கனிமக்கொள்ளையை தடுக்காமல் தமிழக அரசு நாடகம்! கபளீகரம் செய்யப்படும் மேற்குத் தொடர்ச்சி மலை!

0
108
Illegal Quarrying In Kanyakumari's Western Ghats | FILE IMAGE

கேரளத்தில் தொடங்கும் மேற்குத் தொடர்ச்சி மலை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் வரை பரந்து விரிந்துள்ளது. இந்த மலைத்தொடரில் இருந்து விதிகளை மீறி கனிமவளங்கள் வெட்டிக் கடத்தப்படுவதால், 10 ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டம் பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில், ஆற்றிலிருந்து மணல் அள்ளவும், மலையிலிருந்து கற்களை வெட்டி எடுக்கவும் முற்றிலும் தடை விதித்து, அம்மாநில அரசும், மக்களும் இயற்கையை பாதுகாக்கின்றனர். ஆனால், அம்மாநிலத்தின் தேவைக்காக குமரி மாவட்டத்தில் இருந்து தான் பெருமளவு குண்டு கல், ஜல்லி, எம் சாண்ட் போன்றவை அளவுக்கு அதிகமாக கொண்டு செல்லப்படுகிறது.

Also Read : கோவையை பாலைவனமாக்கும் கனிமவளக் கொள்ளை! அரசு செய்ய வேண்டியது என்ன?

தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள், கனிம வளங்களை விதிகளை மீறி கேரளாவுக்கு கொண்டு செல்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து கிணறு போல் பல அடி ஆழத்துக்கு தோண்டி கனிமவளங்கள் தகர்த்து எடுக்கப்படுவதால், குலசேகரம், சித்திரங்கோடு, களியல், பேச்சிப்பாறை, சுங்கான்கடை, வில்லுக்குறி, களியங்காடு, ஆரல்வாய்மொழி உட்பட குமரி மாவட்டம் முழுவதும் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைநிலங்கள் பாலைவனம் போல் காணப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் மலையின் பெரும் பகுதி காணாமல் போய்விடும். யுனெஸ்கோவால் சிறந்த இயற்கைவள பாதுகாப்பு பகுதியாக தேர்வு செய்யப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அழியும் தருவாய்க்கு நகர்த்துகின்றனர்.

இயற்கையை சீரழித்ததன் விளைவாக, தென் மேற்கு பருவமழைக் காலமான தற்போது, மழையின்றி வறட்சி நிலவுகிறது. விவசாயத்துக்கு தண்ணீரின்றி வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மலைகளை தகர்ப்பது தொடரும் பட்சத்தில், இதை விட கொடுமையான இயற்கை விளைவுகளை அடுத்த தலைமுறையினர் சந்திக்க நேரிடும்.

Also Read : பாலைவனமாகும் தமிழ்நாடு? திட்டமிட்டு நசுக்கப்படும் வேளாண்மை! கனிமங்கள் கடத்தலைத் தடுப்பதில் அக்கறையின்மை!

இதை உணர்ந்த இளைஞர்களும், பொதுமக்களும், நள்ளிரவு நேரங்களில் திருட்டுத்தனமாக கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை, மறித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். கனிமவளம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதுடன் கிராம, மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் பழுதடைகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையை காவு வாங்கும் கல்குவாரிகளை கட்டுப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகமோ, அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என்பதால் இதைத் தடை செய்ய இயலாது எனக் கூறி கைவிரிக்கிறது. பொதுமக்களின் தொடர் எதிர்ப்பால், அரசு அனுமதியுடன் செயல்படும் 15 கல்குவாரிகளை தவிர பிற குவாரிகளில் ஆய்வு செய்து சீல் வைக்கும் நடவடிக்கையில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய்துறையினர், போலீஸார், கனிமவளத்துறை அடங்கிய குழுவினர் கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை கண்காணித்து பறிமுதல் செய்கின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உரிமம் அளிக்கப்பட்ட குவாரிகளில் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படும் அளவை டிரோன்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில எல்லையில் உள்ள மாவட்டங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மற்றும் சட்டவிரோதமாக ஏற்றிச் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வளம் மிகுந்த தமிழ்நாட்டின் கனிமவளங்களை பாதுகாப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : கனிமவளங்கள் கடத்துபவர்களிடம் முதலமைச்சர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசூல்! எஸ்.பி. வேலுமணி பரபரப்பு குற்றச்சாட்டு!

ஆனால், இதெல்லாம் மக்களை திசை திருப்புவதற்காக நடத்தப்படும் ஏமாற்று வேலை என்ற குற்றச்சாட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். இதுதொடர்பாகப் பேசிய அவர்கள், “கல்குவாரிகளில் இருந்து உள்ளூர் தேவைகளுக்கு மட்டும் பாறைகளை வெட்டி எடுக்க அனுமதிக்க வேண்டும். கேரளாவுக்கு கனிமங்கள் கடத்துவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அதைவிடுத்து, அதிக அளவு கனிமம் ஏற்றி செல்லும் வாகனம் மீது நடவடிக்கை எடுப்பது கண்துடைப்பு வேலை.

மேலும், குமரி மாவட்டம் இயற்கை வளங்கள் நிறைந்து செழிப்பாக இருப்பதற்கும், பருவ மழை பெய்வதற்கும் மேற்கு தொடர்ச்சி மலையே காரணம். இதைவிட அதிகம் இயற்கை வளம் கொண்ட பகுதிகள் கேரள மாநிலத்தில் உள்ளன. அங்கிருந்து சிறிய அளவு கல்லைக்கூட பெயர்த்து எடுத்து கட்டுமானத்துக்கு பயன்படுத்தமுடியாத வகையில் அந்த மாநில அரசு கடுமையான சட்ட விதிகளை வகுத்துள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு அலை தடுப்புச் சுவர், தூண்டில் வளைவு அமைக்க இங்கிருந்து தகர்த்து எடுக்கப்படும் பெரிய கற்களை பயன்படுத்த முடியவில்லை. ஆனால், அரசியல் செல்வாக்குள்ள நபர்களால், கேரள மாநிலத்தின் விழிஞ்ஞம் உள்பட பல துறைமுக கட்டுமானங்களுக்கும் இங்கிருந்து தான் அளவுக்கதிமாக கற்கள் கொண்டு செல்லப்படுகிறது.

Also Read : புற்றுநோய் சிகிச்சையில் பெரும் திருப்புமுனை! 5 ஆண்டுகளில் தடுப்பூசி வெளிவரும் என அறிவிப்பு!

அதே நேரம் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், கோழி மற்றும் மீன், இறைச்சி கழிவுகளை லாரிகளில் ஏற்றி வந்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் கொட்டுகின்றனர். இதே நிலை நீடித்தால் இயற்கை வளங்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு, வெகு விரைவில் குமரி வறட்சியான மாவட்டமாக மாறி விடும். இயற்கை வளம் சிறந்தோங்க பாதுகாப்பு அரணாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை காப்பாற்ற அரசு வலுவான சட்டங்களை கொண்டு வர வேண்டும்’’ என்று வலியுறுத்துகின்றனர்.

இதனிடையே, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் பொன்னிவாடி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, “ஜல்லி, கிரஷர், எம்.சாண்ட், கிரானைட், மணல் குவாரி போன்ற கனிம வளங்களால் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசால் வருவாய் ஈட்ட முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி

ஆனால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,000 கோடி மட்டுமே வருமானம் வருகிறது. 98 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலாக வெளியே சென்று கொண்டிருக்கிறது. குவாரி உரிமையாளர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் இணைந்து இந்த ஊழலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே, டாஸ்மாக் கடைகளைப் போல், கல்குவாரி உள்ளிட்ட அனைத்து கனிம வள குவாரிகளையும் அரசே எடுத்து நடத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

Recommended Video

நீர்நிலைகளை தனியார்மயமாக்குவதா?அரசு செய்வது ஜனநாயக விரோதம்! Land Consolidation! Poovulagin Nanbargal

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry