
பாம்பு தன் சட்டையை உரிக்கும் போது பாம்பை பார்த்தால், அது நம்மை தாக்கும் என்றெல்லாம் கூறுவதை கேட்கிறோம். இதில் எது உண்மை? எல்லா வகை பாம்புகளும் தங்கள் சட்டையை உரிக்குமா? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தோலை உரிக்கும்?
இந்த கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொள்ள ஆந்திரா பல்கலையில் உள்ள பேராசிரியர் சி. மஞ்சுலதா, மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலை வன உயிரியல் அமைப்பை சேர்ந்த மூர்த்தி காந்திமஹந்தி ஆகியோரை பிபிசி தொடர்பு கொண்டது. பாம்பு தன் தோலை உரிப்பது மிக இயல்பான நடவடிக்கை என்கிறார் பேராசிரியர் மஞ்சுலதா.
இது மனிதர்களிலும் நடைபெறுகிறது. ஆனால் நாம் தினமும் குளிப்பதால், தோல் உரிவதை நாம் கவனிப்பதில்லை. ஆனால் பாம்புகளில் பழைய தோல் உரிந்து புதிய தோல் வருவது ஒரே நேரத்தில் நடைபெறுவதாகும். பழைய தோலுக்கு அடியில் புதிய தோல் உருவாகிய பின் பழைய தோல் உரிந்துவிடும் என்று மஞ்சுலதா கூறுகிறார்.


பாம்பு தோலை உரிப்பது எப்படி?
நுண்ணுயிரிகள் மற்றும் மாசு காரணமாக அடர்த்தியாகியுள்ள தோலை அகற்றுவது தான் பாம்பு தோல் உரித்தல் எனப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில், ஒரே நேரத்தில் பாம்பு தன் முழு தோலையும் உரித்துக் கொள்ளும். பாம்பு தன் தோலை உரிக்க நினைக்கும் போது, ஒரு சொரசொரப்பான இடத்தில் தனது தலையை தேய்க்கத் தொடங்கும். அப்போது தோலில் விரிசல் உண்டாகும். அதிலிருந்து பாம்பு தன் உடலை வெளியே கொண்டு வரும். பழைய தோலை முற்றிலும் உரித்து, புதிய தோலை அது கொண்டிருக்கும்.

பாம்பு உயிர் வாழும் வரை அது சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே இருக்கும். அதன் உடல் வளரும் போது, அதன் தோல் இயல்பாக இறுக தொடங்கும். இறுகிப்போன தோலை பாம்பு தன் உடலிலிருந்து உரித்துக் கொள்ளும். இந்த நடைமுறை, பாம்புகளுக்கு நுண்ணுயிரிகள் மற்றும் மாசு ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது. தோல் உரிக்காத பாம்பு வகைகள் உலகில் இல்லை. தற்போது உலகில் உள்ள 3 ஆயிரம் வகை பாம்புகள் தங்கள் தோலை உரித்துக் கொள்கின்றன என்கிறார் பேராசிரியர் மஞ்சுலதா.
பாம்பு தோல் உரிப்பது ஏன்?
வன உயிரியல் அமைப்பை சேர்ந்த மூர்த்தி காந்திமஹந்தி, ‘பாம்பு தன் உடலில் புதிய தோல் உருவாகியுள்ளது என்று உணரும் போது, அது உடனே பழைய தோலை உரித்துக் கொள்ள முயலும். ஏனென்றால் புதிய தோல் அதன் கண்களுக்கு அருகிலும் உருவாகியிருக்கும். இதன் காரணமாக பாம்பினால் சரியாக பார்க்க இயலாது. அதன் கண்கள் நீல நிறமாக மாறிவிடும். உடனே பாம்பு தனது பழைய தோலை அகற்றிட நினைக்கும்.’ என்கிறார்.
அதன் பொந்திலிருந்து வெளியே வரும் போது, பாம்பு ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம். பொந்தை விட்டு வெளியே வந்த பிறகு, பாம்பு உற்சாகமாக காணப்படும். பொந்திலிருந்து வெளிவரும் பாம்பு சாப்பாடு இல்லாமல் இருக்கும், எனவே உணவு தேடி அவசரஅவசரமாக அலைந்துக் கொண்டிருக்கும்.

தோல் உரிக்கும் போது பார்த்தால் பாம்பு தாக்குமா?
ஒரு பாம்பு தன் உடலில் பழைய தோல் இருக்கும் போது அசௌகர்யமாக கருதும். இருட்டான இடத்தில் இருந்து கொள்ளும். தோல் உரியும் போது, கண்களுக்கு அருகில் தோல் சரியாக உரியாமல் போனால், அது பாம்புக்கு மேலும் சிக்கலாகிவிடும். எனவே, பாம்பு தன் தோலை உரிக்கும் போது, ஏதாவது சத்தம் கேட்டால், இயல்பாகவே தாக்க முயலும். இதை தான் அனைவரும் கூறுகிறார்கள் என்று மூர்த்தி காந்தி மஹந்தி விளக்கமளிக்கிறார்.
பாம்பு எத்தனை முறை தோல் உரிக்கும்?
உலகில் உள்ள அனைத்து பாம்பு வகைகளும் தங்கள் தோலை உரிக்கும். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆன பாம்பு மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை தன் தோலை உரிக்கும். சற்று வயதான பாம்புகள் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை தோலை உரிக்கும்.
பாம்புகள் எத்தனை முறை தோலை உரிக்கும் என்று குறிப்பிட்ட எண்ணிக்கை எதுவும் கிடையாது. பாம்பு சாப்பிடும் உணவு, அதன் இருப்பிடம், அங்குள்ள வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றின் அடிப்படையில் எத்தனை முறை தோலை உரிக்கும் என்பது மாறுபடும். எந்த வகை பாம்பு என்பதும் இதில் முக்கிய காரணியாகும். கண்கள் முதல் வால் வரை உடம்பில் உள்ள தோலை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் உரித்துக் கொள்ளும் ஒரே உயிரினம் பாம்புதான்”என்கிறார் மூர்த்தி காந்தி மஹந்தி.
எப்போது தோலை உரிக்க வேண்டும் என்று பாம்புக்கு எப்படி தெரியும்?
தோல் பழையதாகும் போது பாம்புக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தும். உடனே தோலை அகற்றவிட வேண்டும் என்ற சமிக்ஞையை அதன் உடல் பாம்புக்கு வழங்கும். உடனே அதை உரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை பாம்பு மேற்கொள்ளும்.

பாம்பு தோலை உரிப்பது மிகவும் இயல்பான நடைமுறை. ஒரு பாம்பு தோலை உரிக்கவில்லை என்றால், அதற்கு உடல் நலம் சரியில்லை என்று புரிந்து கொள்ளலாம். தோல் உரியாமல் பாம்பு சுறுசுறுப்பாக இருக்காது. பாம்புக்கு தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சரியாக உணவு சாப்பிடாது. இப்படியே தொடர்ந்தால், பாம்பின் உயிருக்கு கூட ஆபத்தாக இருக்கலாம். பாம்பு தோல் உரிக்கும் போது, அதற்கு உதவி செய்யும் எண்ணத்தில் அருகே சென்றாலும், பாம்பு நம்மை தாக்குவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று மூர்த்தி காந்தி மஹந்தி எச்சரிக்கிறார்.
Image Source : Getty Image. Article Courtesy : BBC.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry