3.20 Mins Read : சிலருடைய வீட்டில் பூஜையறை தனியாக இருக்கும். சில வீடுகளில் சுவருடன் சேர்ந்தார்போல் இருக்கும் அலமாரியே பூஜை அறையாக இருக்கும். பூஜை அறையில் நாம் தினமும் பூஜை செய்வதன் மூலம், நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன், அமைதியும், மகிழ்ச்சியும் தருவதாக அமையும். பூஜை அறை எப்படி அமைய வேண்டும், பூஜை பொருட்களை எப்படி கையாள வேண்டும் என்பதை அறிவதும் முக்கியமாகும்.
பூஜையறை பொருட்களை எப்போது சுத்தம் செய்ய வேண்டும்? பூஜையறை எப்படி இருக்க வேண்டும்? என்பதைத் தெரிந்துகொள்ளும் அதேநேரம், நம்முடைய வீடுகளிலுள்ள பூஜையறைகளை வாஸ்து சாஸ்திரப்படி அமைத்தால்தான், குடும்பத்தில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் தழைக்கும். தனி வீடாக இருந்தாலும் சரி, அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்தாலும் சரி, வீட்டில் பூஜை அறையை ஈசான்ய மூலையில் (வட கிழக்கே), கிழக்கு நோக்கி சுவாமிப் படங்கள் இருப்பதைப் போன்று அமைக்க வேண்டும்.
இந்தத் திசையில்தான் பிராணவாயு அதிகமாகக் கிடைக்கும் என்கிறது அறிவியல். ஈசான்ய மூலையில் பூஜையறை அமையாமல் போனால், வடமேற்கே பூஜை அறையை அமைக்கலாம். பூஜை அறையில் இருக்கும் தீபமானது கிழக்கு நோக்கி பிரகாசிக்க வேண்டும். ஆனால் பூஜையறைக்கு பக்கத்திலேயே குளியலறை, கழிவறை இருக்கக்கூடாது. அப்படிச் செய்வது தெய்வ சாந்நித்யத்தைக் குறைத்துவிடும்.
பூஜையறையிலும், பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்களிலும்கூட, சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள். குறிப்பாக, பூஜையறையில் உள்ள சுவாமி படங்கள், வடக்கு திசை அல்லது கிழக்கு திசை நோக்கியே இருக்க வேண்டும். ஈசான்ய மூலையில் பூஜையறை இருக்கும்போது, வீசும் காற்றில் சாம்பிராணி, ஊதுவத்தியின் மணம் வீடு முழுவதும் பரவி, தெய்வகடாட்சம் பிரகாசிக்கும்.
பூஜை பொருட்கள் அனைத்தையும் பூஜை அறையிலேயே வைத்துவிட வேண்டும். பூஜை நடைபெறாத நேரத்தில், பூஜையறையை ஸ்கிரீன் துணியால் மறைத்துவிட வேண்டும். பூஜையறையில் அறையில் கிழிந்த புத்தகங்கள், உபயோகமில்லாத, பழைய பொருட்கள் போட்டு வைத்திருக்கக்கூடாது. தேவையற்ற பொருட்களை போட்டு பூஜை அறையை ஸ்டோர் ரூம் போல ஆக்கிவிடக் கூடாது. பூஜை அறையை மாலை நேரங்களில் இருட்டாக வைக்கக்கூடாது. காலையில் சூரியன் உதயமாகும் நேரத்திலும், மாலையில் அஸ்தமிக்கும் வேளையிலும் நல்லெண்ணெய் விளக்கேற்ற வேண்டும். பூஜை அறையின் கதவு மற்றும் ஜன்னல்கள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி திறக்கப்பட வேண்டும்.
அரிசியை பூஜையறையில் வைக்கும்போது, உடைந்த அரிசியாக வைக்கக்கூடாது, முழு அரிசியை வைக்க வேண்டும். பூஜை அறையில் குலதெய்வ படம் நிச்சயம் இருக்க வேண்டும். சிலர், சில குறிப்பிட்ட சுவாமிப் படங்களை வைத்து வழிபடக் கூடாது என்று கூறுவார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. புனிதமான இடத்தில் அனைத்து வகையான தெய்வங்களின் படங்களையும் வைத்து வழிபடலாம். எந்த இஷ்ட தெய்வத்தையும் பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.
இறந்த முன்னோர்களின் போட்டோக்களை பூஜையறையில் வைக்கக்கூடாது. உடைந்த சிலைகள் இருந்தாலும், அதை வீட்டு பூஜை அறையில் வைக்கக்கூடாது. பூஜை அறையில் இருக்கும் விக்கிரகமானது குடும்பத் தலைவரின் கட்டை விரல் அளவுக்குத்தான் இருக்க வேண்டும். அதைவிடப் பெரிய சிலைகளை வீட்டில் வைத்து பூஜை செய்வது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஆகாது. ஏனெனில், அந்த விக்கிரகத்தின் சக்தியை குடும்பத்தில் வசிப்பவர்களால் தாங்க முடியாது.
பூஜையறை பொருட்களை எப்போது சுத்தம் செய்ய வேண்டும்? எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. பூஜை செய்கிற நாள் அன்று எந்தக் காரணத்தை கொண்டும் பூஜை பொருட்களை சுத்தம் செய்யக்கூடாது. வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமையில் சுத்தம் செய்தால், வீட்டிலுள்ள அதிர்ஷ்டம் வெளியேறிவிடும் என்பார்கள்.
அதனால், பூஜை செய்ய வேண்டிய தேவை இருக்கும்போது, அதற்கு ஒரு நாள் முன்பே, சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். சூரியன் மறைவதற்கு முன்பே சுத்தம் செய்து விட வேண்டும். ஆனால், பூஜைப்பொருட்களில் எந்தக் காரணம் கொண்டும் பச்சை நிறத்தை படிய விடக்கூடாது. இது குடும்பத்திற்கு கஷ்டத்தையும், தரித்திரத்தையும் அதிகரித்துவிடும். பூஜை அறையில் ஏற்றப்படும் அகல் விளக்கு மற்றும் ஊதுவத்திகள் பூஜை செய்யும் நபரின் வலது பக்கமாக இருக்க வேண்டும்.
பூஜைப் பொருட்களை கை தவறி கீழே போட்டுவிடாமல் ஜாக்கிரதையாக கவனமாக கையாள வேண்டும். பூஜை பொருட்களை சுத்தம் செய்ததுமே, மஞ்சள், குங்குமம் இட்டு வைக்கக்கூடாது. அதேபோல, விளக்கில் எண்ணெய் ஊற்றி வெகு நேரம் காத்திருக்கவும் கூடாது. பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு முன்பு, அவைகளிலுள்ள எண்ணெய் பிசுக்குகளை ஒரு துணி வைத்து துடைத்துவிட வேண்டும். பிறகு, ஒரு அகலமான பாத்திரத்தில் பூஜை பொருட்களை போட்டு, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, சிறிது புளியையும் அதில் கரைத்துவிட வேண்டும். அதற்கு பிறகு பாத்திரங்களை தேய்ப்பது எளிதாகும்.
இதில், பித்தளை விளக்குகளை மட்டும் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். வெள்ளி விளக்காக இருந்தாலும், தங்க விளக்காக இருந்தாலும் சுத்தமாக துடைத்துவிட வேண்டும். முதல்நாள் எரிந்த திரியை பயன்படுத்தக்கூடாது. புதுத் திரியைப் பயன்படுத்தியே விளக்கேற்ற வேண்டும். எண்ணெய் ஊற்றிய பிறகு தான் திரியை போட வேண்டும். திரியை போட்டு வைத்துவிட்டு பின்னர் எண்ணெய் ஊற்றக் கூடாது.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் இரும்புப் பொருள்களை பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது. இரும்பு யமனுக்கு உரியது. இரும்பினால் நேர்மறை சக்திகளை கிரகிக்க முடியாது. வெள்ளி, தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, மண்ணால் ஆன பூஜைப் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு நாள் பூஜையின்போதும் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜை செய்ய வேண்டும். அடுத்த நாள் அதைக் கூரையில் ஊற்றிவிட வேண்டும்.
இப்படிச் செய்வதால் துர்சக்திகள் நம் வீட்டை அண்டாது. பூஜையின்போது மணியோசை எழுப்புவதும்கூட துர்சக்திகள் நெருங்காமல் இருப்பதற்குத்தான். மணியின் இனிய ஓசையானது தீய சக்திகளை விரட்டி, தெய்விக சக்தியை வீட்டில் நிலவச் செய்யும் வல்லமை கொண்டது. தினமும் மணியோசை எழுப்பி பூஜை செய்பவர்களின் வீடுகளில் தெய்வ கடாட்சம் நிரம்பி, ஆரோக்கியமும் சகல சௌபாக்கியங்களும் பெருகும்.
கிரீம் நிறம் பூஜை அறைக்கு ஏற்ற வண்ணம். வெளிர் நீலம், வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் போன்ற நிறங்கள் அமைதியான மற்றும் தியான சூழலை உருவாக்குகின்றன. வடகிழக்கு திசையில் உள்ள பூஜை அறைக்கு, வெள்ளை சிறந்த நிறம். ஒளி வண்ணங்கள் நேர்மறை அதிர்வுகளை வெளிப்படுத்துவதால் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். குடியிருப்பது சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி, குடியிருக்கும் வீட்டையே கோயிலாக நினைத்து, நாம் ஒவ்வொருவரும் வசதிக்கேற்ப பூஜை அறையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
வாஸ்துப்படி வீடானது கிழக்கு தாழ்ந்து, தெற்கும், மேற்கும் உயர்ந்து இருக்க வேண்டும். அறிவியல் பூர்வமாக நம் ஊரில் காற்றோட்டத் திசையானது கிழக்கு மற்றும் வடக்கிலிருந்தே வீசும். அதனால், காற்று கிழக்கு மற்றும் வடக்கிலிருந்து வீட்டுக்குள் நுழைந்து, தெற்கு மற்றும் மேற்கு வழியே வெளியேற வேண்டும். இந்தக் காற்றோட்டத் திசை மாறினால் வீட்டில் வசிப்பவர்களுக்கு நோய் ஏற்படும். இந்தக் காற்றோட்டத்துக்குத் தகுந்த மாதிரிதான் வீடுகளின் அமைப்பு இருக்க வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry