‘One Nation, One Election’க்குத் தயாராகும் பாஜக! சாதக, பாதகங்கள் என்னென்ன? முழுமையான அலசல்!

0
78
Representational Image

”ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டம் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு சிறப்புக் குழு அமைத்துள்ளது. குழு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இந்தக் குழு ”ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளது.

ராம்நாத் கோவிந்த் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை, வரும் 18 முதல் 22-ந் தேதி வரையிலான நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்'(One Nation, One Election) என்ற கருத்து, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதைக் குறிக்கிறது. இதன் பொருள், மக்களவை மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதாகும்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அவ்வப்போது மாநில சட்டப்பேரவைகளுக்கு நடத்தப்படும் தேர்தல்களால் ஏற்படும் செலவைக் குறைப்பதாகும். 2019 லோக்சபா தேர்தலுக்கு 60,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் செலவழித்த தொகையும், தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் செய்த செலவும் இந்தத் தொகையில் அடங்கும்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நாடு முழுவதும் நிர்வாகக் கட்டமைப்பின் செயல்திறனை அதிகரிக்கும்; தேர்தல் பணிகளில் அதிகாரிகளை அடிக்கடி ஈடுபடுத்துவதால், சாதாரண நிர்வாகப் பணிகள் தேர்தல்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

Also Read : அதானி அறிக்கை தொடர்பாக பிரதமருக்கு சரமாரிக் கேள்வி! நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு ராகுல் வலியுறுத்தல்!

மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த இது உதவும். தற்போது, தேர்தல் நடக்கும்போதெல்லாம், நடத்தை விதிகள் அமலுக்கு வருவதால், அந்தக் காலகட்டத்தில் மக்கள் நலனுக்கான புதிய திட்டங்களை தொடங்கத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, ஒரே நேரத்தில் வாக்களிக்க வசதியாக இருக்கும் என்பதால், வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதில் சில சிக்கல்களும் உள்ளன. மாநில சட்டப் பேரவைகளின் ஆயுட்காலத்தை, மக்களவையின் 5 ஆண்டு காலத்துடன் ஒத்திசைக்க அரசியலமைப்புத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் பிற நாடாளுமன்ற நடைமுறைகளும் திருத்தப்பட வேண்டும்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால், தேசியப் பிரச்னைகளே அதிகக் கவனம் பெறும், உள்ளூர்ப் பிரச்சினைகளை வலுவாக எழுப்ப முடியாது என்பது மாநிலக் கட்சிகளின் வாதமாக இருக்கிறது. தேர்தல் செலவு மற்றும் தேர்தல் வியூகம் போன்றவற்றில், மாநிலக் கட்சிகளால் தேசிய கட்சிகளுடன் போட்டியிட முடியாது.

2015ல் IDFC இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில், “நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், மாநில சட்டப்பேரவையிலும், மக்களவையிலும் ஒரே கட்சி அல்லது ஒரே கூட்டணியை வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு 77 சதவீதம் உள்ளது. இருப்பினும், ஆறு மாத இடைவெளியில் தேர்தல் நடத்தப்பட்டால், 61 சதவீத வாக்காளர்கள் மட்டுமே ஒரே கட்சியைத் தேர்ந்தெடுப்பார்கள்.” என்பது தெரியவந்துள்ளது. மேலும், ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதால் நாட்டின் கூட்டாட்சி முறைக்கு சவால்கள் ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

Also Read : அடுத்த லெவலில் Google Search! ஜெனரேட்டிவ் AI அம்சம் அறிமுகம்! பயன்படுத்துவது எப்படி?

1967ஆம் ஆண்டு வரை இந்தியாவில் மாநில சட்டப் பேரவைகளுக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்பட்டு வந்துள்ளது. இருப்பினும், 1968 மற்றும் 1969ஆம் ஆண்டுகளில் சில சட்டப் பேரவைகளும், 1970ஆம் ஆண்டு மக்களவையும் முன்கூட்டியே கலைக்கப்பட்டபோது இந்த நிலைமை மாறியது.

1983ல், தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் தேர்தல்களை மீண்டும் கொண்டு வர முன்மொழிந்தது. பின்னர் அதன் ஆண்டறிக்கையில், அப்போதைய அரசாங்கம் பரிந்துரைக்கு எதிராக முடிவு எடுத்ததாக ஆணையம் கூறியுள்ளது. 1999ல் சட்டக் கமிஷன் அறிக்கையும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வலியுறுத்தியது.

பாரதிய ஜனதா கட்சியின் 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், மாநில அரசுகளின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தும் முறையை உருவாக்க முயற்சிப்பதாகக் கூறியது. 2016ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் மீண்டும் ஒருமுறை இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

2017ம் ஆண்டு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான திட்டம் குறித்து நிடி ஆயோக் அறிக்கை தயாரித்தது. 2018ம் ஆண்டில், ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த குறைந்தபட்சம் “ஐந்து அரசியலமைப்பு பரிந்துரைகள்” தேவைப்படும் என்று சட்ட ஆணையம் கூறியது.

Also Read : லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தி போன்று நிறம் மாறுகிறது! ஓபிஎஸ் வழக்கில் ஐகோர்ட் கடும் கண்டனம்!

2019ல் இரண்டாவது முறையாக பதவியேற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பிரதமர் மோடி விவாதித்தார். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம் மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி ஆகியவை பிரதிநிதிகளை அனுப்பி வைத்தன.

2022ல், அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முழுமையாகத் தயார் நிலையில் இருப்பதாகவும், ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் திறன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இருப்பதாகவும் கூறினார். இந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பில் மாற்றம் தேவை எனவும், அது நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

2022 டிசம்பரில், சட்ட ஆணையம், நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகள், இந்திய தேர்தல் ஆணையம், அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளிட்டோரின் கருத்தைக் கேட்டது.

பிரதமர் மோடி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்று வலியுறுத்தத் தொடங்கியதிலிருந்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த யோசனையை எதிர்க்கின்றனர். இது அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு முரணானது என்று அவர்கள் கூறி வருகின்றனர். எதிர்க்கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல் ’ஒரு நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினால் நாங்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போம் என்று சிவசேனா உத்தவ் தாக்கரே அணி கூறியுள்ளது.

Also Read : பொது சிவில் சட்டத்தால் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? மத்திய அரசின் முயற்சி பற்றிய விரிவான பார்வை! #UniformCivilCode

மூன்று மாநிலத் தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சமாஜ்வாதி உள்பட I.N.D.I.A. கூட்டணியில் அணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ’ஒரு நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை ஏற்கவில்லை. அதேநேரம், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அதிமுக வரவேற்பதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், செப்டம்பர் 18ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா, பொதுசிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா நிறைவேறினால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடத்தப்படும்.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை தேர்தல் தந்திரம் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டும் நிலையில், எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பாக சிறப்பு குழுவை அமைப்பது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகள், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறுமோ என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. 2024ஆம் ஆண்டில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சட்ப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry