170-ஐ நெருங்குகிறது வயநாடு நிலச்சரிவு பலி! மனிதத் தவறே காரணம் என பூவுலகின் நண்பர்கள் தெளிவான விளக்கம்! வயநாடு செல்வதைத் தவிர்க்கும் ராகுல்காந்தி!

0
92
Kerala Wayanad landslides: Hundreds more are feared trapped as multiple agencies and the Army race against time to save as many lives as possible. | Photo Credit: PTI

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது. வயநாடு மாவட்டத்தின் வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டக்கை மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் ஜூலை 29ஆம் தேதி நள்ளிரவு மற்றும் 30ஆம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இப்பகுதிகளில் மட்டும் கடந்த 4 நாட்களில் 70 சென்டி மீட்டர் வரை மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

பலத்த மழை காரணமாக, மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலையை ஒட்டிய பகுதிகளில் வெள்ளநீர் பாய்ந்ததால் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கிருந்த வீடுகளை மூடியது. டன் கணக்கிலான மண் சேறும் சகதியுமாக மூடியதில், அந்த வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. நிலச்சரிவு மற்றும் சாலியார் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 163 பேர் உயிரிழந்தனர். சூரல்மலாவில் உள்ள ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் முண்டக்கையில் சிக்கியிருக்கும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Getty Images

பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்த இயற்கை பேரிடர் பாதிப்பை அடுத்து, 2வது நாளாக இன்றும் (புதன்கிழமை) மீட்புப் பணிகளில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வளவு பெரிய துயரம் ஏற்பட்டுள்ள நிலையில், இரண்டு முறை எம்.பி.யாக தேர்வு செய்த வயநாடு மக்களை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திர வராதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வானிலையை காரணம்காட்டி அதிகாரிகள் தங்களை வரவேண்டாம் என சொன்னதாக எக்ஸ் பதிவில் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இந்தத் துயர சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள சூழலியல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள், “இத்துயர நிகழ்வை இயற்கைப் பேரிடர் என்று இயற்கையின்மீது மட்டும் பழிபோட்டு நாம் எளிதில் கடந்துவிட முடியாது. காட்டுத் தீ, பெரும் புயல்கள், அதிதீவிர மழை, அதீத வெப்பம், பனிப்பாறை உருகுவது, கடல்மட்டம் உயர்வது, கொள்ளை நோய்கள் என இந்நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு இயற்கை சீற்றத்திற்கும் மனித செயல்பாடுகளே அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது. அப்படியொரு மனிதர்களே தங்கள் செயல்பாடுகளால் வரவழைத்துக்கொண்ட நிலச்சரிவுதான் இதுவும்.

வயநாடு மாவட்டத்தில் வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் இப்படி ஒரு விபத்து நடக்கும் என்பதை பலரும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தனர். கேரளாவின் பிற பகுதிகளைப்போல வயநாட்டிலும் 6 வகையான மழைப்பொழிவு நிலவிவந்தது. பிப்ரவரி மாதம் பெய்யும் கோடை மழை கும்ப மழை என்றும், ஏப்ரலில் பெய்யும் குறைவான மழை மேட அல்லது விஷ்ணு மழை என்றும் அழைக்கப்படுகிறது. மே-ஜூனில் தென்மேற்குப் பருவமழை தொடங்குகிறது. ஆகஸ்டில் பெய்யும் அதிக மழை மிதுன மழை என்றும், செப்டம்பரில் வெயிலுடன் அவ்வப்போது பெய்யும் லேசான மழை சிங்க மழை என்றும், அக்டோபரில் இடியுடன் பெய்யும் பெருமழை துலா மழை என்றும் அழைக்கப்படுகிறது.

ஆனால், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இந்த நடைமுறை பெரியளவில் மாறியுள்ளதை பல்வேறு ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளதாக Flood and Fury எனும் புத்தகத்தை எழுதிய விஜூ கூறுகிறார். மேலும் Climate Trends in Wayanad: Voices from the Community’ எனும் ஆய்வானது வயநாட்டில் மிதமான அளவில் மழைபொழியும் நாட்களின் எண்ணிக்கை குறைந்தும், அதிகமான அளவில் மழைபொழியும் நாட்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கூறுகிறது. மேலும் இந்த ஆய்வு பெருமழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கூறுகிறது. குறைவான நேரம் அல்லது குறைவான நாட்களில் அதிகப்படியான மழை பெய்யும் நிகழ்வுகள் இந்தியா முழுக்க அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

ஜூன் 2018ல் கோழிக்கோடு, கன்னூர், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் அங்கு ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் நிலச்சரிவு ஏற்பட பெருமழை ஒரு காரணம் என்றாலும், பல இடங்களில் அறிவியல்பூர்வமற்ற வகையில் மலைச்சரிவுகளில் ஏற்படுத்தப்பட்ட கட்டிடங்களும் நிலச்சரிவுக்கு முக்கியக் காரணம் எனக் கண்டறிந்தது.

Relief personnel lift the body of a deceased, during a search and rescue operation after landslides in Wayanad on July 31, 2024. Landslides in the southern state of Kerala, Wayanad district. (Photo by Idrees MOHAMMED / AFP) (Photo by IDREES MOHAMMED/AFP via Getty Images)

மேலும் ஒட்டுமொத்த வயநாடு மற்றும் குறிப்பாக தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட வைத்திரி தாலுகாவில் கடந்த 20 ஆண்டுகளில் நிலப்பயன்பாடு அதிகளவில் மாற்றமடைந்துள்ளது. குறிப்பாக இயற்கையாக அமைந்த மலைச்சரிவுகள் மற்றும் மலைமுகடுகளைத் தோண்டி, பிளந்து கட்டிடங்களை எழுப்பி அப்பகுதியின் நில அமைப்பியலே மாற்றப்பட்டுவிட்டது. பெரும் அளவில் மரங்கள் வெட்டப்பட்டதன் விளைவாக மணலை இறுகப்பிடிக்கும் வேர்கள் இல்லாததன் காரணமாக, ‘நிலச்சரிவை தாங்கும்’ (Immunity towards landslide) திறனை மண் இழந்திருக்கிறது. இத்தன்மையை இழந்த நிலப்பரப்பில் அதிதீவிர மழைப்பொழிவு மணல் அரிப்பையும், இவ்வாறான மணல் சரிவையும் அடிக்கடி ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

வயநாட்டில் அதிக நிலச்சரிவைச் சந்தித்த இடமாக உள்ளது வைத்திரி தாலுகா. Hume Centre for Ecology and wildlife Biology மேற்கொண்ட ஆய்வின்படி வயநாட்டின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 90 விழுக்காடு நிலச்சரிவுகள், மலைச்சரிவு 30 டிகிரியாக இருந்த இடங்களில் நிகழ்ந்துள்ளதாகக் கூறுகிறது. மலைகளை வெட்டி, பிளந்து, தோண்டி அதன் இயற்கையான அமைப்பையே மாற்றியதால் அதிக அளவு மழையைத் தாக்குப் பிடிக்காமல் நிலச்சரிவு ஏற்படுகிறது. தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட அன்று 24 மணிநேரத்தில் வைத்திரி தாலுகாவில் மட்டும் 28 செண்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட மேப்பாடி, முண்டக்கை மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வைத்திரி தாலுகா முழுவதும் மாதவ் காட்கிலின் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான WGEEP அறிக்கையில், சூழல் கூருணர்வு மிக்க மண்டலம் 1 (ESZ 1) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ESZ 1 என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் காடுகளை, காடு பாதுகாப்பு சாராத திட்டங்களுக்காகவும், வேளாண் நிலத்தை வேளாண்மை அல்லாத பிற தேவைக்காகவும் நிலப்பயன்பாடு மாற்றம் செய்ய முடியாது. ஆனால், இந்த அறிக்கையினையும், அதன் பின்னர் வந்த கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கையினையும் கேரள அரசு இன்று வரை ஏற்றுக் கொள்ளவில்லை.

தொடர்ச்சியாக நிலப்பயன்பாடு மாற்றம், வரைமுறையற்ற கட்டுமானங்கள் காடழிப்பு, காலநிலை மாற்றத்தின் தீவிரத்தால் அதிகரிக்கும் மழைப்பொழிவு ஆகியவையே இப்பேரழிவுக்குக் காரணம். நிலம் வலுவிழப்பதைக் காடழிப்புடனும், நிலச்சரிவைப் பெருமழையுடனும், பெருமழையைக் காலநிலை மாற்றத்துடனும் தொடர்புபடுத்திப் பார்க்க நாம் தவறினால் இப்பேரழிவுகளைத் தடுக்க முடியாது. தமிழ்நாடு அரசு இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஊட்டி, கொடைக்கானல், கோத்தகிரி, குன்னூர், வால்பாறை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry