பயம் நீக்கும் ஞானமலை முருகன்! 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலில் குருவின் அம்சமாக அருள்பாலிக்கும் ஞானபண்டிதன்!

0
67

ஞானம் பெறாதவரின் கல்வியறிவுகூட பொருளற்றதாகிப் போய்விடும். ஈட்டிய பொருளை நல்லவழியில் செலவிடவும், ஞானத்தைப் பெறவும் குரு ஒருவரின் அருள் நமக்குத் தேவை. எல்லோருக்குமே குரு கிடைப்பது சாத்தியமில்லை என்ற சூழலில், அத்தனை உயிர்களுக்கும் ஞான வடிவமாக – ஞானகுருவாகக் காட்சியளிப்பவன் அந்த ஞானபண்டிதன் முருகப்பெருமான். ஞான மூர்த்தியான முருகப்பெருமான் குடிகொண்ட ஒரு மலையே ஞான வடிவில் அமைந்துள்ளது. அதன் காரணமாகவே அந்த மலை `ஞானமலை’ என்றே போற்றப்படுகிறது.

வள்ளிப்பிராட்டியை கரம் பற்றிய முருகப்பெருமான், வள்ளிமலையிலிருந்து திருத்தணிகை மலைக்குப் புறப்பட்டார். வழியில் தென்பட்டது ஒரு சிறிய குன்று. குன்றென்றாலே குமரப்பெருமானுக்குக் குதூகலம் அல்லவா? வள்ளியம்மையோடு முருகப்பெருமான் அந்தக் குன்றில் தங்கி இளைப்பாறினார். அந்த மலைதான் ஞானமலை என்று புராணங்கள் கூறுகின்றன. அதற்கு அழுத்தமான சான்றாக முருகப்பெருமானின் திருவடிச் சுவடுகளும் இங்கு காட்சியளிக்கின்றன.

முருகப்பெருமானின் திருவடிச் சுவடு

இந்து மதத்தில் பல நூறு தெய்வங்கள் இருந்தாலும் நமது வழிபாட்டில் முருகப்பெருமானுக்கு எப்போது தனி இடம் உண்டு. முருகனுக்கு உலகம் முழுவதும் கோவில்கள் உள்ளன. ஆனால் சில கோவில்கள் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன, அத்தகையதொரு அற்புதமான கோவில்தான் ஞானமலை முருகன் கோவில். ஞானமலை சுப்பிரமணிய சுவாமி ஞானிகளுக்கும், மகான்களுக்கும் மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் அருளை வழங்குவார்.

இந்தக் கோவில் புகழ்பெற்ற ஸ்ரீ சோளிங்கர் நரசிம்மர் கோவிலிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சோளிங்கருக்கு வருபவர்கள் இந்த அற்புதமான ஞானமலை முருகனையும் தரிசிப்பது சாலச்சிறந்தது. ஞானமலைக்கு வந்த அருணகிரிநாதருக்குத் திருவண்ணாமலை முருகப்பெருமானின் நினைவு வந்துவிட்டதாம். அங்கு இவரை  ஆட்கொண்டு குருவாக நின்று தீட்சை தந்த பெருங்கருணையை எண்ணி கண்ணீர் மல்கிய அருணகிரிநாதர், ஞானமலையிலும் முருகப்பெருமானின் பாத தரிசன அனுபவத்தைப் பாடி தரிசித்தார்.  பல்லவர் காலத்து கோயில் என்று சொல்லப்படும் ஞானமலையில் 14-ம் நூற்றாண்டு காளிங்கராயன் காலத்துக் கல்வெட்டு ஒன்று கோயிலின் திருப்பணியை விவரிக்கிறது.

சின்ன சின்ன விசயங்களுக்குக்கூட பயப்படுபவர்கள், ஒரு முறை ஸ்ரீ ஞானமாலை முருகனை சென்று வழிபட்டால், “யாமிருக்க பயமேன்” என்கிற கூற்றின்படி, நமது பயங்களை நீக்கும் கடவுளாக முருகன் இங்கு காட்சியளிக்கிறார். ஜபமாலை, கமண்டலம் தாங்கி, வலக்கை அபயமுத்திரை காட்ட, இடக்கையை இடுப்பில் வைத்தவாறு `பிரம்ம சாஸ்தா’ உருவில் இங்கு முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். பிரம்மனுக்கு வேத ரகசியம் சொன்ன வடிவம் இது என்பதால், இங்கு முருகப்பெருமான் குருவின் அம்சமாக ஞானத் திருவுருவாகக் காட்சியளிக்கிறார். இவரைத் தரிசிப்பவர்கள் அஞ்ஞானம் அழிந்து ஞான ஒளி பெற்று வாழ்வில் வளம் பெறுவார்கள் என்கிறது தல வரலாறு.

ஞானமலை ஆசிரமத்தில் `குறமகள் தழுவிய குமரன்’ உற்சவ சிலையை தரிசிக்கலாம். மலையடிவாரத்தில் அழகே வடிவான `ஞானஸித்தி விநாயகர்’, கிராம தேவதை `பொன்னியம்மன்’ ஆலயங்களை வணங்கிவிட்டு மலைமீது ஏறப் படிக்கட்டுகளை கடக்க வேண்டும். வழியில் அருள்பாலிப்பவர் `ஞான தட்சிணாமூர்த்தி’. இப்படிக் காணும் வழியெங்கும் ஞானக்கடவுளர்களின் தரிசனத்தைக் கண்டவாறே மலை உச்சியை அடைந்தால் ஒரு முகம், நான்கு திருக்கரங்கள் கொண்ட ஞான முருகப்பெருமான் வள்ளி, தேவசேனாவோடு காட்சியளிக்கிறார்.

கோவிலை அடைய சில நூறு படிகள் ஏற வேண்டும். வேப்ப மரங்கள் நிறைந்த இப்பகுதிக்கு வரும் தூய இதயம் கொண்ட பக்தர்களுக்கு, வேப்ப மரத்தின் இலைகள் இனிப்பு சுவை தருகிறது என்று நம்பப்படுகிறது. திருக்கோயிலைச் சுற்றிவிட்டு இன்னும் மலையின் மீதேறிச் சென்றால் தேவசுனை, ஞானகிரீஸ்வரர் சந்நிதி, ஞானவெளி சித்தரின் ஜீவசமாதி, முருகப்பெருமானின் திருவடித் தடங்கள் என்று மலையெங்கும் அதிசயக் காட்சிகள் விரிந்துகிடக்கின்றன. சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டத்தின் காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் போகும் வழியில், 16 கி.மீ தூரத்தில் மங்கலம் என்ற ஊர் இருக்கிறது.

இந்த ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் ஞானமலையின் அடிவாரம் உள்ளது. சென்னையிலிருந்து 110 கிலோ மீட்டர். அரக்கோணம்-காட்பாடி ரயில் பாதையில் உள்ள சோளிங்கர் (பாணாவரம்) ரயில் நிலையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவு. ஞானமலையின் மீதிருந்து பார்த்தால் வள்ளிமலை, திருத்தணிகை மலை தெரிகிறது. இந்த மூன்று மலைகளும் ஒரு முக்கோண வடிவில் அமைந்திருப்பதும் ஓர் அதிசயச் சிறப்பு. இந்த மூன்று மலைகளையும் ஒரே நாளில் தரிசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஓன்றாகக் கருதப்படுகிறது. ஞான குருவாக எழுந்தருளி வந்தவர்களுக்கு வரமளிக்கும் ஞானமலையில் வீற்றிருக்கும் ஞானப் பண்டிதனை ஒருமுறை தரிசித்துப் பாருங்கள்! மாயைகள் யாவும் நீங்கி மங்கள வாழ்வைப் பெறுவீர்கள் என்று அங்கு சென்று திரும்பிய எண்ணற்ற பக்தர்கள் சிலாகிக்கின்றனர்.