#Timeline: Perarivalan’s arrest and release; வழக்கு முதல் விடுதலை வரை! பேரறிவாளன் நீண்ட பயணம்!

0
264

முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்துவிட்டதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில், பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கு, பேரறிவாளன் கைதுப்படலம் ஆகியவற்றை பார்க்கலாம்.

  • 1991 மே 21 : சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் கொலை செய்யப்பட்டார்.
  • 1991 ஜூன் 11 : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 19.
    1991 ஜூன் 14 : நளினி, அவரது கணவர் ஸ்ரீகரன் என்ற முருகன் கைது செய்யப்பட்டனர்.
  • 1991 ஜூலை 22 : சுதேந்திரராஜா என்ற சாந்தனு கைது செய்யப்பட்டார்.
  • 1998 ஜன 28: இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத்தண்டனை வழங்கியது.
  • 1999 மே 11 : சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு மட்டும் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. 19 பேர் தண்டனை காலத்தை நிறைவு செய்ததாக கூறி விடுவிக்கப்பட்டனர். ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
  • 1999 அக்டோபர் 8: தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென்று நான்கு பேரும் அனுப்பிய மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • 1999 அக்டோபர் 10: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் ஆளுநருக்கு கருணை மனுக்கள் அனுப்பினர்.
  • 1999 அக்டோபர் 29: அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி இவர்கள் நால்வரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகினர்.
  • 1999 நவம்பர் 25: உயர்நீதிமன்றம் ஆளுநரின் முடிவை ரத்து செய்ய வேண்டுமென்று கூறியதுடன் அமைச்சரவை முடிவின் மீதே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியது.
  • 2000 ஏப்ரல் 19: நால்வரின் தூக்கு தண்டனை குறித்து அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை கூடி விவாதித்தது. இதில், நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
  • 2000 ஏப்ரல் 24: தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
  • 2000 ஏப்ரல் 26: நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.
  • 2006 செப்டம்பர் 14: பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த 472 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அதில் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரனுக்கு விடுதலை கிடைக்காததால், நளினி நீதிமன்றம் சென்றார்.
  • 2000 – 2007: மேற்கண்ட காலகட்டங்களில் குடியரசுத் தலைவர்களாக பொறுப்பு வகித்த கே.ஆர்.நாரயணன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோரிடம் தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் நிலுவையில் இருந்தது.
  • 2008 செப்டம்பர் 24: நளினியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீட்டிலும் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
  • 2008 மார்ச் 19: ராஜீவ்காந்தியின் மகளான பிரியங்கா காந்தி, நளினியை வேலூர் சிறையில் சந்தித்து பேசினார்.
  • 2011 ஆகஸ்ட் 12: தூக்கு தண்டனை கைதிகளான முருகன், சாந்தனு, பேரறிவாளனின் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக குடியரசுத் தலைவர் அறிவித்தார். அந்தாண்டு செப்டம்பர் மாதம் அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தகவல்கள் பரவியது.
  • 2011 ஆகஸ்ட் : 11 ஆண்டுகளாக தங்களுடைய கருணை மனுக்கள் நிலுவையில் இருந்ததால், தாங்கள் தினமும் துன்பத்தை அனுபவித்ததாகவும், இதனால் தங்களின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூவரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மூன்று பேரையும் தூக்கிலிட இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர், வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
  • 2014 பிப்ரவரி 18: நீதிபதி சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பல ஆண்டுகள் எந்த காரணமுமின்றி மூன்று பேரின் கருணை மனுவும் நிலுவையில் இருந்ததால் அவர்களது மரண தண்டனையை ரத்து செய்வதாக உத்தரவிட்டது.
  • 2014 பிப்ரவரி 19: தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி ராஜீவ்காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மத்திய புலனாய்வுத்துறை விசாரித்திருப்பதால் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டுமென்பதால் அவர்களுக்கும் தெரியப்படுத்துவதாகவும் அதிரடியாக அறிவித்தார். மூன்று நாட்களில் சிறையில் உள்ள 7 பேரும் விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.
  • 2014 பிப்ரவரி : தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு. 7 பேரையும் மூன்று நாட்களுக்குள் விடுவிக்க மத்திய அரசு தடையாணை பெற்றது. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் விடுவிக்க முடியாது என மத்திய அரசு வாதம்.
  • 2014 ஏப்ரல் 25: இந்த வழக்கில் மத்திய – மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்.
  • 2015 டிசம்பர் 2 : சி.பி.ஐ. விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. அதேசமயம், 161வது பிரிவின்கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறியது.
  • 2016 பிப்ரவரி 24: தந்தை மரணம் காரணமாக முதன்முறையாக நளினி பரோலில் வந்தார்.
  • 2016 மார்ச் 2: 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது தமிழக அரசு.
  • 2016 – தம்மை இந்த வழக்கில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார்.
  • 2017 ஆகஸ்ட் 24: சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பரோல் வழங்கியது.
  • 2018 செப்டம்பர் 6 : 7 பேர் விடுதலை தொடர்பாக 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு அளித்தது.
  • 2018 செப்டம்பர் 9: சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரைத்தது.
  • 2018 செப்டம்பர் 9: அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் நேரில் சந்தித்தார்.
  • 2019 ஜூலை 1 : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுவிக்க கோரி ஆளுநருக்றகு நினைவூட்டல் கடிதம் அனுப்பியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.
  • 2020 ஜனவரி 14: ராஜீவ்காந்தி கொலை வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் இல்லாதது தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிருப்தி.
  • 2020 ஜனவரி 21: குற்றவாளிகள் கருணை மனு மீது தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் தெரிவிக்க உத்தரவு.
  • 2020 நவம்பர் 23 : பேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவு.
  • 2022 பிப்ரவரி 11: சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக பரோலில் வந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு.
  • 2022 மார்ச் 9: 32 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த வழக்கில் முதன்முறையாக பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.
  • 
2022 ஏப்ரல் 27 : பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்ற குழப்பம் நீடிப்பதால் அவரை ஏன் நீதிமன்றமே விடுவிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அமைச்சரவையின் பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மாநில ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று ஒரு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு.
  • 2022 மே 4: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக வரும் 10-ந் தேதிக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்தது.
  • 2022 மே 11: ஆளுநரின் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையை அழிக்கும் வகையில் உள்ளது. பேரறிவாளன் மனுவை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்ப முடியாது; குடியரசுத் தலைவரை தொடர்புபடுத்தவும் முடியாது; தனக்கான கடமையை செய்யத் தவறியதோடு தேவையில்லாமல் குடியரசுத் தலைவரை இழுத்துவிட்டிருக்கிறார் ஆளுநர் என்று தமிழ்நாடு கடுமையாக வாதிட்ட நிலையில், தீர்ப்பு நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
  • 2022 மே 13 : பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக வாதம்.
  • 2022 மே 18: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry