ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கைதாகிறாரா? போலி பாஸ்போர்ட் வழக்கை விசாரிக்க மத்திய உள்துறை உத்தரவு!

0
197
ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் | மூத்த பத்திரிகையாளர் வாராகி

உளவுத்துறை ஏடிஜிபியாக கோலோச்சிக் கொண்டிருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், திடீரென தலைமையிட ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் பதவியைப் பெற பல்வேறு வகையில் அவர் காய்நகர்த்தி வந்தார். உளவுத்துறை மொத்தமாக தோல்வியடைந்துவிட்டது என பல சம்பவங்களை மேற்கோள்காட்டி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல தருணங்களிலும் குற்றம்சாட்டிவந்தன.

ஆனால், அப்போதெல்லாம் பணியிட மாற்றம் செய்யப்படாத டேவிட்சன் தேவாசீர்வாதம், தற்போது அதிரடியாக மாற்றப்பட்டதன் பின்னணியில் மத்திய அரசின் உத்தரவு காரணமாக உள்ளது. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஜுன் 2018ல் இருந்து, ஜுலை 2020வரை மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது, சுமார் 200 பேருக்கு போலி பாஸ்போர்ட் வழங்கியதாக புகார் எழுந்தது.

Also Read : கனிமக்கொள்ளையை தடுக்காமல் தமிழக அரசு நாடகம்! கபளீகரம் செய்யப்படும் மேற்குத் தொடர்ச்சி மலை!

தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு, இந்தியன் ரிப்போர்ட்டர் இதழின் ஆசிரியரும், இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவருமான வாராகி, மத்திய உள்துறை அமைச்சக செயலாளர், தேசிய புலனாய்வு முகமையின் இயக்குநர் ஜெனரல், சிபிஐ இயக்குநர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழக உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழக டிஜிபி ஆகியோருக்கு 24.05.2023 அன்று 4 பக்கக் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில், “டேவிட்சன் மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது, அவரது அறிவுறுத்தலின் பேரில் போலி ஆவணங்கள் மூலம் நூற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டது. டேவிட்சனின் மனைவி ஜுனிதா டேவிட்சன் நடத்தி வந்த பயண முகமையகம் மூலமாகவே இந்த போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன. தற்போது அந்த பயண முகமையகம் மூடப்பட்டுவிட்டது. போலி பாஸ்போர்ட் வழங்க டேவிட்சன் ரூ.45,000 வரை லஞ்சம் வாங்கியதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு இவர்கள் உதவியிருப்பதாக என்.ஐ.ஏ. கண்டுபிடித்துள்ளது” என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை வாராகி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

வாராகியின் புகார் கடிதத்தின் அடிப்படையில், டேவிட்சன் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே டேவிட்சன் உளவுத்துறையில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். டேவிட்சன் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என தெரிகிறது. உரிய முறையில் விசாரணை நடத்தினால் டேவிட்சன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வசமாக சிக்குவார்கள் எனத் தெரிகிறது.

2019 ஜுன் 27ல் இலங்கையைச் சேர்ந்த முத்துராமன் என்பவரும், 2020 ஜனவரி 15ல் இலங்கையைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் போலி பாஸ்போர்ட் மூலம், முறையே இலங்கை மற்றும் துபாய் செல்ல முயன்றனர். அவர்களை குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்தே போலி பாஸ்போர்ட் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. ஜுலை 2021ல் வழக்குப் பதிந்த சிபிஐ, தபால் துறை அதிகாரிகள், பயண முகமை நிறுவனத்தை சேர்ந்த ரமேஷ் உள்ளிட்டோரை கைது செய்தனர். பின்னர் ஜனவரி 2022ல் UAPA சட்டம், பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் உள்ளிட்டவைகளின் கீழ் தேசிய புலனாய்வு முகமையும் வழக்குப் பதிந்தது. இந்த வழக்கை சிபிஐயும், என்ஐஏவும் தனித்தனியாக விசாரிக்கிறது.

முன்னதாக, இந்த வழக்கில் பாஸ்போர்ட், தபால்துறை அதிகாரிகளை விசாரிக்கக் கடிதம் அனுப்பிய அப்போதைய க்யூ பிரிவி டி.ஐ.ஜி ஈஸ்வரமூர்த்தி, அவனியாபுரம் காவல் ஆய்வாளர் இளவரசு, உளவுப்பிரிவு ஆய்வாளர் தர்மலிங்கம், உளவுப்பிரிவு உதவி ஆணையர் சிவகுமார், மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று டி.ஜி.பி-க்கு கடிதம் எழுதினார்.

Also Read : புற்றுநோய் சிகிச்சையில் பெரும் திருப்புமுனை! 5 ஆண்டுகளில் தடுப்பூசி வெளிவரும் என அறிவிப்பு!

ஆனால், போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் டேவிட்சனை விசாரிக்க தமிழ்நாடு அரசு அனுமதி தரவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட முக்கியமான இந்த வழக்கில் விசாரணை நடக்கவில்லை. டேவிட்சன் தேவாசீர்வாதம் உளவுத்துறை ஏ.டி.ஜி.பியாக இருந்ததால்தான் வழக்கு விசாரணை தாமதமானது என்று புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வாராகி, “டேவிட்சன் தேவாசீர்வாதம் பணிபுரிந்த இடங்களில் பாஸ்போர்ட் மட்டுமல்லாமல், பல்வேறு விவகாரங்களில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றுள்ளோம். நாளை மறுநாள் இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. போலி பாஸ்போர்ட் மட்டுமல்லாமல் மற்ற விவகாரங்களிலும் டேவிட்சன் சிக்குவார். அவர் சிறைக்குச் செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry