இந்தியாவுக்கான பிரத்யேகமான காலணி அளவு! இனி UK, US காலணி அளவுகள் தேவையில்லை!

0
87
Bha: New Shoe Sizing System To Replace US/UK Sizes | Representative Image

அமெரிக்கா, ஐரோப்பிய அளவில் தயாரிக்கப்படும் காலணிகளை அணியும்போது பலருக்கும் பாதம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதைக் களையும் பொருட்டு Bha(‘பா’) என்ற பெயரில் இந்தியாவுக்கான பிரத்யேகமான காலணி அளவுகள் 2025-ம் ஆண்டு அமலுக்கு வருகிறது.

உலகில் காலணி அணியும் 7 நபர்களில் ஒருவர் இந்தியர். ஆனால், இந்தியர்களுக்கு என தனி காலணி அமைப்போ, அளவோ இல்லை. எனவே, UK மற்றும் US நாடுகளின் காலணி அளவைக் கொண்டே இந்தியாவிலும் செருப்புகள், ஷுக்கள் தயார் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. இந்நிலையில் இந்தியர்களுக்கான தனி காலணி அளவு உருவாக்கப்பட உள்ளது. அந்த காலணி அளவுக்கு ‘Bha'(‘பா’) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, ‘பாரத்’ என்பதன் சுருக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.

மத்திய அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நாடு முழுவதும் 79 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வானது மத்திய வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக விருத்தி துறையிடம் (DPIIT) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Also Read : ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி? சிம்ப்பிள் & சூப்பர் டிப்ஸ்!

மொத்தம் ஒரு லட்சத்து ஆயிரத்து 880 நபர்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், பெண்களுடைய பாத அளவு என்பது 11 வயதிலும், ஆண்களின் பாத அளவு 15 அல்லது 16 வயதில் உச்சபட்ச வளர்ச்சியை அடைகிறது. மேலும், இந்தியர்களுடைய பாதங்கள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கர்களின் பாத அளவைவிட அகலமானதாக இருக்கின்றன.

எனவே தான், அமெரிக்கா, ஐரோப்பிய அளவில் தயாரிக்கப்பட்ட காலணிகளை அணியும்போது பலருக்கும் பாதம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. பல தரப்பட்ட அளவுகள் தேவை என்ற நிலையில், ஆராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டாலும் முடிவில் நிலையான ஓர் அளவு இந்தியாவுக்கு ஏற்புடையதாக இருக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘பா’ அளவு காலணிகள் 5 மில்லி மீட்டர் நீளம் மற்றும் கூடுதல் அகலத்தை வழங்குவதால் இந்தியர்களுக்கு அணிவதற்கு கூடுதல் சௌகர்யமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். ‘பா’ அளவு காலணிகள் குறித்த மக்களின் கருத்துகளையும் அனுபவங்களையும் தெரிந்துகொள்வதற்காக படிப்படியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உளளது. 2025-ம் ஆண்டு முழுமையாகப் புழக்கத்துக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry