‘ஆனந்தியின் அம்மா பூவதி’! பூஸ்டு பொடி நெனப்பே போயி…! அம்மா நெனப்பு வந்துடுச்சு! – சிறுகதை : எழுத்தாளர் ஆனந்தி

0
134

வீடு முன்னாடி இருந்த கொஞ்சம் டிம்மான தெருவிளக்கு வெளிச்சத்துல ஸ்கூல்பேக்க எடுத்துவச்சு ரெடியா இருப்பேன். அம்மா தம்புலாவ தூங்க வச்சிட்டு என்கிட்டே வருவாங்க. என் தம்பிதான் எனக்கு தம்புலா; அவன் பெறக்க முன்னாடியே அவனுக்கு நான் செல்லமா தம்புலான்னு பேரு வச்சிட்டேன். தம்புலாங்குற வார்த்தைக்கு என்ன அர்த்தம்ன்னு அப்போ மட்டும் இல்ல இப்பவும் தெரியாது; இருந்தாலும் அவன்மேல எனக்கு நெறைஞ்ச அன்பு இருந்துச்சி.

அப்ப நான் ரெண்டாப்பு படிச்சிட்டுருந்தேன். டீச்சர் போர்டுல எழுதிப் போடுறத என்னோட வகுப்பு நோட்டுல பொன்சில்ல எழுதி காப்பி பண்ணிட்டு வருவேன். டீச்சருக்கு வருசம் வருசம் ஒரே பாடத்த எழுதி பழக்கமாகியிருந்ததால, வேகமா எழுதிட்டு அழிச்சிடுவாங்க.

அதனால என்னால அதசரியாஎழுத முடியாம தப்புதப்பா எழுதிருப்பேன். அதையெல்லாம் அம்மா என் பக்கத்துல உக்காந்து சரிபண்ணி, மறுபடியும் கரெக்டா எழுதவச்சி, படிக்க வச்சி என்ன ஃபர்ஸ்டு ரேங்க் வாங்க வைப்பாங்க. இததான் தினமும் நான் ஸ்கூல் விட்டு வந்ததும் நானும் அம்மாவும் செய்வோம்.

நான் செஞ்ச தப்பயெல்லாம் அம்மா அவ்வளவு சுலபமா சரி பண்ணமாட்டாங்க. என் தொடை சிவப்பாகுற வர கிள்ளி கிள்ளி தப்பயெல்லாம் திருத்துவாங்க. நான் டவுசர் போட்டு இருப்பேன், அதனால அம்மாவுக்கு என் தொடைல கிள்ள ரொம்ப வசதியா இருக்கும். “பாத்து எழுதும் போதே ஆயிரம் தப்புன்னு, சொல்லி தலையில வேற போனசா கொட்டு விழும்.

அதெல்லாம் தாங்க முடியாம எப்பதான் வீட்டுப்பாடம் முடியும்ன்னு இருக்கும் எனக்கு? அப்புறம் அடிச்சதுக்கும் கிள்ளினதுக்கும் லஞ்சமா, அம்மா ஆசையா அரவணைச்சு முத்தம் கொடுப்பாங்க. அப்ப நான்ஒன்னும் வேணாம் போ…”ன்னு செல்லங் கொஞ்சுவேன்.

ஒரு வேளை இந்த முத்தங்கள் எல்லாம் சீக்கிரமே காலாவதியாகிடும்ன்னு எனக்கு தெரிஞ்சிருந்தா; இன்னும் கொஞ்சம் கூட தப்பு தப்பா எழுதிஅதுக்கு அடியும் வாங்கி.. அம்மாவோட நெறைய முத்தங்கள வாங்கிருப்பேன்.   

நான் செல்லங் கொஞ்சுறத அம்மா கண்டும்காணாம, “சரி ஓடுபோய் டிவிய போடுன்னு சொன்னதும், வேகமா ஓடிசர்ருசட்டுசர்ருசட்டுன்னு வீட்டு கதவ தொறப்பேன். அப்பெல்லாம் எங்க வீட்டுல சைடு டோரு மாதிரி கதவு வச்ச பிளாக் அண்ட் ஒயிட் டிவிதான் இருந்துச்சு. அத ஆன் பண்ணதும், டீச்சர் போர்ட அழிக்கும் போது போர்டுல இருந்து பறக்குற சாக்பீஸ் தூள்மாதிரி அல அலையா ஓடும்.

அதுஏன்னா..? நாங்க இருந்த வீடு ரொம்ப பெரிய வீடுஅதுல சின்ன போர்சன்ல தான் நாங்க இருந்தோம். அந்த வீட்டுல வோல்ட்டேஜ் ப்ராப்ளம் இருந்ததால வசனம் மட்டும் தான் கேக்குமே தவிர டீவில என்ன ஓடுதுன்னே பார்க்க முடியாது.

அதனால சில நேரங்கள்ல மத்த வீட்டுக்காரங்க எல்லாரும் டீவி போடுறதுக்கு முன்னாடி, ஒரு நாலு மணிக்கே டீவி போட்டா கொஞ்ச நேரமாவது நல்லா தெரியும். ஆனா; அப்பவயலும் வாழ்வும்தான் ஓடும். காரணம் வோல்டேஜ் ப்ராப்ளத்தால எங்க வீட்டுல கேபிள் கனெக்ஷன் எடுக்கல. பொதிகை சேனல் மட்டும் தான் இருந்துச்சி.      

நான் டீவில அதிகமா பார்த்த ஒரேபடம்துர்காபடம் தான்; துர்கா கொண்டை அப்பலாம் ரொம்ப பேமஸ். அதுக்கு அப்புறமா பூஸ்ட்டு கலர்லயே இருக்குற கிரிக்கெட் வீரர் கபில் தேவ்வும், பால் கலர்ல இருக்குற சச்சினும் தான். ரெண்டு பேரும் வந்துபூஸ்ட் இஷ் ய சீக்ரெட் ஆப் மை எனர்ஜி, அவர் எனர்ஜின்னு சொல்வாங்க. அரைமணி நேரவயலும் வாழ்வும்நிகழ்ச்சில அஞ்சு தடவ வருவாங்க.

அந்த விளம்பரம் எனக்கு ரொம்ப புடிக்கும்; அது அவங்க மேலயோ இல்ல கிரிக்கெட் மேலயோ இருந்த ஆசையெல்லாம் கிடையாது; எனக்கு கிரிக்கெட்ட புடிக்கவும் செய்யாது. ஆனா பூஸ்ட்டு ரொம்ப புடிக்கும், அத பால்ல கலந்து குடிக்கிறத விட, திருடி வெறு வாயில அள்ளி அள்ளிப் போட்டு தின்னுறது பிடிக்கும். அதேநேரத்துல அம்மா மட்டும் பார்த்தா அடி ஒன்னும் இடி மாதிரி விழும்.     

அப்படித்தான் ஒருநாள் மதியம் அம்மா துணி துவச்சிட்டு இருந்தாங்க. அப்போ நான் செல்ப்ல ஏறி பூஸ்ட் எடுத்து வாயில போட்டுட்டு பாட்டல வேக வேகமா மூடிட்டேன். அந்த டேஸ்ட்ல அப்படி என்ன இருந்துச்சுன்னு எனக்கு சொல்லத் தெரியல?. முதல்ல ஒரு தடவ போதும்ன்னு தோணும், அப்புறம் அந்த டேஸ்ட்ம் கடைசி சொட்டும் அடி நாக்க விட்டு போறதுக்குள்ள மறுபடியும் வேணும்னு தோணும்.

அப்படி ஒரு தடவ மறுபடியும் எடுக்கும்போது அவசரத்தில பூஸ்ட் பாட்டல் மூடிய லூசா மூடிவச்சிட்டேன். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்ங்குற மாதிரி, திரும்பவும் திருட்டுத்தனமா மூடிய புடிச்சி எடுக்கும் போது, பாட்டல் கீழ விழுந்து சல்லி சல்லியா ஒடஞ்சிட்டு.

பாட்டல் ஒடஞ்ச சத்தம் கேட்டுஅ ம்மாஎன்னத்தடி அங்க போட்டு ஒடச்சன்னு வர்றதுக்குள்ள ஒரே தவ்வுல தெருவுக்கு போய்ட்டேன். கொஞ்ச நேரம் எதுவுமே தெரியாத பூனைக்குட்டி மாதிரி பக்கத்து வீட்டு சந்துக்குள்ள நின்னுட்டு இருந்துட்டு, மெதுவா போயி பார்ப்போம்ன்னு வீட்டுக்குள்ள போனேன்.

அம்மா சொளகும் சாணியுமா நின்னுட்டுஇருந்தாங்க, பூஸ்ட் பொடியும் சில்லு சில்லா நொறுங்குன கண்ணாடியும் வீடெல்லாம் செதறி கிடந்துச்சு. அம்மா அத சாணியில ஒத்தி ஒத்தி சொளகுல போட்டுட்டேஇங்க வாடின்னு கத்துனாங்க. வேஸ்ட்டா போன பூஸ்ட்ட என்கிட்ட கொடுத்து குப்பைல கொட்டிட்டு வர சொன்னாங்க. வேற வழியே இல்லாம மனச கல்லாக்கிட்டு நானே குப்பைல கொட்டிட்டுகொஞ்ச நேரம் அங்கேயே நின்னுஅத வெறிக்க வெறிக்க பார்த்துட்டே இருந்தேன். “தேராம எலி குஞ்சு மாதிரி இருஅந்த பூஸ்டு பொடிய குடிக்கவும் கொஞ்சம் நல்லா வருதுகணு நெனைச்சேன்உங்க அப்பேன் ஒரு பாட்டீலுக்கு மேல வாங்கித் தராதுஎப்படி குடிப்பன்னு நானும் பாக்குறேன்சொல்லி பக்கத்துல கெடந்த ஊது குச்சிய எடுத்து என்மேல எரிஞ்சிச்சு. நானோ அங்க இருந்து சிட்டா பறந்திட்டேன்

மறுபடி சாயந்தரம் ஆனதும் அஞ்சு தெரு தாண்டி எங்களுக்கு ஊத்துற பால் வண்டி சத்தம் கேட்டதும், அய்யய்யோ அடிவாங்கணும்னு தோணுச்ச்சி. அடிகொழாயில வரிசைல இருந்த எங்க கொடத்துல அர கொடம் தண்ணி புடிச்சு தூக்கிட்டு, “அம்மா இங்க பாருநான் பெரிய கொடம் தூக்கிட்டேன்னுசொல்லி பூஸ்ட் பாட்டல் நெனைப்புல இருந்து அம்மாவ டைவர்ட்டு பண்ண பார்த்தேன். பால் வாங்கப் போன அம்மாஇந்தா வந்துட்டான்யா ஒரு லிட்டர் பால்ல ஒன்பது லிட்டர் தண்ணிய ஊத்திக்கிட்டுன்னு சொல்லிட்டே, மறுபடியும் கையிக்கு சிக்காத என் தல முடிய புடுச்சி ஒரு நாலு ஆட்டு ஆட்டி ஆதங்கத்த தணிச்சிக்கிட்டாங்க. நான் என் தலைல இருந்த ரெண்டு தென்னங்கன்னையும் சரி பண்ணிகிட்டேன்.      

அப்புறம் அம்மா வெறும் பால மட்டும் ஆத்தி எனக்கும் தம்புலாக்கும் குடுத்தாங்கா. தம்புலா உறிஞ்சி கிளாஸ்ல நாலு கிளாஸ் குடிப்பான். அது அவன மாதிரியே குட்டியா இருக்கும். நான் பூஸ்ட் விளம்பரத்துல கபில்தேவ் கையில இருக்க மாதிரி கப்பு கேட்டு வாங்கிருந்தேன், அதுல ரெண்டு கப்பு குடிப்பேன். அம்மா பால் ஆத்துன கிண்ணத்துல மீதி இருக்குறத அண்ணாந்து அவங்க வாய்ல ஊத்திட்டேஉன் தம்பி மூத்திரம் கூட ருசியா இருக்கும்இதுவும் தான் இருக்கேன்னுசொல்லிட்டே, “வெரசா குடிங்கஇத எத்தன டம்ளர் குடிச்சாலும் ஒன்னும் ஆகாதுன்னு சொல்லுவாங்க.

ஆனாலும் நெறய பால் குடிச்சா பிள்ளைக சத்து புடிக்கும்ங்குறது அம்மாவோட அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நேரம் அப்பா வரவும்உங்க மக என்னா செஞ்சான்னு கேளுங்கஅப்படின்னு சொன்னதும், நல்ல மனநிலைல இருந்த அப்பாஎன்னடா நாயிஅம்மா என்னா சொல்றான்னுகேட்டாரு. நன்றியும் பாசமும் அதிகமா காட்டுறதுல மனுசங்கள விட நாய்ங்க தான் நல்லவங்க போல. அதனால தான் என்னவோ எங்க அப்பா என்ன செல்லமா நாய் குட்டின்னு சொல்லுவாரு. நான் அப்பா செல்லம்ன்னா, என் தம்புலா அம்மா செல்லம்.           

அப்பா மறுநாளே யாரோ வெறகு கடைல காசு கொடுத்தாங்கன்னு சொல்லி பூஸ்ட் வாங்கிவந்தாங்க. அப்புறம் கொஞ்ச நாள் பூஸ்ட்ட திருடி திண்ணுறத விட்டுட்டேன், அது ஏன்னு எனக்கு அப்போ தெரியல. எப்பவாது ருசி தட்டிச்சின்னா அப்ப அப்ப திம்பேன். ஒருநாள் அம்மாவுக்கு உடம்பு சரியில்லபில்லி, சூனியம், மாய மந்திரம், பேய், பிசாசுன்னு சொல்லி பத்து பதினைஞ்சு நாளைக்கு வீடு நெறையா யார் யாரோ வந்து போனாங்க. அப்படியே கொஞ்ச நாள்ல ஒருதடவ ஸ்கூலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தேன், அம்மா அங்க இல்ல. அம்மாக்கு உடம்பு சரில்லன்னு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்ட்டதா பக்கத்து வீட்டுக்காரங்கலாம் சொன்னாங்க.

அப்பகூட எனக்குஐயா! இன்னிக்கு வீட்டுப்பாடம் எழுத தேவயில்லன்னு பேக்க தூக்கி கட்டில்ல போட்டுட்டுபூஸ்ட்ட கை நெறைய அள்ளி வாய்ல போட்டுட்டுஅஞ்சாறு தெரு தாண்டி ப்ரெண்டு கூட விளையாடப் போய்ட்டேன். அந்த சாயந்தரம் நேரத்துல என் கண்ணெதிரல கம்பீரமா தெரிஞ்ச மேற்கு தொடர்ச்சி மலைய, கறுகறுன்னு திரண்டு பாஞ்சு வந்த மொத்த மேகக் கூட்டமும் ஒரேடியா விழுங்குனா எப்படி இருக்குமோ, அப்படியொரு மனசங்கடம் என் சந்தோசத்த சிதைச்சிட்டே இருந்துச்சு. நான் அது என்னன்னு தெரியாம கால எத்தி எத்தி குதுச்சிட்டே வீட்டுக்குப் போனேன்.      

எங்க வீட்டு பக்கத்துல இருந்த ஒருத்தவங்க வீட்டுலதான் அன்னைக்கு ராத்திரி தூங்கிமுழிச்சேன். அப்போ அவங்க என்னோட அம்மா உடல் நிலைய பத்தி பேசுன ஒன்னு ரெண்டு வார்த்தைகள் அர தூக்கத்துல இருந்த என் காதுல விழுந்துச்சி. “ரொம்ப முடியாம ஆஸ்பத்திரிக்கு கூப்ட்டு போறாங்கபாவம் இந்த பிள்ளைங்கன்னு சொன்னாங்க. காலைல விடிஞ்சதும் கடைல இருந்து டீ வாங்கி எனக்கு கொடுத்தாங்க, அந்த நேரம் என் மனசு பூஸ்ட்ட தான் தேடுச்சி. உடனே வீட்டுக்கு ஓடிப்போய் கொஞ்சம் பூஸ்ட்ட அள்ளி வாய்ல போட்டுக்கிட்டேன்.

அன்னைக்கு சாயந்தாரம் நாலரை மணி இருக்கும், முந்தா நாள் மலைய விழுங்க பாஞ்ச மேகக் கூட்டம் மாதிரி என் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்னு எங்க அம்மாவ விழுங்கி என் பக்கத்துல இருந்து நெரந்தரமா பிரிச்சுக் கொண்டுப் போய்ட்டு. அப்போ என்ன சுத்தி என்ன நடக்குன்னு எனக்கு தெரியல?, என் கைல இருந்து தவறி கீழ விழுந்த பூஸ்ட் பாட்டல் மாதிரி, எங்கம்மா கடவுள் கைல இருந்து தவறி விழுந்துட்ட மாதிரி யோசிக்கத் தோணுச்சி. அடுத்த நாள் எங்கம்மாவ அடக்கம் பண்ணுன அடுத்த நிமிசத்துல இருந்து நான் இந்த பூமில, நட்டு பாதியிலயே விட்ட மரம் மாதிரி நெலகுலைஞ்சி நின்னேன்.

அடுத்த கொஞ்ச நேரத்துல நானும் தம்புலாவும் ஆத்தா வீட்டுக்கு போய்ட்டோம், இல்ல இல்ல!. வேற வழியில்லாம இருந்திருக்கும் அதனால ஆத்தாவால கூட்டு போயிருப்போம். அங்க சுக்கு மல்லி தண்ணி தான் குடிப்பாங்க. தினமும் பால் வாங்குற அளவுக்கு ஆத்தாக்கும் தாத்தாக்கும் வசதியில்ல; அத புரியுற அளவுக்கு எனக்கு பக்குவமும் அப்போ இல்ல. ஆத்தா இருந்த அதே தெருவுல நாலு வீடு தள்ளி தாத்தா உறவுக்கார பொண்ணோட வீட்டுக்காரரு மிலிட்டரில இருந்து வந்திருந்தாரு.

அவரு பூஸ்ட் வாங்கிட்டு வந்திருந்தாரு..அப்போ ஒரு தடவ அங்க நானும் ஆத்தாவும் டீவி பார்க்க போனப்போ நான் ஆத்தாகிட்ட அழுதிட்டே பூஸ்ட் வாங்கித்தான்னு கேட்டேன். ஆத்தா அடிச்சு கூட்டி வந்ததும் அழுதுட்டே தூங்கிட்டேன். நாட்கள் போகப் போக எனக்கு பூஸ்ட் மறந்து சுக்கு மல்லி தண்ணி பழகிடுச்சு. நான் ஏதாவது கேட்டா ஆத்தா அம்மாவ நெனச்சு ஒப்பு சொல்லி அழுதுடும்ம் அத என்னால தாங்க முடியாது. அப்பலாம் பூஸ்ட் பாட்டல ஒடச்சு குப்பைல கொட்டினதால தான் சாமி தண்டனை கொடுத்ததா நானே மனசுக்குள்ள நெனைச்சுக்குவேன்.

ஒருநாள் செங்க கட்டில பஸ் செஞ்சு விளையாடிகிட்டு இருந்தேன். அப்ப தாத்தா ஆண்டிபட்டி சந்தைக்கு போயிட்டு ரயில்வே கேட்டு வழியா தலையில வெள்ள சாக்குல கொஞ்ச அரிசியும், கையில மஞ்சப் பைய புடுச்சு இழுக்க இழுக்க நடந்து வந்துட்டு இருந்தாரு. நான் ஓடிப்போய் தீபண்டம்னு ஆசையா புடுங்கிட்டு வீட்டுக்கு ரெண்டே ரெண்டு எட்டுல ஓடிட்டேன். தெறந்துப் பார்த்தாஇனிப்பு சேவுக்கும், காரா சேவுக்கும் நடுவுல பூஸ்ட் பாட்டிலு கெடந்துச்சு. எங்க மாமாகிட்ட வாங்கித்தர சொல்லி கேட்டு அத தாத்தா வாங்கிட்டு வந்துருக்காரு.

அன்னைக்கு நைட்டுப் பூறா எனக்கு தூக்கமே வரல, எப்ப விடியும் பால் வரும்ன்னு தவியா தவிச்சிட்டு இருந்தேன். விடிஞ்சதும் என் காட்டுல நல்ல மழைதான்; ஆனா வெறும் வாய்ல போட்டு திங்குறத மட்டும் விட்டுட்டேன். இதெல்லாம் எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்த நேரம், அப்பாவுக்கு ரெண்டாவது கல்யாணம் ஆகிருந்துச்சு. எங்கள பாக்க ஆத்தா வீட்டுக்கு வந்த அப்பா, அது இதுன்னு சொல்லி என்ன மட்டும் வீட்டுக்கு கூட்டு போய்ட்டாரு. என் தம்புலா சின்ன பையனா இருந்ததால ஆத்தா அவன விடல. ஒருவேள நானும் அப்போ சின்னப் புள்ளையா இருந்திருக்கலாம் போலன்னு கொஞ்சநாள்லயே யோசிக்க வச்சுது. ஆமா காலம் எவ்வளவு பொல்லாததுன்னு அப்போ தான் தெரிஞ்சுது

புதுவீடு, புது அம்மா எல்லாமே புதுசா இருந்துச்சு. போனதுல இருந்து ஒரு மூனு நாளைக்கு எனக்கு ஒரே கவனிப்பு. சிலேபி கொண்ட, வாய்க்கு ருசியா மீன் குழம்பு, தல கறி, கலர் டீவி, இதுல ஒருநாள் என்னபாரதி கண்ணம்மாபடத்துக்கு வேற கூட்டுப் போயி ரோஸ்மில்க் எல்லாம் வாங்கித் தந்தாரு எஙகப்பா. அதனால என்னவோ அங்கயே மனசு இருக்க, ஆசப்பட்டு அப்பாவோடவே இருந்துட்டேன். விருந்தும் மருந்தும் மூனு நாளைக்குத்தான்னு ஒரு பழமொழி உண்டு. அத அப்பதான் எவ்வளவு உண்மைங்குறத சொல்ல முடியாத வலியோட அனுபவிச்சேன்.

மூனு நாள் முடிஞ்சதும் என்னையே சாப்பாடு எடுத்துப்போட்டு சாப்பிட சொன்னாங்க, அப்பதான் எனக்கு இன்னொரு உண்மையும் புரிஞ்சுது. அம்மா அப்படிங்குறது வெறும் வார்த்தை மட்டும் இல்ல; அதுவொரு அற்புதமான விவரிக்க முடியாத ஆத்மார்த்தமான உணர்வு. அந்த உணர்வுக்கு ஒரு முகம்தான் ஒரு உருவம் தான் அப்படிங்குறது. எங்கையோ ஒருசிலருக்கு மட்டும் தான் அம்மாவையும் தாண்டி அம்மாவுக்கு நிகரான உறவுகளோ நண்பர்களோ வாய்ப்பாங்க. அது பெண்ணாகவும் இருக்காலாம் இல்ல பெண்மையை உணர்ந்த தாய்மை நிறைஞ்ச நல்ல ஆணாகவும் இருக்கலாம்ன்னு, அப்படி யாராவது எனக்காக இருக்காங்களான்னு என் மனம் எனக்கே தெரியாம அத சொல்லவும் தெரியாம ஏங்கித் தவிச்சுது.   

Writer Anandhi

சாப்பாடு போட்டுக்க சமையல் கட்டுக்குள்ள போனதும், செல்ப்ல இருந்த பூஸ்டு பாட்டில் என் கண்ணுல பட்டுது.., எனக்கு சந்தோசம் தாங்கல!. ஆசையா எடுத்து வேகமா தெறந்தேன்..ஆனா அது கொளம்பு மசால் பொடிசைடுல பார்த்தாநிறைய பூஸ்டு பாட்டில். அது எல்லாத்துலயும் உளுந்து, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு இப்படி ஏதேதோ அடச்சு வச்சிருந்தாங்க. அப்பறம் போகப் போக அதெல்லாம்து பார்த்து  எனக்கு பூஸ்டு பொடி நெனப்பே போயிடுச்சு.. எங்க அம்மா பூவதி நெனப்பு வந்துடுச்சு!.

தொடர்புக்கு :- arivuboopathimca@gmail.com              

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry