4.00 Minute(s) Read : ”இந்தியா” என்ற பெயர் சிந்து நதி என்று அழைக்கப்படும் Indus Riverல் இருந்து உருவானது. கிமு 5 ஆம் நூற்றாண்டில் கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸ் காலத்திலிருந்தே இந்தச் சொல் பயன்பாட்டில் உள்ளது. அதேநேரம், ”பாரத்” என்பது ஒரு மிகப் பழங்கால சொல், இது இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அப்படியென்றால் ஆங்கிலேயர்கள் பாரதத்தின் பெயரை இந்தியா என ஏன் மாற்றினார்கள்?
பாரதம் என்ற பெயர் ஆங்கிலேயர்களால் இந்தியா என்று மாற்றம் செய்ய முடிவெடுத்ததற்கு, மொழியியல் அறிமுகமின்மை, அரசியல் கருத்துக்கள் மற்றும் நிர்வாக வசதி உள்ளிட்ட பல காரணிகள் இருக்கலாம். மொழிகள், கலாச்சாரங்கள், இறையுணர்வு, பண்பாடுகள் வலுவாகப் பற்றிக்கிடந்த இந்த தேசத்திற்கு வந்த ஆங்கிலேயர்கள், அவர்களுக்கும் – மேற்கத்திய உலகிற்கும் மிகவும் பரிச்சயமான “இந்தியா” என்ற சொல்லை, இந்த தேசத்திற்குத் தேர்ந்தெடுத்தனர்.
இந்தியா என்ற வார்த்தை, ‘இண்டிக்’ என்ற கிரேக்க சொல்லில் இருந்து உருவானது. “இந்தியா” என்ற சொல் ஏற்கனவே ஐரோப்பிய இலக்கியங்களில் பரவலாக இருந்ததால், அவர்கள் அதைத் தேர்வு செய்து பயன்படுத்தத் தொடங்கினர். மறுபுறம், “பாரத்” என்ற வார்த்தையின் கலாச்சார முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
‘பாரதா’ என்ற சொல் சமஸ்கிருதத்தில் வேரூன்றியது, இது ‘புரு’ என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது வழங்குதல் அல்லது பாதுகாத்தல். ‘பிராதா’ (சகோதரன்) என்பதிலிருந்து, அது ‘பாரதா’ என்று பரிணமித்தது. இது நிலத்தை வளர்க்கும் மற்றும் ஆதரிக்கும் என்பதைக் குறிக்கிறது, ஏனெனில் பரத மன்னன் நிலத்தையும் அதன் மக்களையும் பாதுகாப்பவராக அறியப்பட்டார்.
அப்படியிருக்கையில், ஆங்கிலேயர்கள் பாரதத்தை இந்தியா என்று பெயரிட்டதற்கு மற்றொரு காரணம், இந்தியா என்ற வார்த்தை ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தது. “இந்தியா” என்ற பெயர் அவர்களுக்கு நிர்வாக எளிமையை அளித்ததுடன், துணைக் கண்டத்தில் அவர்களது ஆட்சியை எளிதாக்கியது.
Also Read : ‘One Nation, One Election’க்குத் தயாராகும் பாஜக! சாதக, பாதகங்கள் என்னென்ன? முழுமையான அலசல்!
“பாரத்” என்ற சொல் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு நேர்மாறாக, “இந்தியா” என்ற பெயரையே ஆங்கிலேயர்கள் நடுநிலையாகக் கருதினர். காலனித்துவ சகாப்தத்தின் அடையாளமாகத்தான் ஆங்கிலேயர்களால் இந்த பெயர் வழங்கப்பட்டது. இதைப் பயன்படுத்த அரசமைப்புச் சபையில் ஆட்சேபம் எழுப்பப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அதில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது. புதிய நாட்டிற்கு ‘பாகிஸ்தான்’ என்ற பெயர் முகமது அலி ஜின்னாவால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதுபற்றி குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர் ஜான் கீ, ‘இந்தியா’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் எந்த சர்ச்சையும் இல்லாமல் இருந்தது. ஆனாலும் ‘இந்தியா’ என்ற பெயர் காலனித்துவ அடையாளமாகவே பார்க்கப்பட்டது. அதன் காரணமாக, தேசம் சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலத்தில் ‘பாரத்’ என்பது நல்ல பெயராக இருந்தது என்று அவர் தனது ‘India: A History’ என்று புத்தகத்தில் எழுதியுள்ளார்.
பாரதம் என்பது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய வேதங்களில் காணப்படும் சமஸ்கிருத சொல் ஆகும். அதேநேரம், இலக்கியங்கள் எதிலும், எந்த இடத்திலும் இந்தியா என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை என்பதை மறுக்க முடியாது. பெளத்த அல்லது ஜைன நூல்களிலும் இந்தச் சொல் இடம்பெறவில்லை. தெற்காசியாவில் பேசப்படும் வேறெந்த மொழியிலும் ‘இந்தியா’ என்ற வார்த்தை இல்லை. ஜான் கீயின் கூற்றுப்படி, பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கிய இந்தியா என்ற பெயரை எந்த நாடும் ஏற்றுக்கொள்ள விரும்பாது என்று முகமது அலி ஜின்னா நம்பினார்.
ஆனால், தங்களது நாடு இந்தியா என்றே அழைக்கப்பட வேண்டுமென நேரு கோரிக்கை விடுத்தார். பிரிட்டிஷ் வைஸ்ராய் மவுன்ட் பேட்டன் பிரபு அதை ஏற்றுக்கொண்டார். நேரு மற்றும் காங்கிரஸ் கட்சியினர், தேசத்தை இந்தியா என்று அழைக்கப் போகிறார்கள் என்பதை அறிந்ததும் ஜின்னா மிகவும் கோபமடைந்தார்’ என்று ஜான் கீ எழுதுகிறார்.
அடிப்படையில் சிந்து நதியைச் சுற்றியுள்ள பகுதி ‘இந்தியா’ என்று அழைக்கப்பட்டது. அவற்றில் பெரும்பாலானவை பாகிஸ்தானில் இருந்தன. இந்தியா பெயர் தொடர்பான முகமது அலி ஜின்னாவின் ஆட்சேபனைக்கு இதுவும் முக்கிய காரணமாகும். ‘இந்தியா’ என்ற பெயர் தவறாக இருப்பதாகவும், குழப்பத்தை விளைவிக்கும் விதத்தில் உள்ளதாகவும் மவுன்ட்பேட்டன் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில் ஜின்னா குறிப்பிட்டிருந்தார்.
இந்தியப் பிரிவினைக்கு முன்பே, ‘யூனியன் ஆஃப் இந்தியா’ என்ற பெயரை முஸ்லிம் லீக் எதிர்த்தது. தேசப் பிரிவினைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, செப்டம்பர் 1949 இல், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரைவு குறித்த விவாதம் தொடங்கியது. அப்போது, நாட்டிற்கு ‘ஹிந்துஸ்தான்’ என்ற பெயரும் பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 1 கூறுவது, “இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்.” ஆங்கிலேயர்களின் வரலாற்று மாற்றம் இருந்தபோதிலும், அரசியலமைப்பு இரண்டு பெயர்களையும் ஒப்புக்கொள்கிறது.
2020ல் கூட இந்தியா என்ற நாட்டின் பெயரை பாரத் என மாற்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்தியா என்ற வார்த்தை, ‘இண்டிக்’ என்ற கிரேக்க சொல்லில் இருந்து உருவானது. எனவே இந்தப் பெயரை அரசமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
மேலும், இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றும் விதத்தில், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 1-ஐ திருத்தம் செய்யவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார். ஆனால் இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தலையிடவும் மறுத்துவிட்டது. இந்தியா என்ற பெயர் ஏற்கனவே அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்தியா அதுவே பாரதம்” என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது என்று அப்போது நீதிமன்றம் தெரிவிந்திருந்தது.
இந்நிலையில் பெயர் மாற்ற விவாதம் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சார்பில் அனுப்பப்பட்ட அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் (President Of India) என்பதற்கு பதிலாக, பாரதத்தின் குடியரசுத் தலைவர் (President Of Bharat) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியா தலைமையேற்று நடத்திய இரண்டு நாள் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் முன்னர் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. இந்த பெயர் விவகாரம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோடியின் பிஜேபி அரசாங்கம் ஏற்கனவே முகலாயர் மற்றும் காலனித்துவ காலத்துடன் தொடர்புடைய பல நகரங்களின் பெயரை மாற்றியுள்ளது.
நாட்டின் நீண்டகால பெயரை நீக்குவதற்கு எதிராக எதிர்க்கட்சியும் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. ஆனாலும், மகாபாரதம் மற்றும் புராண இலக்கியம் போன்ற இந்து இதிகாசங்களில் பொதிந்துள்ள “பாரதத்தின்” வேர்கள் இந்திய வரலாற்றில் ஆழமாகச் செல்கின்றன. பிரிட்டிஷ் செல்வாக்கு இருந்தபோதிலும், இந்த பெயர் இன்னும் இந்திய கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.
அரசியல், புவியியல் மற்றும் மத காரணங்களுக்காக நாடுகள் பெரும்பாலும் தங்கள் பெயர்களை மாற்றுகின்றன. இப்போது வேறு பெயரில் அறியப்படும் நாடுகள் சிலவற்றை தெரிந்துகொள்ளலாம்.
துர்க்கியே என மாறிய துருக்கி
2022ஆம் ஆண்டில், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், தனது நாட்டை இப்போது அனைத்து மொழிகளிலும் “துர்க்கியே” என அழைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்தார். “Türkiye’ என்ற வார்த்தை, துருக்கிய தேசத்தின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மதிப்புகளை சிறந்த முறையில் பிரதிபலிக்கிறது மற்றும் வெளிப்படுத்துகிறது,” என்று அவர் கூறியுள்ளார்.
செக் குடியரசு செக்கியா என மறுபெயரிடப்பட்டது
செக் குடியரசு என்பது மத்திய ஐரோப்பிய தேசத்தின் அதிகாரப்பூர்வ பெயராக இருந்தாலும், அரசாங்கம் செக்கியா என்ற எளிய தலைப்பை விரும்புகிறது. விளையாட்டு போட்டிகள் மற்றும் சுற்றுலா சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் போன்ற சர்வதேச நிகழ்வுகளில், தேசம் அங்கீகரிக்கப்படுவதை இது எளிதாக்குகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். “நான் செச்கியா என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்” என்று 2019இல் ஜனாதிபதி மிலோஸ் ஜெமன் கூறினார்.
ஹாலந்து ஏன் நெதர்லாந்தானது?
ஜனவரி 2020 இல், நெதர்லாந்து மறுபெயரிடுதல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஹாலண்ட் என்ற பெயரை கைவிட்டது. நெதர்லாந்து என்ற பெயர் நாட்டை திறந்த, நவீன மற்றும் உள்ளடக்கியதாக சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று அந்த நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.
மாசிடோனியா ஏன் வடக்கு மாசிடோனியா என்று அழைக்கப்படுகிறது?
2019 இல், மாசிடோனியா குடியரசு அதிகாரப்பூர்வமாக வடக்கு மாசிடோனியா குடியரசாக மாறியது.இந்த பெயர் மாற்றம் கிரேக்குடனான அரசியல் தகராறுகளின் போது ஏற்பட்டது. மட்டுமல்லாமல், மாசிடோனியாவின் கிரேக்க பகுதியிலிருந்து நாட்டை வேறுபடுத்திக்காட்ட பெயர் மாற்றம் பயன்படுத்தப்பட்டது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry