ஆழ் மனதில் ஸ்டோராகும் எண்ணச் சுமைகள்! இயல்பாக வாழ வழிகாட்டும் ஆன்மிகம்! Part – 2

0
30
Factors that affect spiritual health | Getty Image

3 Min Read : ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூன்று வகையான உயிரோட்டங்கள் உள்ளன. இவை சதா உள்நோக்கி பாய்ந்துகொண்டுள்ளன. அவை ஞான உயிரோட்டம், கர்ம உயிரோட்டம், மற்றும் ஸ்வபாவ உயிரோட்டம். இவைகளின் ஓட்டத்தைப் பொறுத்தே ஒருவரது உள் மற்றும் வெளி உலக நடவடிக்கைகள் உள்வாங்கப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றன.

ஞான உயிரோட்டம் : ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ளுதல், புரிந்துகொள்ளுதல், உணர்ந்துகொள்ளுதல்.

கர்ம உயிரோட்டம் : எந்த ஒரு காரியத்தையும் செய்யும் விதம் பற்றிய வரையறைகளை தேர்வு செய்வது.

ஸ்வபாவ உயிரோட்டம் : நாம் பிறக்கும்போதே நமக்குள் பிரத்யேகமாக உருவான உள்நிலை பரிவர்தனைகளை (பாவனைகளை) வெளிக்காட்டுவது .

இங்கே ஸ்வபாவ உயிரோட்டம் பற்றி கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்வது அவசியம். இதை வேதங்கள் ‘ஸம்ஸ்க்காரம்’ என்று குறிப்பிட்டு சொல்கின்றன. இது ஒரு வகையான எண்ணச் சுமைகள் (நினைவுச் சுவடுகள்). நல்லவை, தொல்லை தருபவை சேர்ந்த ஒரு கலவை. பிறந்ததிலிருந்து நாம் பார்த்த அனுபவங்கள், சில நிகழ்வுகள், ஆறாத வடுக்கள், சோகம் அல்லது சுகம் தரும் நினைவுகள் (சென்ற பல பிறப்புகளிலிருந்தும் கூட இருக்கலாம்) ஆகியவை நம் மனதில் பதியவைக்கின்றன. இவை ஆழ்மனதில் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது.

Also Read : பிரச்னைகளுக்குத் தீர்வு ஆன்மிகம் மட்டும்தானா? ஆன்மிகப் பாதையில் இருந்து விலகத் தூண்டுவது எது? Part – 1

இந்த எண்ணச் சுவடுகளின் தாக்கங்கள்தான் செயல்களாக வெளிபடுகின்றன. இது ஒரு வகையான ஸ்திர நிலை என்பதால், சாதாரணமாக மாற்றிக்கொள்ளவோ, அழிக்கவோ முடிவதில்லை. தேவைப்படும்போது இவை மனதைவிட்டு கொப்பளித்துக்கொண்டு வெளிவருகிறது.
சிலர் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படுவது, சந்தேகப்படுவது, ஆதங்கப்படுவதைப் பார்க்கிறோம்.

சிலர் எதற்கும் அசராமல், மிகப் பெரிய இன்னல்களையெல்லாம் கூட சர்வ சாதாரணமாக கையாள்வதையும் பார்க்கிறோம். கூச்சம், குறும்பு, கிண்டல், அமைதி, உரக்கப் பேசுவது, மென்மையாகப் பேசுவது, கூர்ந்து கவனிப்பது, மரியாதையான நடத்தை, பக்தி, சிரித்துப் பேசுவது, இப்படி ஒவ்வொருவருக்கும் என்று ஒரு தனிப்பட்ட பாவனை (ஸ்வபாவம்) இருக்கிறது. இதை சாதாரணமாக அழிக்கவோ அல்லது அதன் பிரதிபலிப்பிலிருந்து விடுபடுவது என்பதோ சுலபமான காரியம் அல்ல.

Getty Image

பெரும்பாலான நேரங்களில் ஸம்ஸ்க்காரங்களின் உந்துதல்படியேதான் புத்தி முடிவு எடுக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே நாம் பல காரியங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்கிறோம், பின்னர் அவைகளின் (நல்ல அல்லது தீய) விளைவுகளையும், பலன்களையும் ஏற்றுக்கொண்டு அனுபவிக்கிறோம். செம்மைப்படாத நம் எண்ணங்களே நமக்கு எதிராக திரும்பி, எப்படி நம்மை அழிக்கின்றன பார்த்தீர்களா? இவைகளை பிராரர்த கர்மவினைகள் என்கிறது வேதங்கள். ஆக நமக்குள்ளே சேர்த்துவைத்திருக்கும் இந்த ஸ்வபாவங்களை எப்படி சீர்ப்படுத்துவது? செம்மைப்படுத்துவது?

செம்மைப்படாத ஸ்வபாவம் எப்படி ஆபத்தானது?

நம் வளர்ப்பு, படிப்பு, புத்தி, அந்தஸ்து, நாகரீகம் என அனைத்தும் இருந்தாலும் சில நேரங்களில் நாம் மற்றவர்களிடம் கேவலமாக நடந்துகொள்ளும் விதம், ஸம்ஸ்காரங்கள், பிராரப்த கர்ம வினை எப்படி நம்மைக் கட்டுப்படுத்துகிறது என்பதற்கான உதாரணம். அதனால் பலவிதமான சிக்கல்களில் தொடர்ந்து சிக்கி அல்லல்படுகிறோம். அப்படியென்றால் சதா இந்த ஸம்ஸ்க்கார மாயத்தில் சிக்கி உழன்றுக்கொண்டிருக்க வேண்டியதுதானா? தேவை இல்லை. இங்கேதான் ஆன்மிக நிவாரணம் உதவுகிறது.

ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஸ்வபாவம் என்பது நம் உண்மையான இயல்பு அல்ல. நம் மனம் காட்டும், எண்ணங்களால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிலை. ஆனால் இதுதான் நம் உண்மையான இயல்பு என்று ஏற்றுக்கொண்டு இந்த நிலையிலிருந்து விடுபட நாம் முயல்வதே இல்லை. இது நம் உண்மையான இயல்பை நாம் உணரவே முடியாமல் தடுக்கும் மிகப் பெரிய தடை. இதற்கு என்ன நிவாரணம்? நம் உண்மை இயல்பை உணர்வது என்பது, நம் உண்மையான ஸ்வரூபமே தெய்வீகம் என்பதை உணருவது!

எட்டு காரணிகள்

இது எப்படி சாத்தியம்? நம்மை அறியாமையால் இந்த உடல், உள்ளம், எண்ணங்கள், புத்தி கொண்ட கலவையே ‘நான்’ என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறோம், இதுவே நம் இயல்பு என்றும் நம்புகிறோம். இந்தப் புலன் கலவைகளால் ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் நம்முடையது என்று ஏற்றுக்கொண்டு மேலும் அல்லல்படுகிறோம். அதனால் தொடர்ந்து தவறு செய்து பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறோம் என்று வேதங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

நம் அனைவருக்கும் ஒரே ஸ்வரூபம்- தெய்வீகம். சத்சித்ஆனந்த நிலை. ஆத்ம நிலை. ப்ரம்ம நிலை. ஆனால் ஸ்வபாவத்தால் மாறுபடுகிறோம். ஸ்ரீ கிருஷ்ணர் கூறியுள்ள எட்டு (நினைப்பு, இணைப்பு, காமம், க்ரோதம், மறைப்பு, குழப்பம், மறப்பு, புத்திநாசம்) காரணிகளுக்கும் அடிமையானவர்கள் இவைகளின் வெளிப்பாடான ஸ்வபாவங்களுக்கு அடிமையாகிறார்கள்.

Getty Image

நல்ல வாழ்க்கையை கடைபிடிக்க புத்தன் எட்டு வழிகளையும் (அஷ்டாங்க மார்க்கம்), மனதைக் கட்டுப்படுத்த எட்டு யோக (அஷ்டாங்க யோக) முறைகளை பதஞ்சலி முனிவரும் சொல்லிச் சென்றுள்ளனர். அதுபோல நம்மை ஆன்மீகப் பாதையில் முனைப்போடு செல்லத் தடையாக இருக்கும் இந்த எட்டு நாச காரணிகளிலிருந்து விடுபட வேண்டிய முக்கியத்தை நமக்கு அர்ஜுனன் வாயிலாகப் போதித்துள்ளார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

எட்டு காரணிகளில் இருந்து விடுபட வழி

செம்மைப்படாத ஸ்வபாவங்களிலிருந்து விடுபட வேதங்கள் பல வழிகளைக் காட்டியுள்ளது. அந்தக் காலத்தில் குருகுலங்கள் இதற்கான முறையான பயிற்சிகளை கற்றுத் தந்துவந்தன. இன்றைக்கு இவைகளைப் பற்றி படித்து தெரிந்துகொண்டாலும், விளக்கம் சொல்ல, ஆழமான பயிற்சி தர தகுந்த குருகுலங்களோ, குருமார்களோ இல்லை. கற்றுக்கொள்ள நமக்கு நேரமோ, முனைப்போ, வழிமுறைகளோ இல்லை.

பிறகு என்னதான் வழி? ஒன்று, நாமே போராடி முயன்று கற்றுக்கொள்வது. இரண்டாவது, நம்மைப் படைத்தவன் மட்டுமே செய்யக்கூடியது!‘அவித்ய-காம-கர்ம’ என்பது ஒரு ஆபத்தான வாழ்வியல் வட்டம். தவறானக் கல்வி (அவித்ய அல்லது அறியாமை) தேவை இல்லாத இச்சைகளை (காம) உருவாக்கும். இச்சைகளின் எதிர்மறை விளைவே கர்ம வினைப்பலன்கள். நாம் பார்ப்பது, உணர்வது அனைத்தும் நம் உண்மை இயல்பு நிலை பற்றிய அறியாமையால் ஏற்படும் தோற்றங்கள். இதிலிருந்து ‘உண்மையை’ அறிந்து பிரித்து எடுக்க கடும் பயிற்சியும் உழைப்பும் தேவை. மனதை ஒருநிலைப்படுத்தும் தியானம், மந்த்ர ஸ்மரணை, பக்தி வழிபாடு, தர்மகாரியங்கள் செய்வது போன்றவை ஓரளவுக்கு பலன் தரும். இது மிகவும் கஷ்டமான காரியம்.

Getty Image

அவித்ய-காம-கர்ம வட்டத்திலிருந்து விடுதலை பெற அனைத்தும் உணர்ந்த ஒரு பிரம்மகுருவின் உதவியும், ஆசீர்வாதமும், வழிகாட்டுதலும் அவசியம். அத்தகைய குருவை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். அவர் உங்கள் அருகிலேயேகூட இருக்கலாம். எண்ணங்களையும் சுத்தப்படுத்தி, ஸ்வபாவ எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக்கி, சீர் செய்து, செம்மைபடுத்தி, நம்பிக்கை தந்து, தைரியத்துடன் வாழ்க்கைப்பயணம் தொடர குரு வழிவகை செய்வார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry