2001முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்த ஒ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர் உள்ளிட்ட 7 பேர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கியாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்ட நிலையில், ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க தென் மாவட்டத்திற்கென மதுரை மாவட்டத்தில் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்குகள் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றபட்டது.
இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தேனி மாவட்ட நீதிமன்றத்திலேயே ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்று தேனி மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
Also Read : கோடநாடு குற்றவாளிகளுக்கு திமுக ஏன் ஜாமின் கொடுத்தது? வழக்கை சிபிஐ விசாரிக்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!
ஆனால், ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க மதுரையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தேனி மாவட்ட நீதிமன்ற உத்தரவு ஏற்க முடியாது எனத் தெரிவித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டபட்ட நபர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. சம்மனை எதிர்த்தும், வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற கோரியும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றியது.
2012 ஆம் ஆண்டு, குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆவணங்கள் இல்லை என்பதால் மேற்கொண்டு வழக்கை நடத்தவில்லை எனவும், புகாரை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை அளித்தது. இதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்குகளில் இருந்து அனைவரையும் விடுவித்து 2012 ஆம் சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை எந்த மேல் முறையீடும் செய்யாத நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கபட்டதை எதிர்த்து தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
Source : suo motu crlrc1524 of 2023
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஆட்சிக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியாக லஞ்ச ஒழிப்புத்துறை மாறிவிட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை ஓ.பன்னீர்செல்வத்திற்கு நற்சான்று வழங்கியுள்ளது. இதுபோல வேறு எங்காவது நடந்ததை கேள்விப்பட்டதுண்டா? இது கேலிக்கூத்தானது. லஞ்ச ஒழிப்புத்துறை தனது அறிக்கையை நீதிமன்றத்தில்தான் சமர்பிக்க வேண்டும் மாறாக சட்டசபையில் அளித்துள்ளது. சபாநாயகர் நீதிபதியை போல செயல்பட முடியாது.
குற்ற வழக்கு விசாரணை நடைமுறை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டம் பொருந்தாது என அறிவித்து விடலாமா? அதிகாரவரம்பு இல்லாத தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு, உயர்நீதிமன்றம் வழக்கை மாற்றியுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்சனைகள் உள்ளது. ஆளுங்கட்சியின் விருப்பப்படி லஞ்ச ஒழிபுத்துறை செயல்படுகிறது, லஞ்ச ஒழிப்புத்துறை அரசியலில் இருந்து விலகி செயல்பட வேண்டும்.
2012ல் பிறப்பித்த உத்தரவை தற்போது மறு ஆய்வு செய்வதில் எந்த தவறும் இல்லை.
லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தியாக மாறி விட்டது, ஆட்சிக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்கிறது. லஞ்ச ஒழிப்புத் துறை கொண்டு வந்ததற்கான நோக்கமே சிதைந்து விட்டது. இதற்கு நீதிமன்றங்களும் துணைபோகிறது. வருமானத்துக்கு அதிகமாக 372% சொத்து சேர்த்ததாக அறிக்கை தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, பிறகு புகாரில் முகாந்திரம் இல்லை என தெரிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடர அனுமதி தந்ததை திரும்பப் பெற்று கொள்வதாக சபாநாயகர் தெரிவித்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. சபாநாயகர் தன்னை நீதிபதி போல் கருதி முடிவெடுக்க முடியாது. இதேபோல, வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.” நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு விசாரணையின் போது இவ்வாறு தெரிவித்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த போதும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்தார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry