இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில், வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வரும் மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்பத்தை ட்ரூகாலர் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
ஆன்லைன் வழியே தங்கள் கைவரிசையை காட்டும் மோசடி பேர்வழிகள், குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு மற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளத்தின் ஊடாகவும் பயனர்களை அணுகுகின்றனர். அண்மை காலமாக வாட்ஸ்அப் வழியே தொடர்பு கொண்டு மோசடி செய்வது அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் வாட்ஸ்அப் மெசேஞ்சரை மாதந்தோறும் 50 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் ஆக்டிவாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் வாட்ஸ்அப்பில் அதிகரித்து வரும் மோசடி செயல்களை தடுக்கும் நோக்கத்தில் மெட்டா நிறுவனத்துடன் ட்ரூகாலர் இணைந்துள்ளது. இதன் மூலம் ஸ்பேம் அழைப்பு மற்றும் மெசேஜை பயனர்கள் எளிதில் அடையாளம் கண்டு பிளாக் (Block) செய்யலாம்.
இப்போதைக்கு இது பீட்டா பயனர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் உலகம் முழுவதும் இது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனை ட்ரூகாலர் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் மாமெதி உறுதி செய்துள்ளார். ஒவ்வொரு இந்தியரும் டெலிமார்க்கெட்டிங் மற்றும் மோசடி சார்ந்து மாதத்திற்கு சராசரியாக 17 அழைப்புகளை பெற்று வருவதாக, கடந்த 2021-ல் வெளியான அறிக்கையை மேற்கோள் காட்டி அவர் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப்பில் தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகள், மிஸ்டு கால் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை பயனர்கள் பெற்றிருக்கலாம். பெரும்பாலும் இது பிற நாடுகளின் Country Code-ஐ கொண்டிருக்கும். சிலர் அதை வாட்ஸ்அப்பில் அப்படியே பிளாக் செய்வர். சிலர் அது குறித்து வாட்ஸ் அப்பில் ரிப்போர்ட் செய்வர். இந்த சூழலில் அது யார் என்பதை அடையாளம் காண உதவுகிறது ட்ரூகாலர்.
வாட்ஸ்அப்பில் தொல்லை தரும் அழைப்புகளை ட்ரூகாலர் மூலம் அடையாளம் காண்பது எப்படி?
* பயனர்கள் தங்கள் போனில் கூகுள் பிளே ஸ்டோரில் ட்ரூகாலரின் பீட்டா புரோகிராமில் இணைய வேண்டும்.
* பின்னர் பீட்டா அப்டேட்டை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
* தொடர்ந்து ட்ரூகாலரை ஓப்பன் செய்ய வேண்டும். அதில் செட்டிங்ஸ் > காலர் ஐடி > வாட்ஸ்அப் மற்றும் இதர மெசேஞ்சர்களில் தெரியாத எண்களை அடையாளம் காணும் வகையில் ‘Toggle’-ஐ ஆன் செய்ய வேண்டும்.
Recommended Video
லோன் ஆப்பில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? வழிகாட்டும் சைபர் சட்ட நிபுணர்! Advocate Karthikeyan
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry