
சாது என அழைக்கப்படுவர்களுக்கே ஏதாவது ஒரு சூழ்நிலையில் கோபம் வரும் போது, சாதாரண மனிதர் கோபப்படாமல் இருப்பது கடினம்தான். சுயமரியாதை, சுய கொள்கைகளே கோபம் வர முக்கிய காரணமாகிறது. சிலருக்கு இருக்கின்ற பொறுமையில்லாத சுபாவமும், சூழ்நிலைகளும், அறச் சீற்றமும் கோபத்தை வரவழைக்கும் காரணிகளாக இருக்கலாம்.
இயலாமை தான் கோபத்திற்குக் காரணம் என்றும் சொல்வார்கள். ஒருவர் அவருடைய வாழ்க்கையில் சந்திக்கும் ஏமாற்றங்கள், அவமானம், தோல்விகள், எதிர்பார்த்தது கிடைக்காமல் ஏற்படக்கூடிய அலைக்கழிப்புகள் கோபப்பட வைக்கிறது. மேலும், மன அழுத்தம், வேலை அழுத்தம், பொருளாதார அழுத்தம் என பலர் பல பிரச்சனைகளை சந்திக்கும்போது மனம் அமைதியிழந்து கோபம் மேலோங்குகிறது.
Also Read : வேகமாக ஆனா ஆரோக்கியமா உடல் எடையை குறைக்கனுமா..? இப்படி காபி போட்டு குடிங்க!
சிறிய விஷயங்களுக்குக் கூட எரிச்சலடைவது என்பது மக்களிடையே இயல்பாகிவிட்டது. இந்த எரிச்சல் சில நேரங்களில் தீவிர கோபம் மற்றும் அடிக்கடி கோபம் அடைவதற்கு வழிவகை செய்கிறது. கோபம் என்பது அனிச்சையாக நடைபெறும் ஒரு பழக்கம். சூடான பாத்திரத்தை தொட்டவுடன் கை அனிச்சையாக பின்செல்வதுபோல், ஒரு நிகழ்வு நடந்ததும் யோசிக்காமல் அனிச்சையாகக் கோபப்பட்டு பலரும் பழகியிருக்கிறோம்.
கோபமும் சில நேரங்களில் தேவைப்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது. ஒருவரின் உரிமைகளை நிலை நாட்ட, போராட, தற்காத்துக்கொள்ள அல்லது நீதிக்கு மாறான செயல்களுக்கு தனது மறுப்பைக் காட்ட கோபம் தேவைப்படலாம். அதே சமயத்தில் கோபத்தை வெளிப்படுத்தும் முறையில் ஒரு கட்டுப்பாடு இருந்தால், அது கோபத்துக்கு ஆளானவருக்கும், கோபம் கொண்டவருக்கும் பெரிய பாதிப்பை உண்டாக்காமல் இருக்கும்.

ஜர்னல் ஆஃப் மெடிசின் அண்ட் லைஃப் படி, கோபம் பெரும்பாலும் பதற்றம், மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கும். நாள்பட்ட கோபமானது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கும். மேலும், அமில பாதிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி செரிமானத்தில் சிக்கலை உண்டாக்கி செரிமானப் பிரச்சினைகளை மோசமாக்கும். தொடர்ந்து கோபப்படுவது உடலின் நோயை எதிர்த்துப் போராடும் திறனைக் குறைக்கும்.
மனசுக்குள் கோபத்தை அடக்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு மன நலம் பாதிக்கும் சூழல் அதிகம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக கோபம் கவலையை அதிகரிக்கும். தலைவலி, அதிக ரத்த அழுத்தம் (BP) போன்ற தொந்தரவுகளும் வரலாம் என்று சொல்கிறார்கள். கோபம் வரும் போது, நமது உடலில் உள்ள உறுப்புகளின் செயல்பாடுகள் மாற்றத்திற்கு உட்படுகின்றன. நமது மூச்சு கட்டுப்பாடில்லாமல் ஏறி இறங்கும். அதனால் இதயத் துடிப்பும், இரத்த அழுத்தமும் அதிகரிக்கும்.
Also Read : பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? ஆச்சரியமூட்டும் தகவல்கள்!
கோபத்தின்போது மூளையில் பல வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அட்ரினலின் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் அதிகரித்து, உங்கள் இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் தசைப் பதற்றத்தை அதிகரிக்கின்றன. கோபம் அதிகம் வரும்போது உணர்வுப்பூர்வமான நிலையில் அறிவுப்பூர்வமாக யோசிக்கும் திறன் வெகுவாக குறைந்து விடுகிறது. இதன் அடிப்படையில்தான் கோபம் ஏற்படத் தொடங்குகிறது.
கோபத்தைக் குறைப்பதற்கு என்ன செய்யலாம் என அறிவுப்பூர்வமாக யோசிப்பதற்கும் மூளையில் சில பகுதிகள் உள்ளன. மன அழுத்தம், விபத்து, மூளையில் ஏற்படும் நோய்கள், மது போன்றவை மூளையின் கோபத்தைக் கட்டுப்படுத்தும் பகுதியைப் பாதிக்கின்றன. அதனால் சிறு விஷயங்களுக்குக்கூட கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், சிலநேரம் காரணமே இல்லாமல்கூட கடுங்கோபம் ஏற்படுகிறது.
‘ஆத்திரமடையும் ஒவ்வொரு நிமிடமும் நாம் அறுபது விநாடி மகிழ்ச்சியை இழக்கிறோம்’ என அமெரிக்காவைச் சேர்ந்த ரால்ஃப் வாடோ எமர்சன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. அதற்காக கோபம் என்பதே கூடாதா எனக் கேட்டால், அதுதான் இல்லை. நியாயமான காரணங்களுக்காக சரியான முறையில் கோபம் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமான கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம். எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தை தருகின்றன. இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டால் ஏமாற்றமும் வராது, கோபமும் வராது.

Summary : கோபம் ஏன் வருகிறது? ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்றால், அவரை நமது வழிக்குக் கொண்டுவ உதவும் ஒரு உத்தியாக கோபத்தைப் பார்க்கலாம். கோபத்துக்கு பின்னால் ஏமாற்றமும் இருக்கிறது. தினமும் காலை எழுந்ததும் ஓர் ஐந்து நிமிடம் இன்னென்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படமாட்டேன் என மனதளவில் தயாராக இருந்தாலே, கோபத்தைப் பெரிதும் தவிர்த்துவிடலாம்.
கோபம் வரும்போது, மூச்சுப் பயிற்சி செய்யலாம். கோபத்தை வெளிப்படுத்தும் போது, நம் எதிரில் இருப்பது யார்? அவரின் மதிப்பு என்ன? அவருக்கும் நமக்கும் உள்ள பந்தம் என்ன? நம் கோபத்தால் அவருக்கு நேரும் விளைவால் நமக்கு என்ன பாதிப்பு உண்டாகும்? என்றெல்லாம் யோசிக்கும் அளவுக்கு நாம் மனமுதிர்ச்சி அடைய வேண்டும். தேவையற்ற கோபத்தைத் தவிர்த்து, ஆரோக்கியமாக வாழப் பழகுங்கள்.
Image Source : Getty Image
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry