ரெய்டு முடிந்த சூட்டோடு ஆடிட்டர் கைது! கார்த்தி சிதம்பரம் வழக்கில் பிடியை இறுக்கும் சிபிஐ!

0
174

விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சிபிஐ கைது செய்துள்ளது. சோதனை நடந்து முடிந்த நிலையில் இந்த அதிரடி நடவடிக்கையை சிபிஐ எடுத்துள்ளது.

சட்ட விரோதமாக இந்தியாவில் பணியாற்ற சீனர்கள் 263 பேருக்கு விசா பெற்றுத்தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்கு புதிவு செய்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை, மும்பை, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் 10 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

சிபிஐயின் இந்த அதிரடி சோதனையின் போது, ப.சிதம்பரம் ராஜஸ்தான் மாநிலத்திலும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருந்ததாக கூறப்படுகிறது. சென்னை வீட்டில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மட்டும் இருந்தார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தினர்.

Also Read : சீனர்களுக்கு சட்டவிரோத விசா! நண்பருக்கு உதவப்போய் சிக்கினாரா கார்த்தி சிதம்பரம்?

இந்நிலையில், சீனர்களுக்கு சட்டவிரோத விசா வாங்கி தந்ததற்கு ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சென்னையில் சிபிஐ கைது செய்துள்ளது. சிபிஐயின் இந்த நள்ளிரவு நடவடிக்கை ப. சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த 2009-2014-ல் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, பஞ்சாப் மாநிலத்தில் தால்வாண்டி சாபோ மின்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பஞ்சாபின் மான்சா நகரில் அமைக்கப்பட்ட இந்த 1,980 மெகாவாட் திறனுடைய மின் திட்டமானது, சீனாவைச் சேர்ந்த ஷான்டாங் எலெக்ட்ரிக் பவர் கன்ஸ்டிரக்சன் கார்ப் என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது.

மின் திட்டத்தைக் செயல்படுத்த தாமதம் ஏற்பட்டதால், சீனாவிலிருந்து சீன தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டுவர அந்த நிறுவனம் முயற்சித்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த உச்ச வரம்புக்கு மேல் விசாக்கள் தேவைப்பட்டன. எனவே, சம்பந்தப்பட்ட சீன நிறுவனம் கார்த்தி சிதம்பரத்தை அவரது நெருங்கிய கூட்டாளியும் ஆடிட்டருமான பாஸ்கர் ராமன் மூலம் அணுகியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அரசு விதிகளை மீறி சீன நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு 263 விசாக்கள் ஒதுக்கப்பட்டதாகவும், இதற்காக 50 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சிபிஐ கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry