2 ஆண்டுகளாக பள்ளிகள் தரம் உயர்த்தப்படவில்லை! கல்வி மறுமலர்ச்சி தடைபடுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

0
49
FILE IMAGE

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில், “தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் திட்டத்தின்படி, கடந்த இரு ஆண்டுகளாக ஓர் அரசுப் பள்ளி கூட தரம் உயர்த்தப்படவில்லை. நடப்பாண்டிற்கான மானியக் கோரிக்கையிலும் இதுகுறித்து அறிவிக்கப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழகத்தில் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துவதில், பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டம் முதன்மையான பங்காற்றுகிறது. 100 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டால், அவற்றின் பயன்கள் அத்துடன் நின்றுவிடுவதில்லை. தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலைப் பள்ளிகளை ஈடுசெய்ய 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக்கப்படும். அதே எண்ணிக்கையில் தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக்கப்படும். நிறைவாக, 100 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும். அதன்மூலம் கல்விக் கட்டமைப்பு விரிவாக்கப்படும்.

Also Read : தமிழ்நாட்டை பல வெப்ப அலைகள் தாக்கும் ஆபத்து! ஒவ்வொரு முறையும் ஒரு வாரம் வரை நீடிக்கலாம் என வானிலை மையம் எச்சரிக்கை!

பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நிலையிலும் 100 பள்ளிகள் புதிதாக உருவாக்கப்படும். அவற்றுக்காக புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இது கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகப் பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டிருந்தால், கடந்த இரு ஆண்டுகளில் பலநூறு புதிய பள்ளிகள் உருவாக்கப்பட்டிருக்கும். அது கிராமப் பகுதிகளில் கல்வி வளர வகை செய்திருக்கும். இத்தகைய சிறப்புமிக்கத் திட்டத்தை கைவிட்டு விடக்கூடாது.

பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவது பற்றிய புதிய அறிவிப்புகள் வராதது ஒருபுறம் இருக்க, 2020-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 165 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் திட்டம் மூன்று ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படவில்லை. எனவே, ஒவ்வொரு நிலையிலும் குறைந்தது 200 பள்ளிகளையாவது தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 165 பள்ளிகளையும் தரம் உயர்த்த வேண்டும்” இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதனிடையே, 2023 – 2024ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித் துறையின் நாட்காட்டியை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று சென்னையில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ், ” கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும். 2024 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் 18 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் மாதம் 19 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதியும் தொடங்கும்”. இவ்வாறு அவர் கூறினார்.

Recommended Video

கல்வி அமைச்சர் எந்தெந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளார்? JACTO-GEO Protest | AIFETO Annamalai

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry