சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு ‘மழை’ என்றாலே ஒருவித அச்சம் அப்பிக்கொள்கிறது. ஒரேயொரு மணி நேரம் கனமழை பெய்தாலே தெப்பக்குளமாகக் காட்சியளிக்கும் சாலைகள், வீடுகளுக்குள் புகுந்துவிடும் வெள்ளம், அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடும் அவலநிலை என ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக் காலங்களில் தமிழக மக்கள் பரிதவிக்கிறார்கள்.
கடந்த ஆண்டு பருவமழையின்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைப் புரட்டிப்போட்டது வெள்ளம். முகாம்கள் அமைத்து, மக்களைப் பாதுகாக்கவேண்டிய சூழல் உருவானது. தலைநகரான சென்னையில் பெய்த கனமழையால், மொத்த நகரமும் ஸ்தம்பித்தது. முதலமைச்சர் வீடு அமைந்திருக்கும் ஆழ்வார்பேட்டையே தண்ணீரில் தத்தளித்தது. கடந்த ஆண்டு பெய்த கனமழை, ஒரு பெரும் பாடத்தை அரசுக்குச் சொல்லிக்கொடுத்தது. ஆனால், அதிலிருந்து ஆட்சியாளர்கள் எதையும் கற்கவில்லை.
தென் கிழக்கு வங்கக்கடலில் இன்று (அக்.14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் கணித்துள்ளது. இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ள சூழலில் அக்.15, 16-ம் தேதிகளில் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால், இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்று ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்திருந்தது.
வரும் செவ்வாய், புதன் கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழை (ஆரஞ்சு எச்சரிக்கை, 12-20 செ.மீ) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கனமழை எச்சரிக்கையை அடுத்து, சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் உரிமையாளர்கள் கார்களை நிறுத்ததொடங்கியுள்ளனர். இதேபோல் பள்ளிக்கரணை மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போலீஸார் அபாரதம் விதித்துள்ளனர்.
கனமழை நேரத்தில் மண் செறிவூட்டப்பட்டு, சிறிய நீர்நிலைகள் நிரம்பிவிடும், இதன் விளைவாக குறைந்த அளவே நீர் உறிஞ்சுதல் இருக்கும். எனவே சாலைகள் மற்றும் வீடுகளில் அதிக அளவு வெள்ள நீர் சூழும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கோவை, திருப்பூர், நெல்லை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாநகரங்களில் தற்போது பெய்து வரும் மழைக்கே, பேருந்துகள் மூழ்கும் அளவுக்கு சாலைகள் வெள்ளக்காடாகி உள்ளன.
இன்னும் 2 நாட்களில் பருவமழை தொடங்கவிருக்கும் சூழலில், சென்னை மற்றும் புறநகரில் இப்போதுவரை மழைநீர் வடிகால் பணிகள் முழுமையடையவில்லை. பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் கூறினாலும், கள நிலவரம் அதற்கு நேரெதிராக உள்ளதால் தாழ்வான பகுதியில் வசிப்போர் பெரும் கவலையடைந்துள்ளனர். பல இடங்களில் திறந்த நிலையிலுள்ள குழிகள், பாதசாரிகள் மற்றும் பயணிகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.
நகரில் பல இடங்களில் மழை நீர் வடிகாலுக்காக(Storm Water Drains – SWD) தோண்டப்பட்ட வாய்க்கால்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படாததால், மிதமான மழையின் போது கூட நீர் தேக்கம் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இன்னும் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள இயலாது. எனவே பல இடங்களில் வெள்ள நீர் சூழப்போவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
கால்வாய்களைத் தூர்வாருதல், குப்பைகள், தாவரங்களை அகற்றுதல் ஆகியவற்றை செய்தால்தான் நீர் உள்வாங்கும் திறன் மேம்படும். இதனால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், ஏரிகளில் உபரி மழைநீர் செல்ல ஏதுவாக இருக்கும். சென்னை நகரின் மத்திய பகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் இருந்து உபரி நீரை பக்கிங்காம் கால்வாய்க்கு வெளியேற்றும் வடசென்னையின் முக்கிய கால்வாய்களில் ஒன்றான ஓட்டேரி நல்லாவை நீர்வளத்துறை தூர்வாரவில்லை. கரையில் உள்ள கழிவுகள் மற்றும் சேற்றை அகற்றவில்லை.
மேலும், விரைவான நகரமயமாக்கல் காரணமாக ஓட்டேரி நல்லாவைச் சுற்றியுள்ள வடக்கு மற்றும் மத்திய சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து மழைநீர் ஓட்டம் தடைபடுகிறது. நீர்நிலையின் பரப்பளவும் சுருங்கிவிட்டது. இதேபோல், வேளச்சேரி ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகள், குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆகியவை நிரம்பியுள்ளன.
வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை குடியிருப்பு பகுதிகளில் இருந்து உபரி மழைநீர் மழைக்காலங்களில் ஏரியில் கலக்கிறது. இருப்பினும், அதிகாரிகள் ஏரிகளை தூர்வாரவோ அல்லது நீர்நிலையில் இருந்து மிதக்கும் கழிவுகளை அகற்றவோ இல்லை. மேலும், சேமிப்பு திறனை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அந்தப் பகுதிகள் இந்த ஆண்டும் தத்தளிக்கத்தான் போகிறது.
அரசின் செயலற்ற தன்மையால் சென்னை பெருநகரின் பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் லேசான மழை பெய்தாலும், முழங்கால் அளவு தண்ணீர் தேங்குகிறது. மறுபுறம், வேளச்சேரிக்கு உள்பட்ட பல பகுதிகளில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய மழை நீர் வடிகால் கட்டுமானப் பணிகள் இன்னமும் முடிவடையவல்லை.
இதனால் இந்தப்பகுதிகளில், தரை தளத்தில் சொந்த வீட்டில் வசிக்கும் மக்களே வேறு பகுதிகளுக்கு வாடகைக்கு குடிபெயரத் தொடங்கியுள்ளனர். சோழிங்கநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி நிலையும் மோசம்தான். அதிகப்படியான மழை நீரை தேக்கும் வகையில் பெரும்பாக்கம் ஏரி தூர்வாரப்பட்டு தயார்படுத்தப்பட்டது. ஆனால் வடிகால்கள் இணைக்கப்படவில்லை. பெரும்பாக்கம் ஏரி மற்றும் ராமந்தாங்கல் ஏரியுடன் தற்போதுள்ள தெற்கு அணையை இணைக்காததால், ஒவ்வொரு மழைக்காலத்திலும் சோழிங்கநல்லூர் பகுதி வெள்ளத்தில் மூழ்குகிறது.
அதேபோல், மடிப்பாக்கத்தில் தற்போதுள்ள மழை நீர் வடிகால் வாய்க்கால்களை இணைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்பு அளவு தண்ணீருடன் போராடுகிறார்கள். இந்தப் பருவமழையும் அவர்களுக்கு திண்டாட்டமாகத்தான் இருக்கப்போகிறது.
வரும் 16 ஆம் தேதி அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 204 மி.மீ அல்லது அதற்கு மேல் மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. கட்டி முடிக்கப்படாத வடிகால் கட்டுமானங்களால், நிலைமை இன்னும் மோசமாகும். மயிலாப்பூரில் உள்ள நீதிபதி சுந்தரம் சாலையிலும் மழை நீர் வடிகால் பணிகள் பாதியிலேயே நிற்கிறது. இதனால் அந்தச் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. திருவள்ளுவர் சிலை அருகே தண்ணீர்துறை மார்க்கெட், பி.எஸ். சிவசாமி சாலை, கல்விவாரு தெரு என மயிலாப்பூருக்கு உள்பட்ட பல இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் முழுமை பெறாமல் பல் இளிக்கின்றன.
பணிகள் முடிவுறாத மழை நீர் வடிகால் வாய்க்கால்கள், கழிவுநீர் வாய்க்கால்களை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
மழை நீர் வடிகால் பணிகளை புதிதாக தொடங்கவில்லை எனக்கூறும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், பெரும்பாலான கட்டுமானப் பணிகள் மற்றும் இன்டர்லிங்க் பணிகள் முடிவடைந்துள்ளன. நீர்வடிகால் வசதி இல்லாத இடங்களில், சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற, மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்தது 13,000 தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர், மேலும் 113 மோட்டார் பம்புகள் தாழ்வான பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.’ என்கிறார்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், நீர்நிலைகளை சீரமைப்பதுமே சென்னை மற்றும் புறநகரில் வெள்ளத்தை தடுக்க நிரந்தர தீர்வாகும். அதேபோல், மழைநீர் வடிகால் பணிகளை கோடைக்காலத்தில் முடிக்காமல் விட்டது, அரசின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது. மழைநீர் வடிகால் பணிகளை முடிக்காததற்கான பின்விளைவுகளை மக்கள்தானே சந்திக்கப்போகிறார்கள் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இருக்குமானால் அது கண்டிக்கத்தக்கதே. முடிவு பெறாமல், மூடப்படாமல் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வடிகால் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry