சீனர்களுக்கு சட்டவிரோத விசா! நண்பருக்கு உதவப்போய் சிக்கினாரா கார்த்தி சிதம்பரம்?

0
169

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பரிந்துரையின் பேரில் சீனாவை சேர்ந்த 263 பேருக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் சோதனை நடைபெற்றது.

 இதேபோன்று டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கர்நாடகாவில் மூன்று இடங்கள் மற்றும் மும்பை, பஞ்சாப், ஒடிசாவில் தலா ஒரு இடம் என மொத்தம் 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றுள்ள நிலையில், அவரது இல்லத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது.

 சிபிஐ ரெய்டு முடிவடைந்துள்ள நிலையில், கார்த்தி சிதம்பரத்தை 2-வது குற்றவாளியாக சேர்த்து சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. முதல் குற்றவாளியாக பாஸ்கர ராமன் என்பவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

Talwandi Sabo Power Project

2011-ம் ஆண்டு ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில், சீனர்கள் 263 பேருக்கு முறைகேடாக விசா வழங்க கார்த்தி ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ கூறியுள்ளது. மின்னஞ்சல் பரிமாற்றம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.

 இந்த சோதனை தொடர்பாக கார்த்தி சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில், இதுவரை எத்தனை முறை சோதனை நடைபெற்றது என்ற கணக்கு நினைவில் இல்லை, சிபிஐ சோதனையை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே. டெல்லி மற்றும் சென்னையில் தனது வீடுகளில் சிபிஐ நடத்திய சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சோதனையின் போது சிபிஐ அதிகாரிகள் காண்பித்த முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் இல்லை என்றும், சோதனை நடத்த வந்த தருணம் சுவாரஸ்யமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பாஸ்கரராமன், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் மட்டுமின்றி நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. இவர், பஞ்சாப்பில் உள்ள தல்வாண்டி சபோ பவர் பிராஜக்டின் (Talwandi Sabo power projectன) முக்கிய நிர்வாகி என கூறப்படுகிறது. இதில் பணியாற்றுவதற்காக, 263 சீனர்களுக்கு சட்டவிரோத விசா வழங்க கார்த்தி சிதம்பரம் பரிந்துரைத்தார் என்பதே குற்றச்சாட்டாகும். மும்பையைச் சேர்ந்த பெல் டூல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலமாக இதற்கான லஞ்சப் பணம் கைமாறியதாக சிபிஐ தரப்பு கூறுகிறது.

சோதனையின்போது பாஸ்கரராமனுக்கு சொந்தமான கணினி ஹார்ட் டிரைவில் இருந்து ரூ.50 லட்சம் லஞ்சப் பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதாகவும், அதன் அடிப்படையிலேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. 120-பி (குற்றச் சதி), 477ஏ (கணக்குகளைப் பொய்யாக்குதல்) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 8 மற்றும் 9 ஆகியவற்றின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் மீதும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற லஞ்சம் பெற்றுக்கொண்டு இவர்கள் உதவினார்கள் என்பதே புகாராகும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry