
ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசின் உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தினை (TAPS) அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை, கடந்த 03.01.2026 அன்று தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ மற்றும் ஃபோட்டோ ஜியோ அமைப்பினர் நேரில் சந்தித்து, இனிப்பு ஊட்டி தங்கள் நெஞ்சார்ந்த வரவேற்பினையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.

இந்த மகிழ்ச்சிக்கு பின்னால் ஒரு நீண்ட நெடிய போராட்ட வரலாறு இருக்கிறது. 2003-ல் இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகமானபோது, அதைத் துணிச்சலோடு எதிர்த்துக் களம் கண்டு, நள்ளிரவில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அன்று 999 பேரை 8 மாத காலம் பணிநீக்கம் செய்தபோது, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலில் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி, அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்திய அதே போராட்ட உணர்வோடுதான் இன்றும் ஜாக்டோ ஜியோ மற்றும் ஃபோட்டோ ஜியோ அமைப்புகள் கரம் கோர்த்து நிற்கின்றன.
இந்த உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் (TAPS) நாம் வரவேற்க வேண்டிய அம்சங்கள் பல இருக்கின்றன. 10 ஆண்டுகள் பணியாற்றினாலும் ஓய்வூதியம் உண்டு என்பதுடன், குறைந்தபட்ச பணிக்காலத்திற்கும் ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 30 ஆண்டுகள் பணி முடிப்பவர்களுக்கு அவர்கள் பெற்று வந்த ஊதியத்தில் 50 விழுக்காடு ஓய்வூதியமாகவும், பணிக்காலத்திற்கு ஏற்ப 25 லட்சம் ரூபாய் வரை பணிக்கொடையும் வழங்கப்படுகிறது. மேலும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு என்பது ஒரு பெரிய ஆறுதல்.
இருப்பினும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள 6.25 லட்சம் ஊழியர்களில் எத்தனை சதவீதம் பேர் இந்த TAPS திட்டத்தை முழுமனதோடு வரவேற்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. சமூக வலைதளப் பதிவுகளைப் பார்த்தால், பாராட்டுக்களை விட உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துபவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். தேசிய ஓய்வூதியத் திட்டமோ (NPS), மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமோ (UPS) எங்களுக்கு வேண்டாம்; பங்களிப்பே இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) தான் வேண்டும் என்ற முழக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது.
முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டத்தில் ஓய்வூதியமும் பணிக்கொடையும் இருப்பது ஆறுதல் அளித்தாலும், இது பழைய ‘பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்’ மறுவடிவமே தவிர வேறில்லை என்பதை மூத்த தலைவர்கள் உணரவில்லையா என்று இளைய தலைமுறை ஊழியர்கள் கேட்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்கள் UPS திட்டத்தில் சேரத் தயங்குவதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. NPS திட்டத்தில் பணி நிறைவு பெற்றால், நாம் செலுத்திய தொகையில் 60 விழுக்காட்டைத் திரும்பப் பெற்றுவிடலாம். ஆனால் UPS மற்றும் தமிழ்நாடு அரசின் TAPS திட்டத்தில் நாம் கட்டிய தொகை திருப்பித் தரப்படுவதில்லை.
இந்தத் திட்டத்திற்காக அரசு 13,000 கோடி ரூபாய் செலவிடுவதாகக் கூறினாலும், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் சமூக வலைதளப் பதிவுகள் ஒரு கசப்பான உண்மையைச் சுட்டிக்காட்டுகின்றன. அவர்கள் ஓய்வு பெறும்போது அவர்களின் பங்களிப்புத் தொகை மட்டும் 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை கணக்கில் இருக்கும். குறிப்பாகக் கணவன்-மனைவி இருவரும் பணியாற்றும் குடும்பங்களில் இந்தத் தொகை மிகப்பெரியது.
இந்தச் சேமிப்பைத் திரும்ப வழங்காமல் ஓய்வூதியம் வழங்குவது ஊழியர்களிடையே பெரும் குமுறலை ஏற்படுத்தியுள்ளது. இன்று பாராட்டி மகிழ்பவர்கள் பெரும்பாலும் ஏற்கனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பவர்கள்தான்; புதிய திட்ட ஊழியர்கள் அல்ல.
அரசாணை வெளியானவுடன் முதலமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் இந்த யதார்த்த நிலையைத் தெளிவுபடுத்தித் தீர்வு காண வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஜாக்டோ ஜியோ மற்றும் ஃபோட்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுக்கும், எங்களைப் போன்ற மூத்த தலைவர்களுக்கும் உண்டு. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் படத்தைப் போட்டு ‘கண்ணீர் அஞ்சலி’ செலுத்துவது போன்ற பதிவுகள் நமது கூட்டுச் சக்தியைச் சிதைக்கக்கூடும்.
எனவே, அத்தகைய பிரிவினையைத் தவிருங்கள், உங்கள் இதய உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம் என்பதில் நம்பிக்கை வையுங்கள். ஏழு மாநிலங்களில் OPS அமல்படுத்தப்பட்டதை நாங்கள் அறியாதவர்கள் அல்ல. இப்போதே ‘ஆப்ஷன்’ கொடுக்க முடியுமா என்று அவசரப்பட வேண்டாம். வரவேற்க வேண்டியதை வரவேற்று மகிழ்வோம், அதே சமயம் பேசித் தீர்க்க வேண்டிய சவால்களைப் பேசித் தீர்ப்போம் என்ற நம்பிக்கையை உங்கள் இதயம் தொட்டுப் பதிவு செய்கிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Contact AIFETO Mr. Annamalai @ 94442 12060 / 9962222314. annamalaiaifeto@gmail.com
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
