ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை! சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிவு!

0
297

ஸ்ரீருத்ர வன்னியர் சேனா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, ‘ஜெய்பீம்’ படத்தில் வன்னியர்களை இழிவுப்படுத்தும் காட்சிகள் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரை வேளச்சேரி காவல்துறை ஏற்கவில்லை என கூறி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சந்தோஷ் மனு தாக்கல் செய்தார். அதில், வன்னியர் சமூகத்தை இழிவு படுத்தும் நோக்கத்தில் ஜெய் பீம் படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசாத வட இந்தியரை கன்னத்தில் அறையும் காட்சி மூலமாக கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள்.

பச்சையம்மாள் என்ற பெயர் வன்னியர் சமூகத்துக்கு மட்டுமே வைக்கப்படும் பெயர் எனும் போது அதனை இருளர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வைத்திருப்பது எங்களை வேண்டுமென்றே அவமானப்படுத்துவது போல உள்ளது எனவும் சந்தோஷ் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வன்னியர்களை இழிவுப்படுத்தும் முகாந்திரம் இருக்கிறது எனக் கூறியதுடன், படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கையை வருகிற 20ம் தேதிக்கு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக, சூர்யா மன்னிப்பு கோர வேண்டுமெனவும், இல்லாவிட்டால் ரூ.5 கோடி இழப்பீடு வழங்கவும் வேண்டுமென வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீசும் அனுப்பப்பட்டு உள்ளது.

 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry