பிரச்னைகளுக்குத் தீர்வு ஆன்மிகம் மட்டும்தானா? ஆன்மிகப் பாதையில் இருந்து விலகத் தூண்டுவது எது? Part – 1

0
50
What are the factors affecting spiritual development? | Getty Image

1.40 Min Read : நம் எண்ணங்கள்தான் நம்மை இயக்குகின்றன. ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கான எண்ணங்கள் நம் மனதில் தோன்றினாலும், அடிப்படையில் இந்த எண்ணங்கள் அனைத்தையும் இரண்டு வகைகளாக அடக்கமுடியும். ஒன்று, நம்மை இயக்கும் சக்தியான பரம்பொருளைப் பற்றிய சிந்தனை (இது சில நேரங்களில், சிலருக்கு மட்டும்). இரண்டாவது, நம் வாழ்க்கையைப் பற்றியது. இந்த இரண்டு சிந்தனைகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிப்பதில்லை.

பரம்பொருள் சிந்தனை

இது பொதுவாக ஆன்மிக அல்லது தெய்வீகச் சிந்தனையாகும். அதாவது, கடவுள் பக்தி, அல்லது பக்தி சம்பந்தப்பட்ட காரியங்கள், கோவில்கள், தானம், தியானம், போன்றவையாக இருக்கலாம். பக்தி சித்தாந்தத்தைக் கடந்து ஞானமார்கம் தேடுபவர்களுக்கு தங்கள் உண்மையான இயல்பைத் தேடும் ஆத்ம சிந்தனையாக இருக்கலாம். இந்த உயர்நிலை சிந்தனையில்லாதபோது, நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகோடு நம் புலன்கள் உறவாடுவதை மையமிட்டே நம் எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன. இதைச் சார்ந்தே நம் வாழ்க்கைப் பயணமும் அமைகிறது.

வாழ்க்கை பற்றிய சிந்தனை

வாழ்க்கை பற்றிய சிந்தனையில் பெரும்பாலும் நாம், நம் குடும்பம், உறவுகள், நம்மைச் சுற்றியுள்ள உலகம், ஆசைகள், வேட்கைகள், நல்லவை, கெட்டவை, தேவை, தேவையில்லாதவை, பயன்படக்கூடியவை, பயனில்லாதவை போன்ற சிறிய, சம்சார வட்டத்துக்குள் சிக்கிக்கொள்கிறோம். இத்தகைய சிந்தனைகளால், சம்சார வட்டத்துக்குள் இருந்து வெளிவரமுடியாமல் நம்மைத் தடுத்து சீர்குலைக்க வைக்கும் எட்டு காரணிகளைப் பற்றி பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழகாக விளக்குகிறார்.

த்யாயதோ விஷயா புன்ச சங்க தேஷுபஜாயாதே


சங்காத் சஞ்சாயதே காம காமாத் கிக்ரோதோ பிஜாயாதே


க்ரோதாத் பவதி சம்மோஹ சம்மோஹாத் ஸ்முருதி விப்ரமஹ


ஸ்முருதி பரன்ஷாத் புத்தி நாஷோ புத்தி, புத்தி நாஷாத் பிரணஷ்யதி!
      (அத்யாயம் 2, ஸ்லோகம் 62,63)

புலன்களுக்கு சுகத்தைத் தரும் பொருள்களின் மேல் எண்ணங்கள் லயிக்கும்போது (த்யாயதே), மனம் அவைகளோடு ஒட்டிக்கொள்கிறது (சங்க-இணைப்பு). சதா அவைகளைப் பற்றியே நினைத்து வட்டமிட்டுகிறது. ‘அது எனக்குக் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?’ என்று அந்தப் பொருளின் மேல் ஆசையைத் (காமம்) தூண்டுகிறது. இந்த ஆசைச் சிந்தனை தொடரும்போது, ‘அதை அடையாமல் விடப் போவதில்லை’ என்ற ஒரு வேகமும் வெறியும் உண்டாகிறது. ஆசை பேராசையாக மாறுகிறது. அது தடை படும்போதோ, அல்லது கிடைக்காமல் போகும்போதோ ஏமாற்றமாக மாறுகிறது. ஏமாற்றம் கோபத்தைத் (க்ரோதம்) தூண்டுகிறது.

Also Read : தப்பு செஞ்சா சாமி கண்ண குத்துமா? முன்னோர்கள் சொன்னதுல இவ்ளோ அர்த்தம் இருக்கா?

கோபம் நம் மனதை இரண்டு வகையில் பாதிக்கிறது. முதலில் தெளிவாக யோசிக்கும் திறமையை மூடி மறைக்கிறது (சம்மோஹத்-மறைத்தல்). அது குழப்பத்தை ஏற்படுகிறது (விப்ரமஹ-குழப்பம்). இதனால் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்கள் (ஆன்மிக சிந்தனை உட்பட) மறந்துபோகின்றன (பரன்ஷாத்-மறப்பு). இதனால் புத்தி தடுமாறுகிறது (புத்தி நாசம்). சரியான முடிவு எடுக்கமுடியாமல் தவறான பாதையில் சிக்கிக் கொள்கிறோம். ஆன்மிக சிந்தனை தடைபடுகிறது. தவறான பாதையில் சிக்கிக் கொண்ட பிறகு நாம் சந்திக்கும் பிரச்சனைகள் பெரிதாகும்போது அவைகளிலிருந்து விடுபடுவது முக்கியமாகி, அவைகளுக்கும் விடைதேடுவதே நம் முதல் பணியாகிறது.

இந்த முயற்சியில் அவ்வப்போது ஆறுதல் கிடைக்க மீண்டும் எளிய வகையில் உடனடி நிவாரணம் தரும் ஆன்மிகத்தைத் தேடுகிறோம். எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்காத போது ஆன்மிகத்தின் மீதும் தெய்வீகத்தின் மீதும் நம்பிக்கை குறைந்து ஏமாற்றம், வெறுப்பு ஏற்படுகிறது. இதனால்தான் நம்மில் பெரும்பாலோர் ஆன்மிகத்தில் முழு ஈடுபாடு கொள்ள முடிவதில்லை. நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்று இருந்தால் அது ஆன்மிகம் மட்டுமே என்பதையும் நம்மால் ஏற்றுக்கொள்ளவோ உணரவோ முடிவதில்லை. இதை எப்படி சரி செய்வது? அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry