‘குரூப்-2’ தேர்வர்கள் கவனத்துக்கு! ஜுன் இறுதியில் ரிசல்ட்! செப்டம்பரில் மெயின் தேர்வு!

0
171

குரூப்-2 தேர்வு தொடர்பாக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள், தேர்வர்களுக்கான நெறிமுறைகள் பற்றி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய‌ பாலச்சந்திரன், “குரூப் 2 மற்றும் குரூப் 2A ஆகிய தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். முதல்நிலைத் தேர்வானது வரும் 21ம் தேதி காலை 9.30 மணிமுதல் 12.30 மணிவரை நடைபெறும். தேர்வர்கள் அனைவரும் 8.30 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். 9 மணிக்கு மேல் வரக்கூடிய தேர்வர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 12.30 மணிக்கு தேர்வுகள் முடிவுற்றாலும், 12.45 வரை தேர்வர்கள், அந்த அறையிலேயே இருக்க வேண்டும்.

தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண்கள் 300. தமிழ் அல்லது ஆங்கிலப் பகுதியிலிருந்து 100 வினாக்கள் இடம்பெறும். பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்கள் கேட்கப்படும். கணிதப் பகுதியிலிருந்து 25 வினாக்கள் இடம்பெறும். இந்த 200 வினாக்களும் 10 ஆம் வகுப்பு தரத்தில் இருக்கும்.

மொத்தம் 11,78,175 பேர் குரூப் 2 தேர்வு எழுத இருக்கிறார்கள். தற்போது வரை 9.10 லட்சம் பேர் தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். ஆண்கள்-4,96,247, பெண்கள் 6,81,880, மூன்றாம் பாலினத்தவர்கள் 48, மாற்றுத் திறனாளிகள் 14,531 என்ற அளவில் தேர்வர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ 1,800 பேர் காத்திருக்கிறார்கள்.

மொத்த தேர்வர்களில் 79,942 பேர் தமிழ் வழியில் பயின்றதாக விண்ணப்பித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், 117 மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வு நேரங்களில் சோதனை செய்வதற்காக 6,400 சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சென்னையில் உள்ள 7 தேர்வு மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுதுகிறார்கள். மிகக் குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 மையங்களில் 5,624 பேர் தேர்வு எழுதுகிறார்கள். ஜூன் மாத இறுதியில் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மெயின் தேர்வு 2022 செப்டம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வுக்கு முதல்நிலைத் தேர்விலிருந்து 1:10 என்ற அடிப்படையில் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.”

 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry