இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அறிவிப்பு!

0
42

மோசமான பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) அறிவித்துள்ளது.

அதிபர் கோட்டாபய மற்றும் முழு ராஜபக்ச குடும்பத்தினரும் ராஜினாமா செய்யக் கோரி நாடு முழுவதும் நடைபெறும் பொதுப் போராட்டங்களுக்கு எதிர்க்கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ராஜபக்ச ராஜினாமா செய்யாவிட்டால், அவரை அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு, பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஜேவிபி சட்டமன்ற உறுப்பினர் விஜிதா ஹேரத் கூறினார்.

இந்நிலையில், அதிபர் ராஜபக்ச முன்வைத்த ஐக்கிய அரசாங்கத்தை உருவாக்க ஆதரவு தெரிவிக்காத SJB கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதிகாரப் பரவலாக்கத்தை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, “ராஜபக்சக்கள் பதவி விலக வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும், இல்லாவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவோம்” என்றார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அக்கட்சி கையெழுத்து வாங்க ஆரம்பித்துள்ளது.

ராஜபக்ச அதிபராக நீடிக்கும்போது இடைக்கால அரசாங்கத்திற்கு உடன்பட முடியாது என பிரேமதாசா தெரிவித்துள்ளார். அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்வதற்கும் தயார் எனக் கூறியுள்ள பிரேமதாச, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், SJB கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் ஒரு தொகுப்பை சமர்ப்பித்தார்.

பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் ஒருமித்த கருத்தை எட்டப்படவில்லை. நெருக்கடிக்கு தீர்வு காண கோரியும், பொருளாதார முறைகேடு காரணமாக ராஜபக்சே பதவி விலக கோரியும் அனைத்து தரப்பு மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபர் கோட்டாபயவும், அவரது மூத்த சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் அவர்களது குடும்பமும் பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். இருந்தபோதிலும், பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நமல் ராஜபக்ச உள்ளிட் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தொடர்ந்து ஆட்சியில் உள்ளனர்.

இதற்கிடையில், அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பொதுத்துறை ஊழியர்கள் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல அரசு நிறுவனங்கள் செயல்படவில்லை.

இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் அரசாங்கத்துடன் இணைந்துள்ள 11 கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும், புதிய பிரதமர், அமைச்சரவை மற்றும் அந்தந்த அமைச்சகங்களுக்குச் செயலாளர்களை நியமிப்பதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க தேசிய நிர்வாகக் குழுவை நியமிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளனர்.

Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry