு.
* அனுமதி வழங்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்து நிகழ்வுக்கு 5 நாட்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட வேண்டும்.
பெரிய கூட்டங்களுக்கான விதிகள்:
* 50,000-க்கும் அதிகமான மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு 30 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான உத்தரவை 15 நாட்களுக்கு முன்பே அதிகாரிகள் வழங்க வேண்டும்.
* அனுமதி மறுக்கப்பட்டால் அதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்.
காவல்துறை பாதுகாப்பு:
* குறைந்த அபாயம் உள்ள இடங்கள்: 200 பேருக்கு 1 காவலர்.
* நடுத்தர அபாயம்: 100 பேருக்கு 1 காவலர்.
* அதிக அபாயம்: 50 பேருக்கு 1 காவலர்.
அடிப்படை வசதிகள்:
* 500 பேருக்கு ஒரு கழிப்பறை என்ற அளவில் வசதி செய்யப்பட வேண்டும். 300 மீட்டர் இடைவெளியில் நடமாடும் கழிப்பறைகள் இருக்க வேண்டும்.
* ஒரு நபருக்கு 4 லிட்டர் குடிநீர் என்ற கணக்கில் குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும். 100 மீட்டர் இடைவெளியில் குடிநீர் புள்ளிகள் அமைக்கப்பட வேண்டும்.
தமிழக டிஜிபி இந்த விதிகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், அடுத்த 6 மாதங்களுக்குள், விண்ணப்பிப்பது முதல் அனுமதி பெறுவது வரை அனைத்தையும் ‘ஆன்லைன்’ (Online) முறைக்கு மாற்ற வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
