உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியிலிருக்கும் கியான்வாபி மசூதியின் வெளிப்புற சுவர்களில் உள்ள இந்துக் கடவுள்களை வழிபட வேண்டி, இந்துப் பெண்கள் தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவின்பேரில் மசூதியில் நடத்தப்பட்ட சோதனையில், சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கின் மீதான விசாரணை இன்னும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவரான மோகன் பகவத், கியான்வாபி மசூதி சர்ச்சையில் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மோகன் பகவத், “நாம் ஏன் சர்ச்சையை அதிகரிக்க வேண்டும்? கியான்வாபி மசூதிமீது நாங்கள் பக்தி வைத்திருக்கிறோம். அதன்படி ஏதாவது செய்தாலும் பரவாயில்லை. ஆனால் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் பார்க்க வேண்டும்? வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது. அதை இன்றைய இந்துக்களோ அல்லது முஸ்லிம்களோ உருவாக்கவில்லை.
அது அந்த நேரத்தில், அதுவாக நடந்தது. அதுமட்டுமல்லாமல், இஸ்லாம் என்பது வெளியிலிருந்து தாக்குதல் நடத்துபவர்களால் வந்தது. அந்த தாக்குதல்களில் தான், தேவஸ்தானங்கள் இடிக்கப்பட்டன. இந்துக்கள் யாரும் முஸ்லிம்களுக்கு எதிராகச் சிந்திப்பதில்லை. இன்றைய முஸ்லிம்களின் முன்னோர்களும் இந்துக்கள்தான்.
இந்துக்கள், தங்களின் மதத் தலங்கள் மீட்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். மனதில் குழப்பங்கள் இருந்தால் இதுபோன்ற கேள்விகள் எழும். அது யாருக்கும் எதிரானதும் அல்ல. பரஸ்பர உடன்பாட்டின் மூலம் இதற்கு ஒரு வழியைத் தேடுங்கள். வழி கிடைக்கவில்லையென்றால் என்றால், மக்கள் நீதிமன்றத்தை அணுகுவார்கள். அதில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு நாம் கட்டுப்பட வேண்டுமே தவிர, கேள்வி கேட்கக் கூடாது.
மேலும், எந்தவொரு வழிபாட்டின் மீதும் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை. அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள் நம் முன்னோர்களான, ரிஷிகள் மற்றும் சத்திரியர்களின் வம்சாவளியினர். நாங்களும் அதே வம்சாவளியினர்தான்” என்று கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry