கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 58ஆக அதிகரித்துக்கும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆனந்த விகடன் இதழ் தீட்டியிருக்கும் தலையங்கத்தில், “ஓர் அரசாங்கம்… நலத்திட்டங்கள், தொழில் வளர்ச்சிகள், மாநில முன்னேற்றம் எனச் செயல்படுவதைவிட மிக மிக அடிப்படையானது… மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது. ஆனால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய செயற்கைப் பேரழிவால், தலைகுனிந்து நிற்கிறது `திராவிட மாடல்’ தி.மு.க அரசு.
விளிம்புநிலை மக்களில் 55 பேரின் உயிர்கள் இதுவரை பறிக்கப்பட்டுள்ளன. பலரின் நிலை, கவலைக்கிடமாகவே இருக்கிறது. ஊரே சுடுகாடாகிக் கிடக்கிறது. கைம்பெண்களின், குழந்தைகளின், உறவுகளின் கதறல்களுக்கு என்ன நீதி? கள்ளச்சாராயக் கும்பல்களுக்கு `பங்காளி’யாகிப் போன மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பணியிடை நீக்கம்/இடமாற்றம் மட்டும்தான் தண்டனைகளா..? துணைநின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு?
`டாஸ்மாக்கை மூடிவிட்டால் கள்ளச்சாராய மரணங்கள் பெருகும்’ என்கிற அரசின் வாதம், மிக கேவலமாக பல்லிளித்து நிற்கிறது. ஆட்சியைப் பிடிக்கும்போதெல்லாம் இரண்டு கட்சிகளும் மாறிமாறி ஆடும் சாராய ஆட்டக் கொடுமைகளுக்குத்தான், குடிகார மாநிலமாகத் தள்ளாடுகிறது தமிழகம். கல்வி, தொழில், மருத்துவம் போன்றவற்றில் `நான் முதல்வன்’ என்று சொல்லிக் கொண்டால், அது பெருமை. `குடிப்பதிலும்’ அப்படியே என்றால்?
குஜராத்தின் பொதுத்துறை பால் விற்பனை நிறுவனமான அமுல், நாடு முழுக்க பால் பொருள்களை விற்பனை செய்து 2022-23-ம் ஆண்டில் ஈட்டியிருக்கும் வருமானம் 55 ஆயிரம் கோடி ரூபாய். இது… ஆக்கபூர்வமான வளர்ச்சி. மக்களைக் குடிகாரர்களாக மாற்றுவதற்காகவே தொடங்கப்பட்ட தமிழகத்தின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக், 2022-23-ம் ஆண்டில் ஈட்டியிருப்பது 45 ஆயிரம் கோடி ரூபாய். இது… கேடுகெட்ட வளர்ச்சி!
`டாஸ்மாக் வருமானத்தில்தானே மக்கள் நலத்திட்டங்களே நடக்கின்றன. அதை மூடிவிட்டால் எங்கே போவது?’ குடியால் சீரழியும் மனித வளத்தைப் பயன்படுத்தி அமுல் போல நம் ஆவின் நிறுவனத்தை வளர்த்தெடுத்தாலே.. டாஸ்மாக்கைவிட 10 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகக் கிடைக்குமே. மக்களின் நலனும் பல மடங்கு பெருகுமே. அது முடியவில்லையா? `அரசாங்கம்’ என்கிற பெயரில், மக்கள் பணத்தை சூறைத்தேங்காய் உடைப்பதை நிறுத்தினாலே போதும், உடனடி வருமானம் கொட்டுமே.
சிலைகள், மண்டபங்கள், ஆடம்பர விழாக்கள், உதவாக்கரைத் திட்டங்கள், ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், நீதிபதிகள், அரசாங்க உயரதிகாரிகள் என பலருக்கும் புதுப்புது சொகுசு கார்கள், பெரும் பெரும் பங்களாக்கள், பராமரிக்க கோடி கோடியாக நிதி எனத் தேவையில்லாத ஆணிகளையெல்லாம் அகற்றினாலே பல ஆயிரம் கோடிகள் மிச்சமாகுமே.
பல லட்சம் கோடி வருமானத்தை அள்ளித் தரும் மணல், கிரானைட் உள்ளிட்ட இயற்கை வளங்களை சொற்ப காசுகளுக்குத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை நிறுத்தினாலே, பல லட்சம் கோடிகள் அரசு கஜானாவை நிறைக்குமே. இதையெல்லாம் யோசிக்கக்கூட மனமில்லாமல், `நலத்திட்டங்கள்’ என்கிற பெயரில் சாராய அரக்கன்களிடம் மக்களின் உயிர்களை அடகு வைப்பதற்கு பெயர் அரசு அல்ல… எமன்!” இவ்வாறு விகடன் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் எழுதியிருக்கும் நாளிதழில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தச் சம்பவம் அரசு இயந்திரத்தின் தோல்வியையும் ஏற்கெனவே நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்களிலிருந்து அரசு பாடம் கற்காததையும் அலட்சியத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
கருணாபுரத்தில் ஒரு துக்க நிகழ்வுக்குச் சென்ற இடத்தில் கள்ளச்சாராயத்தைக் குடித்ததில் 164 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இவர்களில் நான்கு பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த மரணங்களுக்கு, சாராயத்தில் கலந்திருந்த மெத்தனால் வேதிப்பொருளே காரணம் என்பது தெரிய வந்திருக்கிறது. கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, அவருடைய மனைவி உள்பட பத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பணியிட மாற்றம், காவல் கண்காணிப்பாளர் தற்காலிகப் பணி நீக்கம் என்பன போன்ற நடவடிக்கைகள் அரசுத் தரப்பில் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் அரசு சார்பில் 10 லட்சம் நிவாரணத் தொகை, உயிரிழந்தவர்களின் வாரிக்களின் கல்விச் செலவை அரசே ஏற்பது உள்ளிட்ட நிவாரணங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். விரும்பத்தகாத ஒரு நிகழ்வு நடைபெற்ற பிறகு அரசின் வழக்கமான நடவடிக்கைகளாவே இவை அமைந்துள்ளன. மாறாக இதுபோன்ற ஒரு நிகழ்வே நடைபெறாமல் தடுப்பதுதான் ஓர் அரசின் நிர்வாகத் திறனுக்குச் சான்று. கள்ளச்சாராய மரணங்கள் ஆளும் திமுக அரசுக்கு ஓர் அவப்பெயர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
மேலும் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் அரசு நிர்வாகத்தின் தோல்வியும் வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக, 2023இல் செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்த பிறகு, அரசு நிர்வாகம் படித்த பாடம் என்ன என்கிற கேள்வி அழுத்தமாக எழுகிறது. சென்னை உயர் நீதிமன்றமும் இதைச் சுட்டிக்காட்டியுள்ளது. கள்ளக்குறிச்சியின் மையப் பகுதியிலேயே கள்ளச் சாராயம் விற்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறையின் மதுவிலக்குப் பிரிவினரின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு வழிவகுத்திருக்கின்றன.
Also Read : சந்துருவின் பரிந்துரைகள் நடுநிலையாக இல்லை! அபத்தமான, தான்தோன்றித்தனமான கருத்துகள் என KSR விமர்சனம்!
அரசியல், அதிகார மட்டத்தின் துணையோடுதான் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் எளிதில் புறந்தள்ளிவிட முடியாதவை. ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கிய இந்த விவகாரத்தைத் திமுக அரசு தீவிரமாகக் கருதினால், இதினுள்ள அரசியல் தொடர்புகளை அம்பலப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அப்போதுதான் அரசின் நடவடிக்கைகளில் பாரபட்சம் இல்லை என்பது வெளிப்படும்.
எப்போதும் அரசின் மீதான கூர்மையான விமர்சனங்கள் அரசு செம்மையாகவும் தவறுகளிலிருந்து பாடம் கற்கவும் உதவும். ஆனால், அதிமுக ஆட்சியின்போது ஒரு தவறு நடந்தால் கடுமையாகக் கண்டிப்பவர்கள், திமுக ஆட்சியில் நடந்தால் அமைதியாக இருப்பது ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் கண்ணாம்பு என்கிற நிலைதான். மிகப் பெரிய அளவில் கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்த பிறகும் சமூகச் செயல்பாட்டாளர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரிடமும் அமைதி நிலவியது பெரும் சோகம்.
தமிழ்நாட்டில் 2023, 2024 எனத் தொடர்ச்சியாகக் கள்ளச்சாராய் மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், கள் இறக்க உள்ள தடையை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் வலுப்பெற்றுள்ளன. அண்டை மாநிலங்களில் கள் இறக்கவும் விற்கவும் அனுமதி உள்ள நிலையில், உயிரிழப்பைத் தடுக்கும் என்கிற பட்சத்தில், கள் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசும் முன்வர வேண்டும்.” இவ்வாறு இந்து தமிழ் திசை நாளிதழ் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry