ஆன்லைனில் புலிக்குட்டி விற்பனை! ஒரு குட்டி ரூ.25 லட்சம்தான்! சிறையில் கம்பி எண்ணும் இளைஞர்!

0
49

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பலரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு கடந்த சில நாட்களாக, 3 மாத புலிக்குட்டிகள் ரூ.25 லட்சத்துக்கு விற்பனைக்கு உள்ளன. தேவைப்படும் நபர்கள் உடனடியாக அணுகலாம். இது முற்றிலும் உண்மையான தகவல். 10 நாட்களுக்குள் புலிக்குட்டி வழங்கப்படும் என்ற விளம்பர பதிவு வைரலானது.

இதுகுறித்து வேலூர் வனத்துறை அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த பார்த்திபன் (வயது 24) என்பவர் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வைத்திருந்த புகைப்படம் மற்றும் அவரின் பதிவுதான் பலரின் செல்போனில் வைரலானது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்போது வேலூர் சார்பனாமேட்டில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து வேலூர் வனச்சரகர் ரவிக்குமார் தலைமையிலான வனக்காவலர்கள் பார்த்திபனை வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், பார்த்திபனும், சென்னை அம்பத்தூரை சேர்ந்த தமிழ் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். சென்னையில் தமிழ் பெட்ஷாப் வைத்துள்ளார். தமிழகத்தில் விலங்குகள், பறவைகள் கண்காட்சி எங்கு நடைபெற்றாலும் அவர் அங்கு சென்று பிடித்த விலங்குகள் மற்றும் பறவைகளை வாங்கி அதனை ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதும், அதற்கு இடைத்தரகராக பார்த்திபன் செயல்பட்டுள்ளார் என்பதும், அவரிடம் புலிக்குட்டிகள் உள்ளிட்ட எவ்வித விலங்குகளோ, பறவைகளோ இல்லை என்பதும் தெரியவந்தது. விசாரணைக்கு பின்பு பார்த்திபன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read : நெற்பயிரை காப்பபற்ற கோவை வேளாண் பல்கலை. முக்கிய அட்வைஸ்! வேளாண் படிப்புகளுக்கு 10ம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியீடு!

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பார்த்திபன் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் பதிவிட்டது விளம்பர மோசடியா? அல்லது உண்மையில் அவருடைய நண்பர் தமிழ் உடன் சேர்ந்து வனவிலங்குகள் விற்பனை செய்கிறாரா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவரின் செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்து வருகிறோம். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த தமிழிடமும் சென்னை வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry