“அர்ச்சுன்,அப்பா தவறிட்டாங்க” என்று தம்பி அழைத்துக் கூறினார். 2016 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இந்த நிகழ்வு நடந்தது. சில மாதங்களாகவே என் தந்தை நலிவுற்று இருந்த போதிலும், தந்தையின் இறப்பு என்பது எல்லோருக்கும் ஒரு துயரமான செய்தியே.
என் தந்தை இறந்த செய்தி கேட்டவுடன் அன்றே அமெரிக்காவிலிருந்து புறப்பட்டோம். 24 மணி நேரப் பயணம், சில நேரங்களில் ஏன் வெளிநாட்டு வாழ்க்கை என்று நம்மை நாமே கேள்வி கேட்கும் தருணம் அது. விமான பயணத்தின் பொழுது காவேரி ஆற்றில் எனக்கும் தம்பிக்கும் அப்பா நீச்சல் கற்றுக் கொடுத்தது, பல நெகிழ்வான தருணங்கள் அப்பாவுடன், என அசைபோட்டுக் கொண்டு வந்தேன்.
Also Read : கனிமக்கொள்ளையை தடுக்காமல் தமிழக அரசு நாடகம்! கபளீகரம் செய்யப்படும் மேற்குத் தொடர்ச்சி மலை!
விமானம் சென்னை வந்தவுடன் மகிழுந்தில் திருச்சி வழியாகத் தஞ்சை பயணம். அந்த பயணத்தின் பொழுதுதான் இன்று வரை என்னைத் தூங்க விடாமல் இருக்கும் நிகழ்வைப் பார்த்தேன். பல பாரா உந்துகளில் காவிரி ஆற்று மணலை கொள்ளை அடித்து எடுத்துப் போய்க் கொண்டு இருந்தனர். அப்படியே ஈரம் சொட்டச் சொட்டக் காவிரி ஆற்று மணல் எடுத்துப் போய்க் கொண்டு இருந்தனர்.
தந்தை இறந்த துக்கம் ஒரு பக்கம் வாட்ட, இந்தக் காட்சி மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தஞ்சை வீடு நெருங்க நெருங்கத் துக்கம் தாளாமல் கதறி அழுது கொண்டே அப்பாவைப் பார்த்தேன். மிக நீண்ட நேரம் அப்பாவைக் கட்டிப் பிடித்து அழுது தீர்த்தேன். அன்று மட்டும்தான் அழுதேன். பிறந்தவர் எல்லாம் இறந்தே ஆக வேண்டும், இது உலக நியதி. அதற்கு என் தந்தை மட்டும் விதிவிலக்கா என்ன? அப்பாவின் காரியம் முடிந்து இரண்டாம் நாள் அண்ணன் சீமானுடன் கடலூர் பரப்புரை சென்று விட்டேன். அந்த வலி நிறைந்த நாட்களில் மக்கள் பணியே பெரும் மன நிறைவாக இருந்தது.
Also Read : கோவையை பாலைவனமாக்கும் கனிமவளக் கொள்ளை! அரசு செய்ய வேண்டியது என்ன?
ஆனால் அந்த அற்று மணல் கொள்ளையைப் பார்த்த பிறகு ஏதோ ஒரு இனம் புரியாத வலி. அந்த வலிக்கான காரணியும் அதற்கான விடையும் 2017 ஆம் வருடம் எனக்குக் கிடைத்தது. “ஆற்று மணல்” இதில் என்ன இருக்கின்றது என்று கேட்பவர்களுக்கு ஒரே விடை, அதுதான் தமிழ் இனத்தை வணிகத்தில் உலகை ஆளச் செய்தது. ஆற்று மணல் என்பது தங்கத்தை விட விலை மதிப்பற்றது என்று கூடச் சொல்லலாம். அப்படியா எப்படி என்று கேள்வி கேட்பவர்களுக்கான விடைதான் இது.
“தஞ்சாவூர் மண்ணு எடுத்து” என்று கவிப் பேரரசு எழுதிய பாடல் தான் நமக்கு நினைவிற்கு வரும். தஞ்சாவூர் மண் என்பது ஏன் இவ்வளவு வளம் என்று நாம் தெரிந்து கொண்டால், ஆற்று மணல் அவசியம் தெரியும். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த பொழுது, தங்கள் பகுதிகளில் நடந்ததை Gazetteer என்ற பெயரில் ஆவணம் செய்தனர்.
சான்றுக்கு Madura Gazetteer என்றால் அதில் மதுரையைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் இருக்கும். மதுரையில் எவ்வளவு மழை பெய்தது? மதுரையில் இருக்கும் தாவரங்கள் எவை? அங்குக் கல்வி எவ்வாறு உள்ளது? என்ன வேளாண்மை செய்கின்றனர்? என்பது போன்ற தகவல்கள் இருக்கும். சொல்லப் போனால் முழு தகவல் களஞ்சியமாகவே இருக்கும்.
Also Read : வெளிநாட்டு நிறுவனம் பயன்பெற குழந்தைகளுக்கு நஞ்சை கொடுப்பதா? செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த எச்சரிக்கை!
அது போலத் தஞ்சையை ஆண்ட அந்த நேரத்தில் எழுதிய Tanjore Gazetteer(1906 ஆம் வருடம் எழுதப்பட்டது) மிக முக்கிய தகவல்கள் இருந்தன. தொழிற்புரட்சிக்கு முன் உலகில் யாரிடம் மிக அதிகமான வேளாண்மை நிலங்கள் இருந்ததோ, அவர்கள் அந்த நிலங்களை வைத்து பொருளாதாரத்தைக் கட்டியமைத்தனர்.
அப்படி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலேயே மிக அதிகமான வேளாண் விலை நிலங்கள் கொண்ட இடம் தஞ்சாவூர் டெல்டா. 1906 வெளிவந்த Tanjore Gazetteer நூலின் பக்கம் 91 இல் அந்தத் தகவல் உள்ளது. 10 இலட்சத்து 83 ஆயிரம் ஏக்கர் வேளாண் விலை நிலங்கள் இருந்ததாக, நில அளவெடுத்து அவர்கள் பதிவு செய்து உள்ளனர்.
இரண்டாவது இடத்தில் கோதாவரி டெல்டா, தோராயமாக 7 இலட்சம் ஏக்கர். அவர்கள் அதோடு நிற்கவில்லை, தஞ்சாவூர் மண்ணை எடுத்து அதை மண் பரிசோதனை செய்து அதன் தகவலைப் பக்கம் 101 இல் வெளியிட்டு உள்ளனர். (இது 100 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நூல். அப்பொழுதே மண் பரிசோதனை செய்து உள்ளனர்.) அந்த பரிசோதனையின் முடிவில் அந்த அதிகாரி இவ்வாறு குறிப்பிடுகின்றார், “நான் என் வாழ்நாளில் இவ்வளவு வளமான மண்ணை பார்த்ததே இல்லை. இந்த தஞ்சை மண்ணிற்கு உரமே தேவை இல்லை. காவிரி ஆறு கொண்டு வரும் வண்டல் மண்ணே போதும், அவ்வளவு வளம் அந்த வண்டல் என்று குறிப்பிடுகின்றார்.”
இந்த வண்டல் எவ்வாறு உருவாகின்றது என்று பார்ப்போம்? பொன்னி நதி தலைக் காவிரியில் பிறந்து பாறைகளில் முட்டி மோதி, இலை தழைகளோடு உராய்ந்து வருகின்றது. அப்பொழுது அது எடுத்து வரும் சேற்றோடு காவிரி ஆற்று மணல் கலந்து வண்டல் ஆகின்றது. இது கடலில் கலக்கும் முன்னே, தஞ்சையில் உள்ள விளைநிலங்களில் வாய்க்கால் வழியாகச் சென்று இந்த வண்டல் மண்ணை சேர்கின்றது, அதனால்தான் தஞ்சை மண் இவ்வளவு வளம்.
இது இயற்கையின் கொடை. இதன் மூலம் ஆற்று மணல் எவ்வளவு முக்கியம் என்று நாம் உணர்ந்திருப்போம். ஆற்று மணல் இல்லை என்றால் வண்டல் இல்லை, வண்டல் இல்லை என்றால் உழவு இல்லை, உழவு இல்லை என்றால் உயிர்கள் இல்லை. காவிரி நீர் மட்டும் நமக்குத் தேவை இல்லை, அந்த நீர் கொண்டு வரும் வண்டலும் அத்தியாவசியத் தேவை.
என் தந்தையின் இறப்பு என்பது எனது தனிப்பட்ட இழப்பு. அது என் இனத்திற்கான பாதிப்பு இல்லை, ஆனால் இந்த ஆற்று மணல் கொள்ளை என்பது தமிழ் இனத்தை அழித்துக் கொண்டிருக்கும் ஒரு பாதிப்பு. இந்த பாதிப்பு என்பது தமிழ் இனத்தில் பல ஆயிரம் ஆண்டுகள் இருக்கும். நான் அந்த ஆற்று மணல் கொள்ளை அடிக்கும் காட்சியை அடிக்கடி நினைத்துத் தூக்கத்தைத் தொலைக்கின்றேன். இப்பொழுது இந்த சேகர் ரெட்டியும் ஆற்று மணல் திருட்டும் எவ்வளவு ஆபத்தானது என்று நாம் உணர்கின்றோம்.
Recommended Video
நீர்நிலைகளை தனியார்மயமாக்குவதா?அரசு செய்வது ஜனநாயக விரோதம்! Land Consolidation! Poovulagin Nanbargal
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry