அமாவாசை காய்கறிகளில் வாழைக்காய் கட்டாயமானது எப்படி? சுவாரஸ்யமான பின்னணித் தகவல்!

0
110

அமாவாசை நாளில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இப்படி செய்வதன் மூலம் சந்ததிகள் நன்றாக இருப்பார்கள் மற்றும் வீட்டில் சுப காரியத் தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். அமாவாசை நாளில் வீட்டில் சுப காரியங்கள் நடத்தக்கூடாது, சுமங்கலிகள் விரதம் இருக்கக் கூடாது, ஒரு குறிப்பிட்ட காய்கறிகள் மட்டுமே சமைக்க வேண்டும் என்பதும் நியதி. அப்படி சமைக்கப்படும் காய்கறிகள் அமாவாசை காய்கறிகள் என்று அழைக்கப்படுகிறது.

அமாவாசை நாளில் கண்டிப்பாக சமைக்க வேண்டிய காய்கறிகள் மற்றும் சமைக்க கூடாத காய்கறிகள் என உண்டு. அதில் அமாவாசை விரத சமையல் மற்றும் அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும்போது சரி, அந்தணருக்கு கொடுக்கும் பொருட்களில் வாழைக்காய் கண்டிப்பாக இருக்க வேண்டும். வாழையடி வாழையாக நம் குலம் வளர வேண்டும் என்பதற்காக இவ்வாறு கொடுக்கப்படுவதாக சொல்கிறார்கள். அதுபோலவே அமாவாசை நாளில் பாகற்காய், பிரண்டை, பாலாக்காய் கண்டிப்பாக சமைக்க வேண்டும் என்றும் புராணக்கதை உள்ளது.

ராஜ வம்சத்தை சேர்ந்த விசுவாமித்திரர் கடுமையான தவப்பயனால் பிரம்ம ரிஷியாக உயர்ந்தார். மேலும், இவர் வசிஷ்டர் வாயால், ‘பிரம்ம ரிஷி’ எனும் பட்டத்தையும் பெற்றார். ஆனால், இப்படி பட்டத்தை பெறுவதற்கு முன்பு இவருக்கும் வசிஷ்டருக்கும் மோதல் இருந்தது.

ஒரு சமயம் வசிஷ்ட முனிவர் விசுவாமித்திரரை சந்தித்து, தனது வீட்டில் சிராத்தம் செய்ய உள்ளதால் தாங்கள் வீட்டிற்கு உணவு அருந்த வேண்டும் என அழைப்பு விடுத்தார். வசிஷ்டர், விசுவாமித்திரர் இருவருமே பயங்கர கோபக்கார முனிவர்கள். வசிஷ்டரின் இந்த அழைப்பை ஏற்ற விஸ்வாமித்திரர், ‘தனக்கு 1008 காய்கறிகளைக் கொண்டு உணவு சமைக்க வேண்டும்’ எனக் கூறினார்.

Also Read : குறட்டை எப்போது டேஞ்சரானதாக மாறுகிறது? குறட்டையை நிறுத்த உதவும் சிம்பிள் டிப்ஸ்! How to Stop Snoring Naturally?

இதைக் கேட்டு வசிஷ்டர் திகைத்துப் போனார். ‘1008 காய்கறிகளா? அத்தனை வகை காய்கறிகளையும் எப்படி தேடிப்பிடிப்பது? எப்படி சமைப்பது?’ எனக் குழப்பம் அடைந்தார். ஆனால், அருகில் இருந்த வசிஷ்டரின் மனைவியும் தீவிர பதிவிரதையுமான அருந்ததி, விசுவாமித்திரரின் வார்த்தைகளை ஏற்று, ‘நீங்கள் கூறியபடி 1008 காய்கறிகளை சமைத்து பரிமாறுகிறேன் சுவாமி’ என பணிவுடன் பதில் அளித்தாள்.

சிரார்த்தம் அதாவது திதி கொடுக்கும் நாளும் வந்தது. விசுவாமித்திரரும் உணவு சாப்பிட வந்தார். வாழை இலை போட்டு உணவுகளை பரிமாறத் தொடங்கினாள் அருந்ததி. முதலில் எட்டு வாழைக்காய் வைத்தாள். பிறகு பாகற்காய், பிரண்டை, பலாக்காய் என பரிமாறி முடித்துவிட்டு, ‘1008 காய்கறிகள் பரிமாறியாகி விட்டது சுவாமி’ என பணிவுடன் விசுவாமித்திரரிடம் கூறினாள்.

Also Read : இரவில் மஞ்சள் பால் குடித்தால் இவ்வளவு நன்மைகளா? Drinking Turmeric Milk Before Sleep: Health Advantages Explained!

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த விசுவாமித்திரர், ‘என்ன இது நான் 1008 காய்கறிகள் சமைத்து பரிமாறச் சொல்லி கேட்டால், நீ நான்கு காய்களை மட்டும் பரிமாறிவிட்டு 1008 காய்கறிகள் பரிமாறியாகி விட்டது எனச் சொல்லி என்னை அவமானப்படுத்துகிறாய்’ எனக் கோபமடைந்தார். அதற்கு அமைதியாக பதிலளித்த அருந்ததி, ‘சுவாமி தாங்கள் அறியாதது இல்லை. அனைத்தும் அறிந்த நீங்களே இப்படிக் கோபப்படலாமா?

’காரவல்லி சதம் ப்ரோக்தம் வஜ்ரவல்லி சதம் த்ரயம்
பிநச: ஷட்சதம் ப்ரோக்தம் ஸ்ராத்த காலே விதியதே:’

என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதாவது, பாகற்காய் 100 காய்களுக்கும், பிரண்டை 300 காய்களுக்கும், பலாக்காய் 600 காய்கறிக்கும் சமமாகும். இவை ஆயிரம் காய்கறிகள் ஆகிவிட்டன. இதோ எட்டு வாழைக்காய் வைத்துள்ளேன். மொத்தம் 1008 காய்கறிகள் ஆகிவிட்டது’ எனக் கூறினாள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry