தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை கடத்துவதைத் தடுக்க தனிச் சட்டம் இல்லை என்று கனிமம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
1980-களின் இறுதிக்கு முன்வரை, கட்டுமானப் பணிகளுக்காக மரச்சக்கரம் பூட்டிய மாட்டு வண்டிகளில்தான் மணல் எடுக்கப்பட்டது. அதேபோல் டயர் பொருத்தப்பட்ட வண்டிகளிலும் மணல் தருவிக்கப்பட்டது. கிராமங்கள் அடிப்படை வளர்ச்சியின்றி தேங்கயிருக்க, பணத்தின் தேவை அதிகரிக்கத் தொடங்கியதால், 1990-களின் தொடக்கத்தில், கிராம மக்களுக்கு நகரங்கள் மீது ஈர்ப்பு ஏற்படத் தொடங்கியது.
இதனால் நகரங்கள் விரிவடையத் தொடங்கின. சென்னை போன்ற பெருநகரங்கள் பிதுங்க ஆரம்பித்தன. நகரங்களுக்கான உள் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்ட அதே நேரத்தில், வீடு கட்டுமானங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது. கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்ததால், விவசாயம் பாதிக்கப்பட்டு, சாகுபடி பரப்பளவு குறையத் தொடங்கியது. விளை நிலங்கள் வீட்டு மனைகளாகின. காலணி ஆதிக்கத்தின்போதே தஞ்சாவூரில் 10 லட்சத்து 83 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் இருந்தது.
நகர வருவாயைக் கொண்டு, சொந்த கிராமங்களில் வீட்டு மனைகள் வாங்கி, வீடு கட்டுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர, நகரங்களிலும், பெருகிய சனத்தொகைக்கு ஏற்ப பாலங்கள் கட்டுதல், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டுதல் என கட்டுமானப் பணிகள் வருடம் முழுவதும் நடைபெறத் தொடங்கின. இதனால் ஆற்று மணல் தேவை அதிகரிக்கத் தொடங்கியது. இந்தச் சூழல் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, நமது அண்டை மாநிலங்களுக்கும் பொருந்தும்.
தமிழ்நாட்டில் மணல் அள்ளும் உரிமையானது, ஊராட்சிகளிடம் இருந்து பொதுப்பணித்துறைக்கும், பின்னர் பொதுப்பணித்துறையிடம் இருந்து தனியார் வசமும் இருந்தது. 2003-ல் மணல் விற்கும் உரிமையை மீண்டும் பொதுப்பணித்துறையே எடுத்துக்கொண்டது. மணல் தேவை கூடிய பிறகு, ஆறுகளில் பொக்லைன் இயந்திரங்கள் மணலை அகழ்ந்தெடுத்தன. மணலை விநியோகம் செய்ய ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டனர். விலை விண்ணை முட்டியது. இவர்கள்தான் மணல் மாஃபியாவாக உருவெடுத்து, ஆட்சியாளர்களையே கட்டுப்படுத்தும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார்கள். ஒருபடி மேலாக, மணல்கொள்ளை மனிதர்களையே காவு வாங்குகிறது.
இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், அண்டை மாநிலங்களுக்கு மணல் உள்ளிட்ட கனிமங்கள் கடத்தப்படுவதுதான். நிலத்தடி நீர்மட்டத்தை தாழ்த்தி, குடிநீருக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விவசாயக் கிணறுகளை வற்ற வைத்து, அண்டை மாநிலங்களுக்கு மணல், எம். சாண்ட், ஜல்லி கற்கள் போன்றவை கடத்தப்படுகின்றன. அள்ளுகின்ற அளவுக்கு இல்லாவிட்டாலும், ஒவ்வொரு மழைக் காலமும் ஆறுகளில் புது மணலைக் கொண்டுவரும். பாறைகளை பெயர்த்து உடைத்து கடத்தினால், மீண்டும் பாறைகள் முளைக்குமா? இதே கதைதான் அனுமதியின்றி நடத்தப்படும் செங்கல் சூளைகளும்.
Also Read :- சட்ட விரோதமாக எம்.சாண்ட் கடத்தல்! அரசுக்கு ரூ.10,000 கோடி இழப்பு! கண்டும் காணாமல் இருக்கும் திமுக அரசு!
வரைமுறையின்றி மணல் அள்ளுவதால் ஏற்படும் வேளாண் அறிவியல் பாதிப்புகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு ஆறு உருவாகும் இடத்தைவிட, அது முடியும் அல்லது கடலில் கலக்கும் இடங்களுக்குத்தான் அதிக பயன் தரும். எப்படியென்றால், ஆற்று நீரானது மணலுடன் வண்டலையும் கொண்டுவந்து, வாய்க்கால்கள் மூலமாக விளை நிலங்களில் சேர்க்கும். இதனால் விளை நிலங்கள் வளம் பெறும். அதுமட்டுமல்லாது, மணல் மிகச்சிறந்த வடிகட்டியாகவும் செயல்படுகிறது. எனவே, மணல் கொள்ளையால் நிலத்திடி நீர் மட்டுமல்ல, விளை நிலங்களும் நேரடியாக பாதிக்கும்.
இந்நிலையில்தான், சூழலியல் குற்றங்கள் புரியும் மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்துவிட்டது, இனியும் அமைதி காக்கக்கூடாது என்று பூவுலகின் நண்பர்கள் போன்ற சுற்றுச்சூல் அமைப்புகள் அபாயக் குரல் கொடுக்கின்றன. மெரினா கடற்கரையில் மணல் திருட்டால், கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பாகிவிடும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கிறது.
சுற்றுச் சூழல் அனுமதியின்றி ஆற்று மணல் எடுக்கலாம் என்று அமைச்சர் துரை முருகன் இந்த மாதம் முதல் வாரத்தில் அறிவித்திருந்தார். ஏற்கனவே நடைபெற்ற மணல் கொள்ளையை சரிசெய்யவே பல நூறு ஆண்டுகள் ஆகலாம் என்ற நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டை பாலைவனமாக்குவது உறுதி என பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்தார்.
ஆனால், கனிமச் சுரண்டலைத் தடுப்பதில், தமிழ்நாடு அரசுக்கு அக்கறை இல்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால், மணல் அள்ள சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை எனச் சொன்ன அமைச்சர் துரை முருகன்தான், தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை கடத்துவதைத் தடுக்க தனிச் சட்டம் இல்லை என்கிறார். சட்டத்தை உருவாக்கும் இடத்தில்தானே அவர் இருக்கிறார்?!
உலக அளவில் இயற்கை வேளாண் பொருட்களுக்கான சந்தை விரிவடைந்துகொண்டே வருகிறது. மைக்ரோசாஃப்ட், அமேசான் போன்ற பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், வேளாண்துறையில் குறிப்பாக விளை நிலங்களை வாங்குவதில் பெரும் முதலீடு செய்து வருகின்றன. அப்படிப்பட்ட சூழலில், வேளாண்மையோடு இரண்டறக் கலந்த கனிமங்களை காப்பாற்ற, திமுக, அதிமுக அரசுகள் முன்வராதது பல சந்தேகங்களை எழுப்புகிறது. உழவர் குடி கெடுக்காமல், உழவர்குடிகளை காப்பாற்றுவதும், நமது முன்னோர்களைப் போல, வேளாண் வர்த்தகத்தில் சக்கரவர்த்திகளாகத் திகழ அடித்தளமிடுவதும், சர்வதேச வேளாண் சந்தையில் தமிழ்நாட்டை தலைநிமிற வைப்பதும், ஆட்சியாளர்கள் கரங்களில்தான் உள்ளது.
“பொரு படை தரூஉம் கொற்றமும் உழு படை
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே”
புறம்:35
என்ற வரிகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry