பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 2026-ல் பாமக ஆட்சி! பாமக 2.0 என்ற புதிய செயல்திட்டம்! 

0
354

பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஜி.கே.மணி தலைமையில், டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் திருவேற்காட்டில் நடைபெற்றது.

அன்புமணியை தலைவராக தேர்வு செய்வதற்கான சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வன்னியர் சங்க தலைவர் பு.த.அருள்மொழி, பேராசிரியர் தீரன், தேர்தல் பணிக்குழு தலைவர் ஏ.கே.மூர்த்தி, சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவபிரகாசம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யை தலைவராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது.  தீர்மானத்தை ஜி.கே.மணி வாசித்தார். அதில், “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை 25 ஆண்டுகள் அலங்கரித்த நிலையில், தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கும், ஆட்சிப் பொறுப்புக்கும் அழைத்து செல்லும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்க வேண்டும்  என்ற விருப்பத்தை ஜி.கே.மணி கட்சியின் நிறுவனரிடமும், நிர்வாகிகளிடமும் தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக யாரை அமர்த்தலாம் என்று தலைமை நிலைய நிர்வாகிகள் மட்டத்தில் கலந்தாய்வு மேற்கொண்ட போது, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக, தற்போதைய இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் மேனாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த விருப்பமாகவும், வேண்டுகோளாகவும் இருந்தது.

தமிழ்நாட்டில் வலிமையான அரசியல் கட்சியாகவும், தமிழகத்தை ஆட்சி செய்யும் கட்சியாகவும் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தொண்டர்களின் ஆவலாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கும் நிலையில், அந்தப் பணிக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் பொருத்தமானவராக இருப்பார் என பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கருதுகிறது.

அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சியை கடந்த 25 ஆண்டுகளாக வழி நடத்திச் சென்ற ஜி.கே.மணிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த சிறப்பு பொதுக்குழு, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்கிறது.” என்று ஜி.கே. மணி தீர்மானத்தை வாசித்தார்.

இந்தத் தீர்மானத்தை வழிமொழியும் வகையில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவோசை எழுப்பி ஆதரவளித்தார்கள். இதையடுத்து பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

பின்னர் தன்னை தலைவராக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்து ஏற்புரை நிகழ்த்திய டாக்டர் அன்புமணி, புதியதோர் தமிழகம் செய்வோம். ஒரு சொட்டு மது இல்லாத, ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது, இலவச தரமான கட்டாய கல்வி அளிப்பது, தரமான மருத்துவ வசதி அளிப்பது, 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்றுவது, தொழில், வேளாண் வளர்ச்சியை ஏற்படுத்துவது, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைக்கு உத்தரவாதம் அளிப்பது ஆகியவையே எனது லட்சியமாக இருக்கும் என்றார்.

டாக்டர் அன்புமணியை வாழ்த்திப் பேசிய கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “செயலாற்றல் மிக்க இளம் தலைவரை பா.ம.க.வுக்கு தந்துள்ளேன். டெல்லியில் ஒரு இளம் தலைவர் கட்சி தொடங்கி ஒரே வருடத்தில் ஆட்சியை பிடித்தார். நாம் 1996 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 4 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றினோம்.

25 வருடம் கழித்தும் 5 எம்.எல்.ஏ.க்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு காரணமும் நீங்கள்தான். நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரித்து மாவட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தொலை நோக்கு திட்டங்களுடன், தமிழகத்தின் நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கி மக்களை சந்தித்து வருகிறார் அன்புமணி. அவரது திட்டங்களையும், செயல்பாடுகளையும் மக்கள் வரவேற்கிறார்கள். இனிவரும் காலம் பா.ம.க.வின் காலம். நீங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தால் 2026 தேர்தலில் அன்புமணி தலைமையில் பா.ம.க. ஆட்சி அமைவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry