மணவெளி தொகுதியில் சிவா! என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமா? புதுச்சேரி அரசியலில் பரபரப்பு!

0
61

திமுக தெற்கு மாநில அமைப்பாளரும், உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.வுமான சிவா, மணவெளி தொகுதியை நோட்டமிடுவதாக தெரிகிறது. என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி ஏற்படும் பட்சத்தில், தொகுதிப் பங்கீட்டில் நெருக்கடியைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2016-ல் காங்கிரஸ் கட்சியுடன், திமுக கூட்டணி அமைத்து 9 இடங்களில் போட்டியிட்டது. உருளையான்பேட்டையில் சிவாவும், காரைக்காலில் கீதா ஆனந்தும் வெற்றி பெற்றனர். இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வெங்கடேசன் வெற்றி பெற்றார். மூன்று எம்.எல்..க்களை பெற்றுள்ள போதிலும், காங்கிரஸ் ஆட்சி மூலம் திமுக எந்த பலனையும் பெற முடியவில்லை என்ற மனக்குமுறல் திமுகவின் 3 அமைப்பாளர்களிடம் இருந்து வருகிறது.

சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த மூன்று அமைப்பாளர்களும், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் திமுகவிற்கு எந்த நன்மையும் இல்லை, தொடர்ந்து தாங்கள் அவமதிக்கப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்துள்லனர். அத்துடன், அதிமுகவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் கால் பங்கு கூட தங்களுக்கு கிடைக்கவில்லை, புதுச்சேரியில் திமுகவை அழிக்கும் வேலையை செய்வதில்தான் முதலமைச்சர் நாராயணசாமி தீவிரமாக உள்ளார் என்று தங்களது உள்ளக் குமுறலை கொட்டித் தீர்த்துள்ளனர்.எந்த சூழ்நிலையிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி நீட்டிக்கக் தாங்கள் அனுமதிக்கக் கூடாது என்று மூவரும் வலியுறுத்தியபோது, ஸ்டாலின் பதிலேதும் தெரிவிக்காமல் மௌனம் காத்துள்ளார்.

இதையடுத்து, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க, புதுச்சேரி திமுக தீவிரம் காட்டி வருகிறது. கூட்டணி அமைந்தால், தொகுதி உடன்பாட்டின்போது, உருளையான்பேட்டை தொகுதி சிக்கலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் இந்தத் தொகுதியில் நேரு போட்டியிடுவார். ஏற்கனவே என்.ஆர்.கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் எம்.எல்.வாகவும் இருந்தவர்.

தற்போது எம்.எல்..வாக இருக்கும் தொகுதி என்ற அடிப்படையில் சிவாவும் உருளையான்பேட்டை தொகுதியை குறி வைத்தால், நேருவுக்கா அல்லது சிவாவுக்கா என்பது பற்றி முடிவெடுக்க முடியாமல் நெருக்கடி ஏற்படும். திமுகவுடன் கூட்டணி அமைந்தாலும், உருளையான்பேட்டை தொகுதியை ரங்கசாமி நேருவுக்கே ஒதுக்குவார் என உறுதியாக நம்பப்படுகிறது. ஏனெனில், புதிதாக கட்டப்பட்டுள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடமே நேருவுக்கு சொந்தமானதுதான். எனவே அவர் ரேஸில் முந்துகிறார்.

எனவே, சிக்கலை தவிர்க்கும் விதமாக, மணவெளி தொகுதிக்கு மாறலாமா? என்பது குறித்து சிவா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. என்.ஆர். காங்கிரஸ் அலுவலக திறப்பு விழாவில், அதிமுகபாஜக கூட்டணி தொடரும் என ரங்கசாமி அறிவித்துள்ள நிலையில், கூட்டணி மாற்றம் சாத்தியமா என திமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தோம்.

இப்போதிருக்கும் நிலையைத்தான் ரங்கசாமி கூறியுள்ளார். தேர்தல் அறிவிப்புக்கு முந்தைய அவரது கருத்தை திடமானதாக நம்பமுடியாது. ஏனெனில் மேல்மட்ட அளவில் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தேர்தல் அறிவிப்பு வெளியான உடன்தான் கூட்டணி பற்றி இறுதி முடிவெடுக்கப்படும்என்று கூறினார்கள். ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்பு, கூட்டணி மாற்றம், எம்.எல்..க்கள் தொகுதி மாற்றம் என புதுச்சேரி அரசியல் களம் இப்போதே விறுவிறுப்படையத் தொடங்கிவிட்டது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry