இலவசங்கள் இலவசமாக வழங்கப்படவில்லை! இலவசங்களுக்கும் விலை இருக்கிறது! ஆர்பிஐ உறுப்பினர் கருத்து!

0
141

பிடிஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு உறுப்பினர் அசிமா கோயல், “இலவசங்கள் எல்லாம் எப்போதும் இலவசமாக வழங்கப்படவில்லை. அரசியல் கட்சிகள் இலவசங்கள் பற்றி வாக்குறுதி கொடுத்தால் அவர்கள் தான் அதற்கான நிதி ஆதாரம் பற்றி வாக்காளர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும்.

மாறி மாறி அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கும், போட்டி வெகு ஜன ஈர்ப்பு வாக்குறுதிகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இலவசங்கள் உண்மையில் உங்களுக்கு இலவசமாகக் கிடைப்பதில்லை. மானியங்களாக வழங்கப்படும் இலவசங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் அத்தகைய மானியங்கள் உற்பத்தியை பாதித்து மறைமுக செலவை அதிகரிக்கிறது. பஞ்சாபில் இலவசம் மின்சாரம் கொடுத்ததால் அங்கே நிலத்தடி நீர் அளவு குறைந்ததுதான் மிச்சம். இலவசங்களுக்கு செலவிடுவதால் மக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரம், காற்று, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போய்விடும். அதனால் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கும்போது அதற்கான நிதி எங்கிருந்து வரும் என்பதையும் வாக்காளர்களுக்கு விவரிக்க வேண்டும். இதனால் வெகுஜன ஈர்ப்பு வாக்குறுதிகளால் மக்கள் ஈர்க்கப்படுவது குறையும்.

இந்நிலையில், தற்போது திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, மக்கள் இலவசங்களை விரும்பவில்லை, அதனால் இலவசங்கள் தேவையில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அளித்த நேர்காணல் வைரலாகி வருகிறது.

முன்னதாக, அண்மையில் பானிப்பட்டில் 2ஜி எத்தனால் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்துப் பேசிய பிரதமர் மோடி, “அரசியலில் சுயநலம் இருந்தால், இலவச பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதாக யார் வேண்டுமானாலும் அறிவிக்கலாம். இலவசங்களால் நமது குழந்தைகளின் உரிமைகளைப் பறிப்பதோடு, நாடு தற்சார்பு அடைவதையும் தடுக்கும்.

இதுபோன்ற சுயநல கொள்கைகளால், நேர்மையாக வரி செலுத்துவோரின் சுமையும் அதிகரிக்கும். நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தெளிவான நோக்கம் மற்றும் உறுதிப்பாடு தேவை. இதற்கு கடின உழைப்புடன் சரியான கொள்கை மற்றும் பெருமளவிலான முதலீடுகளும் தேவை என்று பேசியிருந்தார்.

Also Read : உறவினர் நிறுவனத்துக்கு அரசு ஆவணத்தை தூக்கிக் கொடுப்பதா? முதலமைச்சர் ராஜினாமா செய்ய அதிமுக வலியுறுத்தல்!

இதனிடையே, தேர்தல் நேரத்தில் இலவசங்கள் வழங்கும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை கோரி வழக்குரைஞர் அஷ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போது தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நலத்திட்ட உதவிகள் நலிவுற்ற மக்களை கைதூக்கி விடுகின்றன, அவை இலவசம் ஆகாது என உச்ச நீதிமன்றத்தில் திமுக தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற வழக்கு பிரதமரின் பேச்சு, ஆர்பிஐ நிதிக் கொள்கை குழு உறுப்பினர் கருத்தால் இலவசங்கள் தொடர்பான விவாதம் சூடுபிடித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry