#Breaking: பேரறிவாளன் விடுதலை! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

0
361

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்..

நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு இந்த மனு மீது விசாரணை நடத்தியது.

கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதிகள் ‘‘கடந்த முறை இந்த வழக்கு விசாரனைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கினோம். அதில் ஏதேனும் முடிவு செய்து உள்ளீர்களா?’’ என கேள்வி எழுப்பினர். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நடராஜ், இந்த வழக்கில் சில வாதங்களை முன்வைக்க உள்ளதாக கூறினார். அப்போது நீதிபதிகள், ஆளுநர், அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து மத்திய அரசு வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கில் விடுதலை தொடர்பான அதிகாரம் 72-வது அரசியல் சாசனத்தின்படி மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. ஓரு வழக்கின் விசாரணையை எந்த விசாரணை அமைப்பு மேற்கொள்கிறதோ, அதைப் பொறுத்தே அதில் முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு என்பது முடிவு செய்யப்படும். எனவே இவ்வழக்கில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியதால் இந்த வழக்கில் நிவாரணம் வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு. அதன்படி மாநில அரசின் வரம்புக்குள் வரும் அமைப்புகள் விசாரித்து அதில் தண்டனைப்பெற்றவர்களை, தண்டனை காலத்துக்கு முன்னரே விடுவிப்பது தொடர்பான முடிவை மாநில அரசு எடுக்கலாம். ஆனால் பேரறிவாளன் விவகாரத்தில் அவ்வாறு இல்லை’’ என்று வாதிட்டார்.

தொடர்ந்து நீதிபதிகள், தமிழக அமைச்சரவையின் முடிவை குடியரசுத் தலைருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த போது என்னென்ன சட்டப்பிரிவுகளின் கீழ் அதிகாரம் இருக்கிறது என்ற விவரங்களை ஏன் குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளார்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பில், ஆளுநரே இந்த விவகரத்தில் கையெழுத்திட்டு முடித்திருக்க வேண்டும், ஆனால் அதைவிடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அவரையும் இந்த வழக்கினுள் இழுத்து விட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அமைச்சரவையின் முடிவிற்கு கையொப்பம் இட வேண்டியது ஆளுநரின் வேலை. ஆனால் அதனை செய்யாமல் ஆவணங்களை கிடப்பில் போட்டு வைத்திருந்தார் எனவும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொள்ளாததன் மூலம் மிகப்பெரிய அரசியல் சாசன பிழையை தமிழக ஆளுநர் செய்துவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கின் மற்ற வாதங்களை அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு எனக் கருத்து தெரிவித்ததோடு, சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், சகோதரி உள்ளிட்டோர் ஆனந்த கண்ணீரில் திளைத்துள்ளனர். தாய், சகோதரி உள்ளிட்டோர் பேரறிவாளனுக்கு இனிப்புகளை ஊட்டி நெகிழ்ச்சி அடைந்தனர். தீர்ப்பு குறித்து பேசிய தாயார் அற்புதம்மாள், இந்த தீர்ப்பு எப்பொழுதோ கிடைத்திருக்க வேண்டும், இது கால தாமதம்தான்; ஆனால் மகிழ்ச்சி. மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை,’என்றார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry