
கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் NLC நிறுவனத்தால் இயக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையங்கள் மற்றும் சுரங்கங்களை ஒட்டிய பகுதிகளில் உள்ள நீர்நிலை, மண், நிலத்தடி நீர் மாதிரிகளை சோதனைக்குட்படுத்தி அதன் முடிவை தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கியுள்ளது.
மனித ஆரோக்கியத்திற்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடிய பாதரசமானது, அனுமதிக்கப்பட்ட அளவை விட நீர்நிலைகளில் 115 மடங்கு அதிகமாகவும், நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 62 மடங்கு அதிகமாகவும் இருப்பது அந்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

2023ம் ஆண்டு நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில், பூவுலகின் நண்பர்கள் சார்பாக சுற்றுச்சூழல் மாசு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக நெய்வேலி மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள குடிநீர், நிலத்தடி நீர், நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த மையங்களில் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிக்கையாக வெளியிடப்பட்டன.
வடக்கு வெள்ளூர், தொல்காப்பியர் நகரில் இருக்கும் குடிநீர் தொட்டிகளில் உள்ள நீரில், கன உலோகமான பாதரசம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சுமார் 250 மடங்கு அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது. பிற சுற்றுவட்டாரப் பகுதிகளில், மக்கள் பயன்படுத்தும் நீரில் நிக்கல், காட்மியம், ஜிங்க், போரான், செலினியம் போன்ற கன உலோகங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதும் தெரியவந்தது.

ஊடகங்களில் வெளியான இந்த ஆய்வறிக்கையின் கூறுகளை அடிப்படையாகக் கொண்ட செய்திகளை வைத்து, தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் பூவுலகின் நண்பர்கள் சார்பில் இடையீட்டு மனுதாரராக சுற்றுச்சூழல் பொறியாளர் பிரபாகரன் வீரஅரசு தாக்கல் செய்த மனுவும் ஏற்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை 16.04.2025 அன்று நடைபெற்றது. பூவுலகின் நண்பர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் ஆஜராகி, நெய்வேலி சுற்றுவட்டாரத்தில்கன உலோக மாசுபாடு குறித்தும், அது ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் வாதங்களை முன்வைத்தனர். இந்த வழக்கு இறுதி விசாரனைக்காக 12.06.2025க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பூவுலகின் நண்பர்கள் ஆய்வில் கூறப்பட்ட அளவிற்கு கன உலோக மாசுபாடு இல்லை என்று மறுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்கள் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால், நெய்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 17.12.2024 அன்று சேகரிக்கப்பட்ட நீர் மற்றும் மண் மாதிரிகளில், அபாயகரமான அளவில் பாதரசம், நிக்கல், லெட், காட்மியம் உள்ளிட்ட கன உலோகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மாதிரிகளில் செலினியம் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. ஆனால், நெய்வேலி பகுதிகளில் செலினியம் அதிகமிருப்பது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் மூலம் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டது.


தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு மேற்கொண்ட 17 நீர்நிலைகளில், 15 இடங்களில், பாதுகாப்பான அளவுகளை விட பாதரசம் அதிகமாக (0.0012 mg/l to 0.115 mg/l) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாகப் பக்கிங்காம் கால்வாயில் பாதுகாப்பான அளவை விட 115 மடங்கு பாதரசம் அதிகமாக இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த நீர்நிலைகளில் பாதரசம் மிக அதிகமாக இருந்தும், இவை IS 2296 Class E என வகைப்படுத்தப்பட்டு உள்ளதால், அதாவது குடிக்கவோ நீர்ப்பாசனத்திற்கோ தகுதியில்லாத நீர்நிலை என்பதால், பாதரசத்தின் அபாயகர அளவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மக்கள் பயன்பாட்டில் உள்ள வளையமாதேவி கூட்டுக் குடிநீர் திட்டம், பரவனாறு, வாலஜா ஏரி, அய்யன் ஏரி ஆகிய நீர்நிலைகளை எப்படி குடிநீர் ஆதாரமாகக் கருதாமல் இருக்க முடியும்? இயற்கையாக ஒரு நீர்நிலையில் பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்கள் தோன்றாது என்கிற நிலையில், இந்த நீர்நிலைகளில் எப்படி கன உலோகங்கள் கண்டறியப்பட்டுள்ளன?

இவை மாசடைந்த நீர்நிலைகள் என்றால் மாசுபாட்டிற்கு யார் காரணம்? இந்த நீர்லைகளில் நீர் அருந்தும் கால்நடைகளுக்கும், நீர்நிலைகளில் உள்ள மீன்களுக்கும் பாதரசத்தால் பாதிப்பு ஏற்படாதா? என்கிற கேள்விகளுக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் பதிலளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சோதனைக்கு உட்படுத்திய 9 நிலத்தடி நீர் மாதிரிகளில், 6 இடங்களில் பாதரசம் இருப்பது தெரிய வந்துள்ளது. பாதரசத்தின் அனுமதிக்கப்பட்ட அளவானது 0.001 mg/l என்கிற நிலையில் 6 இடங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில் பாதரசம் 0.0025 mg/l முதல் 0.0626 mg/l வரை கண்டறியப்பட்டுள்ளது. இது அனுமதிக்கப்பட்டதைவிட 2.5 முதல் 62 மடங்கு அதிகம். குறிப்பாக வானதிராயபுரம் பகுதியில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரியில் பாதரசம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 62 மடங்கு இருப்பது தெரியவந்துள்ளது.
அப்பகுதி மக்கள் அனைவரும் இந்த நிலத்தடி நீரைத்தான் நீண்ட காலமாக குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வளவு அபாயகரமான அளவுகளில் பாதரசம் கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவக் குழுவை நியமித்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &
  Tamilnadu  &  Pondicherry
  Pondicherry
