பிற மொழிகளை கற்பதிலோ, பேசுவதிலோ தவறில்லை! கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கய்யா நாயுடு கருத்து!

0
312

சென்னை – ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார்.

அந்த சிலையின் கீழ் 5 கட்டளைகள் எழுதப்பட்டுள்ளது. “வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம், அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி” என்று எழுதப்பட்டுள்ளது.

வெங்கய்யா நாயுடுதான் பொருத்தமானவர்

சிலை சிறப்பை தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும், எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும், எம்.பி-க்களும் பங்கேற்றனர். விழாவில் தலைமை உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், வாழ்வில் ஒரு பொன் நாள் என்று எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாள் இந்நாள். தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையில் கலைஞர் சிலை அமைந்திருப்பது மிகவும் பொருத்தமானது. சட்டப்பேரவையாக கலைஞர் உருவாக்கியதுதான் இந்த வளாகம்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு நட்புக்குரிய இனிய நண்பராக இருந்து வருகிறார். கலைஞர் கைது செய்யப்பட்ட போது அன்றைய ஆட்சியாளர்களை கடுமையாக கண்டித்தவர் வெங்கைய நாயுடு. கலைஞர் சிலையை யாரை வைத்து திறக்கலாம் என்று ஆலோசித்த போது மனதில் முதலில் தோன்றியவர் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தான். கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கைய நாயுடு.

இலக்கியம் திரைப்படம் என கால் பதித்த அத்தனை துறைகளிலும் சாதித்தவர் கருணாநிதி. இன்று காணக் கூடிய நவீன தமிழ்நாடு கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் பல குடியரசுத் தலைவர்களை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. திமுகவை தனது இறுதி மூச்சுவரை காப்பாற்றியவர்” என்றார்.

எந்த மொழியையும் அடக்கவோ, ஒடுக்கவோ கூடாது

விழாவில் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு விழா பேருரையாற்றினார். இந்த உரையில், “கருணாநிதி சிலையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் ஆற்றல் வாய்ந்தவர்களில் முதன்மையானவர் கலைஞர். அடித்தட்டு மக்களின் நலனையே நோக்கமாகக் கொண்டு பாடுபட்டவர் கலைஞர்.

மிகச் சிறந்த நிர்வாகியாக விளங்கியவர். நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் கலைஞரும் ஒருவர். ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர். சமூக நீதிக்காக பாடுபட்டவர். கொள்கை, செயல்படும் விதம், சுறுசுறுப்பு என அனைத்து விதத்திலும் சிறப்பானவர். மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன். சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர்.

கருணாநிதியின் சிலையை திறந்து வைத்ததில் பெரும் மகிழ்ச்சி. எனது மாணவர் பருவத்தில் இருந்தே அண்ணா, கருணாநிதியின் பேச்சை கேட்டுள்ளேன். நான் அவருடன் கலந்துரையாடி இருக்கிறேன். கருணாநிதியின் சிந்தனையால் இளம் வயதிலேயே மிகவும் ஈர்க்கப்பட்டேன்.
சென்னை என் மனதுக்கு நெருக்கமானது.

அரசியலில் இருந்தபோது கருணாநிதியுடன் நீண்ட காலம் பயணித்துள்ளேன். அவருடன் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கிறது. அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். எந்தக்கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்கள் மக்களுக்காக உழைப்பதால் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் தாய் மொழி என்பது பார்வைக்கு சமமானது. பார்வை இழந்தால் எப்படி எதுவும் தெரியாதோ, அதுபோன்ற நிலையே தாய் மொழியை இழந்தால் ஏற்படும். தாய்மொழியை போற்ற வேண்டும். வளர்க்க வேண்டும். எங்கு சென்றாலும் பிறந்த ஊரையும், தாய்மொழியையும் யாரும் மறக்கக்கூடாது.

பிற மொழிகளை கற்பதிலோ, பேசுவதிலோ தவறில்லை. ஆனால், தாய்மொழிக்கு முன்னுரிமை தர வேண்டும். பிற மொழிகளை எதிர்க்க வேண்டாம்; நம் மொழியை ஆதரிப்போம். பிற மொழிகளை மக்களிடம் திணிக்கக் கூடாது. எந்த மொழியையும் அடக்கவோ, ஒடுக்கவோ கூடாது. நீங்கள் இந்தியாவின் சக்தி வாய்ந்த முதல்வர்களில் ஒருவர் (மு.க.ஸ்டாலின்). இந்த விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு நன்றி” என்று பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry