
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் என்ற பொறுப்பு எல்லையைத் தாண்டி, எல்லா அதிகாரமும் பெற்ற ஒரு சர்வாதிகாரி போல் தர்மேந்திர பிரதான் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கை திட்டத்தினையும் ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 1,252 கோடியை விடுவிப்போம் என்கிறார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என்ற பேதம் இல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள அனைவரும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம், மும்மொழி கல்வி திட்டத்தை ஏற்க மாட்டோம் என்ற முழக்கத்தோடு களத்தில் போராடும் நிலையினை அவர் உருவாக்கி இருக்கிறார். டெல்லியில் உள்ள அமைச்சர் அலுவலகம் முன்பு மாணவர்கள் கண்டனப் போராட்டத்தினை நடத்தி உள்ளார்கள்.
முந்தைய கல்வி அமைச்சர்களோடு ஒப்பிடுகையில், கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல், அரசியல் சட்ட அமைப்புகளுக்கு எதிராக, மாநில மக்களின் மொழிக் கொள்கைக்கு எதிராக தர்மேந்திர பிரதான் செயல்படுகிறார். ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோதே நாங்கள் இரு மொழி கொள்கையை மட்டுமே ஏற்றுக் கொண்டவர்கள். முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை கொண்டு வந்த இரு மொழிக் கொள்கைதான் அவருக்குப் பின்னர் வந்த அத்தனை முதலமைச்சர்களாலும் பின்பற்றப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய மொழிகளை பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். அவரவர்களுடைய தாய் மொழியைத்தான் அவர்கள் பேசுகிறார்கள், படிக்கிறார்கள். தேசிய அளவில், உலக அளவில் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருப்பதால் ஆங்கில மொழியைப் படிக்கிறார்கள்.
உலகின் பல நாடுகளில் ஆராய்ச்சிப் படிப்பு வரையில் தாய் மொழி வழிக் கல்வி போதிக்கப்படுகிறது. தாய்மொழி வழிக் கல்வியில் படித்தவர்கள் உலக அளவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரோ அமைப்பின் தலைவர்கள், அதில் பணியாற்றும் விஞ்ஞானிகள் பலர் தமிழ்நாட்டில், அரசு பள்ளியில், தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள் தான்.

நாடாளுமன்றத்தில் நாவன்மையுடன் விவாதங்களில் கலந்து கொண்டவர்கள் பலர் தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் தான். 140 கோடி இந்தியர்களுடைய பிரதிநிதியான பிரதமர் மோடி, வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம், இந்தி மொழியில் தான் பேசுகிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பல்வேறு விவாதங்களில் இந்தியில் தான் பேசி இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். இப்போது வளர்ந்துள்ள தொழில்நுட்ப உதவியால் தாய் மொழியான தமிழிலும் பேசி வருகிறார்கள்.
எந்த மொழியைப் படிக்க வேண்டும் என்று முதலில் மாநிலங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இது கொள்கை வழி சார்ந்த முடிவாகும். தன் குழந்தைகளை எந்த மொழியில் படிக்க வைக்க வேண்டும் என்ற உரிமை பெற்றோர்களுக்குத் தான் இருக்கிறது.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில், ’52 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். 56 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். தனியார் பள்ளிகளில் படிக்கும் 30 லட்சம் மாணவர்கள் மும்மொழி கொள்கையை படிக்கிறார்கள். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் மட்டும் மும்மொழிக் கொள்கை படிக்க எது தடையாக உள்ளது?’ என்று கேள்வி கேட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த 56 ஆயிரம் பள்ளிகளில், சுயநிதி தனியார் பள்ளிகள் 16,490 தான். இதில் 1235 சிபிஎஸ்இ சுயநிதி தனியார் பள்ளிகளில் மட்டும்தான் இந்தி கற்பிக்கப்படுகிறது. அதாவது 3.16 சதவீதம் பேர் தான் இந்தி படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் மாணவர்கள்தான் இந்தி படிக்கிறார்கள். தமிழ்நாடு சமச்சீர் கல்விமுறையினை நடைமுறைப்படுத்தி வருகிறது. அறிக்கைகள் வேறு, யதார்த்தம் என்பது வேறு.
தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களிடம் ஏன் இந்தி படிக்கிறாய்? என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் மும்மொழித் திட்டம் என்ற பெயரால் இந்தியை திணிக்க முற்படுவதைதான் தமிழ்நாடு மொழிப்போர் தியாகிகளின் அடிச்சுவட்டில் நின்று கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.
43 லட்சம் மாணவர்களின் கல்விக்கான நிதியினை தேசிய கல்விக் கொள்கை, மும்மொழித்திட்டம் மற்றும் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தினை ஏற்றுக் கொண்டால்தான் ஒதுக்கீடு செய்துதர முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் சொல்வது சர்வாதிகார போக்கு. தமிழ்நாட்டில் தேர்தல் வருகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி நலனுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுப்பீர்களேயானால், உங்களுக்கு எதிரான மனக் குமுறல்கள் வாக்குச்சாவடியில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தம்மை சுயபரிசோதனை செய்து கொண்டு தனது கருத்தினை திரும்பப் பெற வேண்டும்.

ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனை காப்பாற்றுவதற்காக, இரு மொழி கொள்கையினை காப்பதற்காக, தேசிய கல்விக் கொள்கையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் அலுவலகத்திற்கு முன்பு விரைவில் மிகப்பெரிய போராட்டத்தினை நடத்துவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒட்டுமொத்த GDPஇல் 6% நிதியினை கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்று புகழ்பெற்ற கோத்தாரி கல்வி குழு வலியுறுத்தி இருந்தது. ஆனால் மத்திய அரசு 4% சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே நிதியினை ஒதுக்கி வருகிறது. கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியினை 6% சதவீதமாக உயர்த்த வேண்டுகிறோம். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதி ₹2152 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவித்திட வேண்டுமென்று ஐபெட்டோ அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அடுத்த பதிவில் பீகார், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் மொழி உணர்வினையும், கல்வித் தரத்தினையும் விரிவான பதிவாக வெளியிட உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். “ அறிக்கையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry