
ஐப்பசி மாதத்தை “துலா மாதம்’ என்பர். இந்த மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருப்பதால் இதற்கு துலா (தராசு) மாதம் என்று பெயர் வந்தது. ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் உள்ள துலா கட்ட காவிரியில் நீராடுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. தேவ நதியாக இருந்த கங்கையை பகீரதன் தனது தவ வலிமையால் பூமிக்குக் கொண்டு வந்தார் என்பது ஐதீகம்.
அவர் கங்கா மாதாவை பூமிக்கு வரும்படி வேண்டியபோது, கங்கா மாதாவானவள், “எண்ணற்ற பாவங்களைச் செய்துவிட்டு எல்லோரும் என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். நான் பூமிக்கு வரமாட்டேன்” என்று தயக்கத்துடன் கூறினாளாம். அப்பொழுது பகீரதன், “பாவம் செய்பவர்களை மட்டுமே கணக்கில் கொள்ளக்கூடாது. ஏராளமான மகான்களும்தானே நீராடுவார்கள். அதன் மூலம் எப்பொழுதுமே நீங்கள் பரிசுத்தமாக இருப்பீர்கள்” என்று பதில் கூறினாராம். அதன் பின்னரே கங்கா தேவி பூலோகத்திற்கு வந்தாள் என்று கூறப்படுகிறது.
Also Read : வெற்றிலையில் உள்ள டாப் 10 ஆரோக்கிய நன்மைகள்! Health benefits of Vetrilai!
வடக்கு திசை பக்கம் மட்டுமே தவழ்ந்து கொண்டிருந்த கங்கா தேவி, தென்திசையில் இருக்கும் பக்தர்களுக்கும் அருள்பாலிக்கும் பொருட்டு ஐப்பசி மாதத்தில் மட்டும் காவிரியின் துலா கட்டத்தில் எழுந்தருள்வதாக ஐதீகம். ஐப்பசி மாதம் கடைசி நாளன்று நடைபெறுவது கடை முழுக்கு (கடைமுகம்) என்று அழைக்கப்படுகிறது.
தமிழ் பாரம்பரியத்திலும் சரி, ஆன்மிக ரீதியாகவும் சரி ஏழு என்ற எண்ணிற்கு தனிச்சிறப்பு உண்டு. கிழமைகள், சப்த கன்னியர்கள் என பலரும் ஏழு எண்ணிகையையே அடிப்படையாகக் கொண்ட அமைந்துள்ளன. அது போல் ஏழாவது மாதமாக வரும் ஐப்பசிக்கும் பல சிறப்புகள் ஒன்று. அப்படிப்பட்ட சிறப்புகளில் ஒன்று தான் காவிரி துலா ஸ்நானம். ஐப்பசி மாதத்தில் பிற நாட்களை விட கடைசி நாளன்று துலா கட்டத்தில் நீராடுவது மிகவும் சிறப்பைத் தரும். இந்த ஆண்டு இந்நன்னாள் நவம்பர் மாதம் 15ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று அமைகிறது.

கடைமுழுக்குக்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை நவம்பர் 16ம் தேதி, முடவன் முழுக்கு என்று கூறப்படுகிறது. இது கார்த்திகை முதல் நாள் அன்று அமைகிறது. அது என்ன முடவன் முழுக்கு? அதுவும் ஐப்பசி முடிந்த பிறகு கார்த்திகை முதல் நாளில் தோன்றுகிறது அல்லவா?
ஒரு சமயம் மாற்றுத்திறனாளி ஒருவர், காவிரி துலா கட்டத்தில் நீராட தனது வீட்டில் இருந்து புறப்பட்டாராம். ஆனால், அவர் வந்து சேர்வதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து, கார்த்திகை முதல் நாள் பிறந்து விட்டதாம். தன்னுடைய இயலாமையை எண்ணி வருந்திய அவர், மகேசனை நினைத்து தியானித்தாராம். அப்பொழுது அங்கு ஒரு அசரீரி கேட்டதாம். “நீ காலம் தாழ்த்தி வந்ததற்காக வருத்தப்பட வேண்டாம். இன்றே இந்த காவிரி கட்டத்தில் நீராடு.
உன்னுடைய பாவங்கள் விலகும். உனக்கும் முக்தி கிடைக்கும்” என்கிற வார்த்தைகளைக் கேட்டவுடன், மாற்றுத்திறனாளிக்கு மிகுந்த சந்தோஷம் உண்டானதாம். சிவபெருமானுக்கும், கங்கா தேவிக்கும் நன்றியைக் கூறிவிட்டு, அன்றைய தினம் காவிரி துலா கட்டத்தில் நீராடி, தனது ஆவலைப் பூர்த்தி செய்து கொண்டாராம். அத்துடன் இல்லாது, கார்த்திகை முதல் நாள் யார் காவிரி ஸ்நானம் செய்தாலும் அது துலா மாதம் முழுவதும் ஸ்நானம் செய்த பலனை அளிக்கும் என்றும் கூறி அனுக்ரஹிக்கிறார். இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே கார்த்திகை முதல் நாள் “முடவன் முழுக்கு” என்ற பெயர் பெற்றது.

பொதுவாக கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய புண்ணிய நதிகளில் நீராடினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. ஏழு புண்ணிய நதிகளில், ஐப்பசி மாதத்தில் காவிரி நதியில் மட்டுமே, மற்ற நதிகள் எல்லாம் எழுந்தருளி ஒன்று கூடுகின்றன என்று கூறப்படுகிறது.
புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்ய சில விதிமுறைகள் உண்டு. அதாவது, பிரம்ம மூகூர்த்த வேளையில், நீரில் இறங்குவதற்கு முன் இரண்டு கைகளாலும் நீரினை விலக்கிக்கொள்ள வேண்டும். பிறகு சிறிது நீரை எடுத்து தலையில் மூன்று முறை தெளித்துக்கொள்ள வேண்டும். பிறகுதான் நதியில் இறங்க வேண்டும். இறங்கிய பின்பு இரண்டு கைகளையும் குவித்து, கிண்ணம் போல சேர்த்து வைத்துக்கொண்டு, அதில் தண்ணீரை எடுத்து, சூரிய பகவானைப் பார்த்து, சங்கல்பம் செய்து கொண்டு அர்க்யம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு மூன்று முறைகள் செய்து, பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும்.
Also Read : வீட்டில் செடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்! ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செடிகளுடனான உரையாடல்!
மருத் வ்ருதே! மஹாதேவி மஹாபாகே மநோஹரே
ஸ்ரீகாவேரி நமஸ்துப்யம் மம பாபம் வ்யபோஹய!
[பரமேஸ்வரனின் சிரஸில் இருர்ந்து பூமிக்கு வந்த மஹா பாக்யம் உடையவளே, பார்க்கப் பார்க்க தெவிட்டாத உருவம் கொண்டவளே, ஹே காவேரி! உன்னை நமஸ்கரிக்கிறேன், எனது பாபங்களைப் போக்கியருள்வாய்]
என்று பிரார்த்தனை செய்துகொண்டு பிறகு நீராட வேண்டும். புண்ணிய நீர் நிலைகளை எந்த நிலையிலும் அசுத்தம் செய்யாமல் இருக்க வேண்டும். ஐப்பசி மாதத்தில் எல்லோராலும் எல்லா நாட்களிலும் காவிரியில் நீராட செய்ய முடியாது. வாய்ப்பிருப்பவர்கள் கடைமுகம் அன்றாவது இந்த பொன்னி நதியில் நீராடுவோம். செய்த பாவங்களைத் தொலைத்து, புண்ணியம் சேர்த்துக் கொள்வோம்.

துலா உற்சவத்தின் முக்கிய விழாவான கடைமுகத் தீா்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வரும் 15 -ஆம் தேதி உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மயிலாடுதுறையில் இருக்கும் சைவ-வைஷ்ணவ ஆலயங்களில் உள்ள மூர்த்திகள் கடைமுகத்தன்று தீர்த்தவாரி செய்தருளுகிறார்கள்.
ஐப்பசி மாதத்தில் காவிரிக்கரையோரங்களில் உள்ள அனைத்துத் திருத்தலங்களும் போற்றப்படுகின்றன. அவற்றில் திருப்பராய்த்துறை, ஸ்ரீ ரங்கம், குணசீலம், திருச்சி முக்கொம்பு, திருவையாறு, திருவிடைமருதூர், கும்பகோணம், மாயூரம், தலைக்காவிரி, பவானி சங்கமேஸ்வரர் குறிப்பிடத்தக்கவை.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry