இதுதொடர்பாக ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “கல்வி வளர வேண்டும். கல்வி வளர்வதற்கு நீங்கள்தான்(ஆசிரியர்கள்) காரணமாக இருக்கிறீங்க. உங்கள் கையில் தான் இருக்கு. நாங்கள் என்னதான் மேடையில் பேசிட்டு போனாலும் அங்க போய் மாணவர்களை பார்த்து சொல்லித்தருபவர்கள் நீங்கள் தான்.
ஒரு காலத்தில் வாத்தியார்னா பிரம்பு எடுத்து அடிப்பாங்க, இப்ப வாத்தியார பிரம்பெடுத்து அடிக்கிற அளவு மாணவர்கள் மாறி இருப்பது இந்த காலம். காலத்தின் மாற்றம்…! அதையெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணித்தான் நீங்க பாடம் சொல்லித் தரணும். அந்த அளவுக்கு நீங்கள் வளர்ச்சி அடைய வேண்டும்.” என்று சொல்கிறார்.
மாணவர்கள் பிரம்பை எடுத்து அடித்தால் ஆசிரியர்கள் அட்ஜஸ்ட் செய்து கொண்டு அதற்கான வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற பேச்சை கேட்டு, இப்படிப்பட்ட உயர்கல்வி துறை அமைச்சரை பெற்றிருக்கக் கூடியது தமிழ்நாட்டின் சாபக்கேடு , வெட்கக்கேடு என்ற விமர்சனத்தை கேட்கும்போது எங்கள் நெஞ்சம் பதறுகிறது.
மாணவர்கள் அடித்தால் ஆசிரியர்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் – உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சர்ச்சைப் பேச்சு.@EPSTamilNadu @EPS4TN pic.twitter.com/EuDpBgtMfZ
— VELS MEDIA (@VelsMedia) June 2, 2023
மகளிர்க்கு நகரப் பேருந்தில் கட்டணமின்றி பயணம் செய்யும் உரிமையினை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். மகளிர் மத்தியில் அந்தத் திட்டம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. ஆனால் ஒரு கூட்டத்தில் அமைச்சர் க.பொன்முடி பேசுகிற பொழுது அதை சாதனையாக விளக்கிக் கூறாமல், கேலியும் கிண்டலுமாக மகளிர் கூட்டத்தைப் பார்த்து பஸ்ல ஓசில தான வந்தீங்க..! என்று ஒரு முறை சொல்லிவிட்டு, பெண்களைப் பார்த்து ஓசி… ஓசி என்று பலமுறை சொல்கிறார்.
பதறிப்போன புறநானூற்றுப் பெண்கள் அங்கேயே எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள். சாதனை போய் பெண்கள் மத்தியில் வாக்கு வங்கிக்கு ஒரு சோதனையினை ஏற்படுத்திவிட்டார். இன்னொரு முறை சுற்றுப்பயணத்தில், குறைகளை சொன்ன மக்களைப் பார்த்து அமைச்சர் நீங்கள் என்ன ஓட்டு போட்டு கிழிச்சிங்களா?.. என்று கேட்கிறார். வாக்களிக்காதவர்களுக்கும் நான்தான் முதலமைச்சர் என்று பெருமிதமாக மு.க. ஸ்டாலின் சொல்லி வருகிறார். ஆனால் இவர் ஓட்டு போட்டு கிழிச்சீங்களா? என்று பேசி வருகிறார். இந்த அதிருப்தியும் மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
Also Read : அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மூடுவிழா? பெற்றோர், கல்வியாளர்கள் கடும் அதிருப்தி!
முதலமைச்சரின் துணைவியார் கலந்துகொண்ட ஒரு நூல் வெளியீட்டு விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பேசும்போது, “மனைவி அமைவதெல்லாம் வரம். முதல்வர் அரசியலுக்கும் ஆலோசனை சொல்லும் திறமைமிக்கவர்” என்ற இவரின் பேச்சு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதற்கு ஒரு ஆதாரத்தை அமைத்துக் கொடுத்தது.
க. பொன்முடி பேராசிரியராக பணியாற்றிய போது, 1985-88 ஜேக்டீ-ஜியோ போராட்டத்தின் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளராக இருந்து சிறைதியாகம் செய்தவர். அவருடைய பேச்சாற்றலைக் கண்டு கருணாநிதி இவருக்கு அமைச்சர் பதவி தந்து அழகு பார்த்தார்கள்.
அப்படி ஒரு காலத்தில் அமைச்சர் முனைவர் க.பொன்முடியின் நாவில் நர்த்தனமாடிய ஆற்றல்மிக்க மேடைப்பேச்சில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. சேதாரம் அவருக்கல்ல; ஜுன் 3 ஆம் தேதி தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகின்ற இந்த நேரத்தில், சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அமைச்சர் க.பொன்முடிதான் என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும். அமைச்சரின் பேச்சு loose talk ஆகவும், Tongue slip ஆகவும் தொடர்ந்து மாறி வருவது ஏன்? கருணாநிதி காலத்து பொன்முடியின் பேச்சினை கேட்க முடியவில்லையே? வேதனையுறுகிறோம்..!” இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry