இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ‘ராஜா ராம் மோகன் ராய்’! நினைவிடம்கூட அமைக்காத இந்திய அரசு! Raja Ram Mohan Roy – Indian Social Reformer!

0
40
Raja Ram Mohan Roy Death Anniversary: Key Facts about the ‘Father of Modern India’ | GETTY IAMGE

அரசியல் ரீதியாக ஆங்கிலேயர்கள் நாட்டை அடிமைப்படுத்திக் கொண்டிருக்க, பல பழமைவாதத் தீமைகள் சமூகத்தை பின்னோக்கி இழுத்துக் கொண்டிருந்தன. அப்படிப்பட்ட ஒரு சமயத்தில், சமுதாயத்தைச் சீர்திருத்தும் பொறுப்பை சிலர் கையில் எடுத்தனர். அதில் முன்னோடியாக இருந்தவர் ராஜாராம் மோகன் ராய். இவர் ஒரு சிறந்த அறிஞரும், சுதந்திர சிந்தனையாளரும் ஆவார். அவர் ஒரு மத மற்றும் சமூக சீர்திருத்தவாதி. ‘நவீன இந்தியாவின் தந்தை’ அல்லது ‘வங்காள மறுமலர்ச்சியின் தந்தை’ என்று அவர் அழைக்கப்படுகிறார்.

ராஜாராம் மோகன் ராய் (Raja Ram Mohan Roy – மே 22, 1772 – செப்டம்பர் 27, 1833) வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரம்ம சமாஜத்தை நிறுவியவர். பிரம்ம சமாஜம் என்பது முதல் இந்திய சமூக-மத சீர்திருத்த இயக்கங்களில் ஒன்றாகும். ‘இந்திய மறுமலர்ச்சியின் தந்தை’ என்று பல வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படும் ராஜாராம் மோகன் ராய், 1833-ஆம் ஆண்டு, தனது 61-ஆம் வயதில் இங்கிலாந்தில் காலமான போது, அவர் ஒரு உலகளவில் பிரபலமான மேதையாகவும் அறிவுலகவதியாகவும் அறியப்பட்டார்.

Also Read : தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! Microplastics Found in Human Breast Milk!

ஆறடி உயரத்தில், வசீகரமான தோற்றம் கொண்ட அவர், இந்தியாவுக்கும் மேற்குலகிற்கும் ஒரு பாலமாக இருந்தார். ராம்மோகன் ராய் தான், இந்தியாவைத் தாண்டியும் ஒரு மனிதச் சமூகம் இருக்கிறதென்பதையும், இந்தியா இந்த சர்வதேசச் சமூகத்தின் ஒரு பகுதி என்பதையும் தெளிவாக உணர்ந்த இந்தியச் சிந்தனையாளர், என்கின்றார் இங்கிலாந்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான க்றிஸ்டோஃபர் பேலி.

தனது 42-வது வயதில் தான் மிகவும் நேசித்த கல்வி மற்றும் சமூகச் சீர்திருத்தம் ஆகியவற்றில் ராம் மோகன் ராய் தனது முழு கவனத்தைச் செலுத்தினார். சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியமான குறிக்கோளாக ராம்மோகன் ராய் கொண்டிருந்தது பெண்களின் முன்னேற்றம். முக்கியமாகச், ‘சதி’ என்றழைக்கப்பட்ட உடன்கட்டை ஏறுதல் எனும் கொடுமையை ஒழிப்பது. கல்கத்தாவின் காளி கோவிலுக்கு அருகில் இருக்கும் ‘சதி படித்துறையில்’ நடந்த பல உடன்கட்டை ஏறும் நிகழ்வுகள் ராம்மோகன் ராயை வெகுவாகப் பாதித்திருந்தன.

1818-ஆம் ஆண்டு, ராம்மோகன் ராய், சதிக்கு எதிரான ‘A Conference between an Advocate for, and an Opponent of the Practice of Burning Widows Alive’ என்ற தலைப்பிலான தனது அறிக்கையை வெளியிட்டார். அது இந்தக் கொடூரமான பழமைவதப் பழக்கத்தைப் பற்றி வெளியுலகிற்கும் அறியத்தந்தது. இதைத்தொடர்ந்து சதியை எதிர்த்து தீவிரமான பிரசாரத்தையும் மேற்கொண்டார் ராம்மோகன் ராய்.

A Hindu Widow Committing Sati, Jumping Into The Flames To Join The Remains Of Her Husband. Getty Images

அதற்குமுன் வரை, கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்கள், இந்தியர்களின் மத நம்பிக்கைகளில் தலையிடக்கூடாது என்று ‘சதி’யைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் சதிக்கு எதிரான ராம்மோகன் ராயின் பிரசாரம் அதனை அசைத்துப் பார்த்தது. இந்த முயற்சிகளின் பலனாக, பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங் பிரபு 1829-ஆம் ஆண்டு முதன்முதலாகச் ‘சதி’ பழக்கத்துக்குத் தடை விதித்தார்.

இந்தியாவிற்காகவும், இந்தியச் சமூகத்தைச் சீர்திருத்தவும் தீவிரமாகப் பணியாற்றிய ராஜா ராம்மோகன் ராயின் கல்லறை கூட இந்தியாவில் இல்லை. அது இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரத்தில் உள்ளது. பிரிஸ்டல் நகரத்தின் மிகப்பழமையான கல்லறை தோட்டம் அர்னோஸ் வேல் (Arnos Vale Cemetery). இங்கு, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அறியப்படாத கல்லறைகளுக்கு மத்தியில் அவரது கல்லறையும் உள்ளது.

Statue of Ram Mohan Roy in front of Bristol Cathedral in Bristol, England

இந்தியாவின் சமூகத் தீமைகளுக்கு எதிராகப் போராடிய ராஜா ராம் மோகன் ராய் எப்படி இங்கிலாந்தில் அடக்கம் செய்யப்பட்டார்? முதல் இந்தியச் சுதந்திரப் போர் என்றழைக்கப்படும் 1857-ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் நடப்பதற்கு முன்னரே, முகலாயப் பேரரசு தனது அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

1830-ஆம் ஆண்டு முகலாயப் பேரரசின் கடைசி மன்னர்களில் ஒருவரான இரண்டாம் அக்பர் (அக்பர் ஷா), இங்கிலாந்து அரசரிடமிருந்து தனக்கு நிதியுதவி பெற்றுவருவதற்காக ராம்மோகன் ராயை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு அவர் இங்கிலாந்து அரசரை சந்திக்க வகைசெய்யும் பொருட்டு, அவருக்கு ‘ராஜா’ என்ற பட்டத்தையும் வழங்கினார்.

அதுமட்டுமல்ல, இரண்டாம் அக்பருக்கு, இங்கிலாந்தில் தனது தூதுவராக இருக்க ஒரு பிரபலமன, திறமைமிக்க நபர் தேவைப்பட்டார். அதனால் அப்போது பிரம்மோ சமாஜம் என்ற சமூகச் சீர்திருத்த அமைப்பினை நிறுவி மிகப்பிரபலமாக இருந்த ராம்மோகன் ராயை அதற்குத் தேர்ந்தெடுத்தார். ராய் மேற்கத்திய உலகில், இந்தியாவின், முகலாய சாம்ராஜ்ஜியத்தின் குரலாக இருப்பார் என்று இரண்டாம் அக்பர் நம்பினார்.

Also Read : #BharatVsIndia ஆங்கிலேயர்கள் பாரதத்தை ‘இந்தியா’ என்று ஏன் மாற்றினார்கள்? அறிய வேண்டிய வரலாற்றுப் பின்னணி! Explainer!

இங்கிலாந்திற்குச் சென்ற ராஜா ராம் மோகன் ராய், அங்கு பல இடங்களில் உரை நிகழ்த்தியுள்ளார். அவர் தனது கருத்துக்களைப் பல இடங்களில், பல கூட்டங்களில் தெரிவித்தார். அங்கிருந்து அவர் அமெரிக்கா செல்ல விரும்பினார். ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு மூளைக்காய்ச்சல் (meningitis) ஏற்பட்டது. அதன் பிறகு 1833-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தனது 61-வது வயதில் அவர் உயிரிழந்தார். இங்கிலாந்தில் இந்து முறைப்படி அவரை தகனம் செய்ய அங்குள்ள நாடைமுறை அனுமதிக்கவில்லை. எனவே அவர் பிரிஸ்டல் நகரில் அடக்கம் செய்யப்பட்டார்.

Raja Ram Mohan Roy the founder of the Brahmo Samaj

அவரது கல்லறை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்தது. இங்கிலாந்தின் மேற்கத்திய பாணிக் கல்லறைத் தோட்டத்தில், இந்தியக் கட்டுமானப் பாணியில் கட்டப்பட்ட ஒரேயொரு கல்லறையான ராம்மோகன் ராயின் கல்லறையை மீட்டெடுத்து மீண்டும் பராமரிக்கத்தது கார்லா கான்ட்ராக்டர் என்றொரு ஆங்கிலப் பெண்மணி. கல்கத்தா மாநகரட்சி மேயராக இருந்த பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சர்யாவின் உதவியோடு ராம்மோகன் ராயின் கல்லறை புதுப்பிக்கப்பட்டது.

Raja Rammohun Roy Interesting Facts:

  • வங்காள மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள ராதாநகரில் மே 1772 இல் ஒரு மரபுவழி பெங்காலி இந்து குடும்பத்தில் பிறந்தார்.
  • ராம் மோகனின் கல்வி – பாரசீக மற்றும் அரபு மொழி உயர் படிப்புக்காக பாட்னாவுக்கு அனுப்பப்பட்டார். அவர் குரானை வாசித்தார், பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் மற்றும் சூஃபி ஆன்மீக கவிஞர்களின் படைப்புகளை அரபில் மொழிபெயர்த்தார். பதினைந்து வயதிற்குள், ராம்மோகன் ராய் பங்களா, பாரசீகம், அரபு மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றைக் கற்றார். அவருக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலமும் தெரியும்.
  • வாரணாசிக்குச் சென்று வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் இந்து தத்துவங்களை ஆழமாகப் படித்தார்.
  • அவர் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்தையும் படித்தார்.
  • பதினாறு வயதில், இந்து சிலை வழிபாடு பற்றிய பகுத்தறிவு விமர்சனத்தை எழுதினார்.
  • 1809 முதல் 1814 வரை, அவர் கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய்த் துறையில் பணியாற்றினார், உட்போர்ட் மற்றும் டிக்பிக்கு தனிப்பட்ட திவானாகவும் பணியாற்றினார்.
  • 1814 முதல் அவர் தனது வாழ்க்கையை மத, சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தங்களுக்காக அர்ப்பணித்தார்.
  • தாகூர், ‘இந்தியாவில் நவீன காலத்தை துவக்கியவர்’ என்ற தலைப்பில், ராம் மோகனை ‘இந்திய வரலாற்றின் வானத்தில் ஒரு ஒளிரும் நட்சத்திரம்’ என்று குறிப்பிட்டார்.
  • அவர் முகலாய மன்னர் இரண்டாம் அக்பர் ஷாவின் (பகதூர் ஷாவின் தந்தை) தூதராக இங்கிலாந்துக்கு விஜயம் செய்தார், அங்கு அவர் நோயால் இறந்தார். அவர் செப்டம்பர் 1833 இல் இங்கிலாந்தின் பிரிஸ்டலில் இறந்தார்.
  • தில்லியின் முகலாயப் பேரரசர் இரண்டாம் அக்பரால் அவருக்கு ‘ராஜா’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
  • மேற்கத்திய கலாச்சாரத்தை தனது சொந்த நாட்டு பாரம்பரியங்களின் சிறந்த அம்சங்களுடன் ஒருங்கிணைக்க முயன்றார். சமஸ்கிருத மற்றும் ஆங்கில அடிப்படையிலான கல்விக்கு பதிலாக இந்தியாவில் நவீன கல்வி முறையை பிரபலப்படுத்த பல பள்ளிகளை நிறுவினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry