ரெட் கார்டு நீக்கப்பட்டிருப்பதற்கு நடிகர் வடிவேலு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தனக்கு மறுபிறவி என்றும் அவர் கூறியிருக்கிறார்.
8 ஆண்டுகளாகவே வடிவேலு சினிமாவில் ஆக்டிவாக நடிக்கவில்லை. இதனிடையில் இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படப்பிடிப்பின்போது சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தனக்கு ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஷங்கர் தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் காரணமாக வடிவேலு புதிய படங்களில் நடிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார். தற்போது இந்த பிரச்சினையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டுள்ளதால் ரெட் கார்டு நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வடிவேலு, “மீண்டும் சினிமாவில் தோன்றப்போவது, முதன் முதலில் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு போல் இருக்கிறது. என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள். ஒவ்வொரு குடும்பமும் எனக்கு ரசிகர் மன்றம்தான். நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறுபிறவியாகும்.
என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன். ஐந்து படங்களில் என்னை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். என்னை மீண்டும் திரைக்கு கொண்டுவந்ததன் மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார். நல்ல நேரம் பொறந்தாச்சு. இந்த சந்தோஷத்தில் எனக்கு 20 வயது குறைந்துவிட்டது. சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர்‘ படத்தில் அடுத்த மாதம் முதல் நடிக்க உள்ளேன். 2 படங்கள் கதாநாயகனாக நடித்து விட்டு, பின்னர் காமெடியனாகவும் நடிக்க உள்ளேன்” என வடிவேலு தெரிவித்துள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry