டிசம்பர் 15-க்குள் 2000 மினி கிளினிக்! ஒரு மருத்துவர், ஒரு செவிலியருடன் இயங்கும் என முதலமைச்சர் அறிவிப்பு!

0
11

டிசம்பர் 15-ம் தேதிக்குள் 2000 மினி கிளினிக் இயங்கும் எனவும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் உடன் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் இந்த மினி கிளினிக்குகள் செயல்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு முடிய இரண்டு நாட்களே உள்ள நிலையில் டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது மாவட்ட ஆட்சியர்கள் மத்தியில் பேசிய அவர், “சென்னையை பொறுத்தவரை தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதுதாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை முறையாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். கால்நடைகளை இழந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும்.

மருத்துவ வல்லுனர்கள் குழு கொடுக்கும் ஆலோசனைகள் படி முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்ததால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ குழு கொடுத்த ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகங்கள் முறையாக பின்பற்றியதால் இறப்பு விகிதம் கட்டுக்குள் உள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்று கண்டறிய அதிகளவில் ஆய்வகங்கள் அமைத்தது தமிழகம் தான்.

திருமண நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிவதில்லை. கோயில்களிலும், கடைகளுக்கு செல்லும் போதும் பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதை பார்க்கமுடிகிறதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நோய் கட்டுப்படுத்த முடியாது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்கள் மூலம் நாளொன்றுக்கு 8 லட்சம் பேருக்கு உணவு அளித்தோம். ஏழை எளிய மக்களின் பசியை போக்கினோம். கொரோனா காலத்தில் 49718 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 70,000 மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் 3 லட்சம் சுய உதவி குழுக்களுக்கு 11520 கோடி வங்கிக்கடன் வழங்கி, பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேற அரசு வழிவகை செய்துள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் 2000 நடமாடும் மினி கிளினிக் துவங்கப்படும். ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் இந்த மினி கிளினிக்குகள் செயல்படும். ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் அடங்கிய மினி கிளினிகில் இருப்பார்கள்இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry