கொள்முதல் பாலுக்கான விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, ஆவின் சார்ந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்குவதை நிறுத்தும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 7,000 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து, ஆவின் நிறுவனத்துக்கு தினமும் 45 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள், ஆவினைவிட லிட்டருக்கு ரூ.10 முதல் 20 வரை கூடுதல் விலை வழங்குவதால், ஆவினுக்கு பால் ஊற்றும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தற்போது நாள் ஒன்றுக்கு 26 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவினுக்கு வரத்தாகிறது.
கால்நடை பராமரிப்பு, கலப்பு, உலர், பசுந்தீவனங்கள் உள்ளிட்ட இடுபொருட்களின் செலவினங்கள் ஆண்டுக்கு ஆண்டு பன்மடங்கு அதிகரித்து வருவதால் பசுக்களை முறையாக பராமரிப்பதற்கான செலவினங்களை ஈடுசெய்ய முடியவில்லை என ஆவினுக்கு பால் ஊற்றும் விவசாயிகள் கூறி வருகின்றனர். கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என அரசுக்கு அவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர். கோரிக்கை ஏற்கப்படாக நிவையிவ், அவர்களில் பலர் ஆவினை புறக்கணித்து தனியார் பால் நிறுவனங்களை நாடுகின்ற சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
கொள்முதல் விலையை உயர்த்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறை அமைச்சர் நாசர், ஆணையாளர் சுப்பையா முன்னிலையில் (வியாழக் கிழமை)16-ம் தேதி பால் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. முதல்வருடன் கலந்து பேசி சொல்வதாக விவசாயிகளை அமைச்சரும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். பிறகு முதல்வரிடம் அழைத்துச் செல்வதாகக் கூறி காக்க வைத்துள்ளனர். அதன்பிறகு, அமைச்சரோ, அதிகாரிகளோ கண்டுகொள்ளாததால், ஏற்கனவே அறிவித்தபடி இன்று முதல் ஆவின் சார்ந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்குவதை நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் கறவை மாடுகளுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். பல ஊர்களில் பாலை சாலையில் கொட்டி விவசாயிகள் தங்களது எதிர்ப்பையும், வேதனையையும் பதிவு செய்தனர். ஆவின் நிர்வாகத்தினர் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், கால்நடை தீவனங்களை 50% மானிய விலையில் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்போது முழக்கங்களும் எழுப்பப்பட்டன. போராட்டம் நீடிக்கும்பட்சத்தில் பால் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு சில சங்கங்கள் மட்டுமே பால் நிறுத்தப் போராட்டம் நடத்துவதால் தமிழகத்தில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்கிற செய்திகள் பால்வளத்துறை அமைச்சர் தரப்பில் இருந்து வெளியாகிறது. பிரச்சினைக்கு தீர்வு காண முயலாமல் அமைச்சரே தவறான தகவல்களை வெளியிடுவது மிகுந்த வருத்தமளிக்கிறது.
போராட்டம் முடித்து வைக்கப்படாமல் தொடருமானால் வெள்ளிக்கிழமை (18.03.23) முதல் தமிழகம் முழுவதும் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஏனெனில் நேற்று (16.03.23) வாங்கிய பாலினை வைத்து இன்று (17.03.23) மதியமும், மாலையிலும் ஆவின் நிர்வாகத்தால் ஓரளவிற்கு சமாளிக்க முடியும்.
ஆனால் இன்று பால் கொள்முதல் சரியாக நடைபெற்று ஒன்றியங்களுக்கு வந்தால் தான் அதை சமன்படுத்தி சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு இரவுக்குள் அனுப்ப முடியும். அவ்வாறு நடைபெறவில்லை என்றால் ஆவின் பால் விநியோகமானது கடுமையாக முடங்கும் நிலை உருவாகியுள்ளதை அரசுக்கு மறைத்து அப்படியெல்லாம் நடைபெறாது எனக் கூறி மக்களை ஏமாற்றுவதோடு, அரசுக்கும் மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்த அமைச்சர் முயல்வது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளை முதலமைச்சர் அழைத்து பேச்சுவார்த்தை நடததி பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
அடாவடி அமைச்சரால் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம். தூக்கத்தில் இருக்கும் விடியா அரசு. @EPSTamilNadu @EPS4TN @draramadoss @annamalai_k @GKVasanMp @SeemanOfficial pic.twitter.com/GBWUZ8Pt0Y
— VELS MEDIA (@VelsMedia) March 17, 2023
ஆவின் நிறுவனம் 1 லிட்டர் பசும்பாலுக்கு 35-ம், எருமைப்பாலுக்கு ரூ.44 மட்டுமே வழங்குகிறது. அந்தத் தொகையும் பாலின் கொழுப்புச்சத்து, எஸ்எஃப் குறைவு போன்ற காரணங்களைக் கூறி பசும்பாலுக்கு அதிகபட்சமாக ரூ. 33.60-ம், எருமைப்பாலுக்கு 40 மட்டுமே பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதேசமயம் தனியார் நிறுவனங்கள் தாங்கள் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.48 முதல் ரூ. 50 வரையிலும், எருமைப்பாலுக்கு ரூ.60 முதல் ரூ. 80 வரையிலும் விலை தருகிறார்கள். இதனடிப்படையில், கொள்முதல் செய்யப்படும் பசும்பால் லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப்பாலுக்கு ரூ.51-ம் ஆவின் நிறுவனம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry