எண்ணும் எழுத்தும் திட்டத்தை மூன்றாம் நபர் ஆய்வு செய்ய ஒத்துழைக்க முடியாது! அரசுக்கு எதிராகச் செயல்பட SCERT தூண்டுகிறது!

0
1151
ஐபெட்டோ அண்ணாமலை, அமைச்சர் அன்பில் மகேஸ்

ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

அதில், “ ‘எண்ணும் எழுத்தும்’ கல்வித் திட்டமே கல்விக்கு ஒரு சோதனை தரும் திட்டமாகும். இது விளம்பரத்தில் வெற்றி அடைந்துள்ளது. உண்மைத் தன்மை ஆய்வில் இத்திட்டம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தச் சோதனைத் திட்டத்திற்கு மூன்றாம் நபர் ஆய்வும்(Third party Evaluation) தேவையா? இதுதான் கல்வியாளர்களின் கருத்துப் பதிவாகும்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர், உயர்கல்வித்துறை இயக்குனருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளார்கள். அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிக்கும் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களை, எண்ணும் எழுத்தும் திட்டத்தினை மூன்றாம் நபர் மதிப்பீடு (Third party evaluation) செய்யும் திட்டத்திற்கானப் பயிற்சிக்கு அனுப்பச் சொல்லி எழுதி இருக்கிறார்.

Also Read : நாட்டின் முதல் Artificial Intelligence பள்ளி கேரளாவில் தொடக்கம்! ஆசிரியர்களுக்கு இனி வேலை இல்லையா?

இந்த மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை மதிப்பீடு செய்வதற்காக, அனைத்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களிலும் 28.08.2023 முதல் 31.08.2023 வரை மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கிறார்கள். அவர்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பள்ளிகள் வாரியாக 1-3 வகுப்புப் படிக்கும் மாணவர்களை ஆய்வு செய்து அறிக்கை அனுப்புவார்கள்.

எண்ணும் எழுத்தும் திட்டப் பாதிப்புகளை பற்றி பலமுறை அதிகாரப்பூர்வமாக, பதிவுகளையும் கோரிக்கை விண்ணப்பங்களையும் ஆசிரியர் இயக்கங்கள் அனுப்பியும், விவாதித்தப் பிறகும், நிதி ஒதுக்கீட்டினை செலவு செய்வதில் காட்டுகின்ற ஆர்வத்தினை மாணவர்களின் கல்வி நலனில், ஆசிரியர்களின் நலனில் SCERT இயக்ககம் அக்கறை கட்டவில்லையே!

இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி முடித்து 25, 30 ஆண்டுகளாக பாடம் நடத்தி வருகிற ஆசிரியர்களுக்கு, பி.எட் படித்துவரும் முதலாம் ஆண்டு மாணவர்களும், இரண்டாம் ஆண்டு மாணவர்களும், மூன்று நாட்கள் மட்டும் பயிற்சி பெற்று, மூன்றாம் நபர் மதிப்பீடு செய்வது என்பது சரியான சிந்திக்கத் தெரிந்த செயல்பாடாகுமா?

எண்ணும் எழுத்தும் திட்டமே தோல்வி அடைந்த திட்டம் என்று நாங்கள் ஆதாரப்பூர்வமாகவும், எழுத்துப்பூர்வமாகவும் தொடர்ந்து அறிக்கை அனுப்பி வருகிறோம். 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இத்திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளதை, மாணவர்களின் கல்வி நலன் கருதி நாங்கள் இன்று வரை எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறோம்.

Also Read : நீர்நிலைகளை சீரழிக்கும் நில ஒருங்கிணைப்பு மசோதா? கேள்வி கேட்காமல் ஒப்புதல் அளித்த ஆளுநர்! Land Consolidation Act!

எண்ணும் எழுத்தும் திட்டத்தினை ஆய்வு செய்ய இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவன முதல்வர்கள், பேராசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் என இத்தனை பேர் சோதனை மேல் சோதனை செய்து வருகிறார்கள். இவர்கள் செய்யும் சோதனையில், ஆய்வில் நம்பகத்தன்மை இல்லாமல், கல்லூரியில் படிக்கக் கூடிய மாணவர்களை மூன்றாம் நபர் மதிப்பீடு (Third party Evaluation) செய்யச் சொல்லி இருக்கிறீர்கள்.

ஆசிரியர் சமுதாயத்தை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதற்கு ஒரு எல்லையே இல்லையா?ஆசிரியர்களை கொந்தளிக்கச் செய்து, ஆளுங்கட்சிக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தலின்போது என்னவெல்லாம் செய்ய முடியுமோ? அவற்றையெல்லாம் SCERT தொடர்ந்து செய்து வருகிறது. என்று பகிரங்கமாகவே வெளிப்படுத்தி வருகிறோம். ஆதாரப்பூர்வமாக பட்டியலிட்டு, வெளியிடவும் தயாராக உள்ளோம். பள்ளிக்கல்வி அமைச்சர் எதனையும் கண்டுகொள்ள மாட்டார் என்ற அசாத்தியத் தைரியம் இருப்பதனால், துறையில் இப்படிப்பட்ட செயல்பாடுகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

மூன்றாம் நபர் மதிப்பீடு (Third party Evaluation) என்றால் என்ன? என்பதைப் பற்றி முதலில் எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். பி.எட்., படிக்கும் மாணவர்களுக்கும், எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கும் என்ன தொடர்பு என்பதை விளக்க முடியுமா? நாங்கள் நடத்திய பாடத்தை, பி.எட்., படிக்கும் மாணவர்களை ஆய்வு செய்ய அனுமதிக்க மாட்டோம்.

Also Read : உடல் பருமன் அறிகுறிகள்; ஏற்படுத்தும் நோய்கள்! Obesity: What You Need to Know

எவ்வளவு அவமானத்தைத் தந்தாலும், ஆசிரியர் சமுதாயமும், ஆசிரியர் இயக்கத் தலைவர்களும் பொறுத்துக் கொள்ளக் கூடிய பக்குவம் பெற்று விட்டதாக எண்ணுகிறீர்களா? சரியான விளக்கத்தினை தெரியப்படுத்தவில்லை என்றால் பள்ளிக்கு பார்வைக்கு வருபவர்களை நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம். ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்பதை திட்டவட்டமாக வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

தமிழக ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் (டிட்டோஜாக்) கருத்தொருமித்து ஒத்த நிலைபாட்டில்தான் உள்ளோம் என்பதை SCERT இயக்ககத்திற்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களே..! மௌனம் காத்தது போதும்! கல்வித்துறையை காப்பாற்றுங்கள். ஆசிரியர் சமுதாயத்தைச் சித்திரவதை செய்வதற்கும் அவமானப்படுத்துவதற்கும் தொடர்ந்து அனுமதிக்க வேண்டாம்.

எண்ணும் எழுத்தும் மூன்றாவது நபர் மதிப்பீடு (Third party Evaluation) செய்யும் திட்டத்தினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளரும் தனிக்கவனம் மேற்கொண்டு ரத்து செய்திட வேண்டுமென்று தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். பொறுத்தது போதும், பொங்கி எழுவோம்..! மூன்றாம் நபர் மதிப்பீடு செய்வதற்கு எதிராக களம் காண்போம்..!” இவ்வாறு அந்த மனுவில் ஐபெட்டோ அண்ணாமலை கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry