நீர்நிலைகளை சீரழிக்கும் நில ஒருங்கிணைப்பு மசோதா? கேள்வி கேட்காமல் ஒப்புதல் அளித்த ஆளுநர்! Land Consolidation Act!

0
87
Image Credit : vajiramias

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்டம் 2023  எனும் முன்வடிவை அறிமுகம் செய்தார்.

மாநிலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை நிறுவுவதற்காக, நிலங்களை ஒருங்கிணைக்க இந்தச் சட்டம் கொண்டு வரப்படுவதாகக் அரசால் கூறப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி 100 ஹெக்டேருக்குக் குறையாத இடத்தில் நீர்நிலைகள் இருந்தால், அந்த இடத்தில் வணிகம், தொழிற்துறை, சார்ந்த திட்டத்தை ஒருவர் செயல்படுத்த விரும்பினால் அத்திட்டத்திற்கு சிறப்புத் திட்ட அனுமதிகோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம்.

அரசு திருப்தியடையும் பட்சத்தில் எந்தவொரு திட்டத்தையும் சிறப்புத் திட்டமாக அறிவிக்கலாம். நிலத்தில் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு, நீரோட்டம் குறைக்கப்படாது என்கிற உறுதியுடன் விண்ணப்பித்தால் அதனைப் பரிசீலிக்க அரசு ஒரு நிபுணர் குழுவை அறிவித்து பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியோ அல்லது நிபந்தனைகளுடனோ ஒப்புதல் வழங்கும். திட்டங்களுக்கான விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான அதிகாரம் இச்சட்டத்தில் எங்கும் கிடையாது.

Also Read : சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஆலைகளை கரம்கூப்பி வரவேற்கும் தமிழக அரசு! மத்திய அரசு சொல்லி நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!

ஒட்டுமொத்த மசோதாவிலும் அரசு ஒரு நீர்நிலையை, வாய்க்காலை அதன் சூழல் முக்கியத்துவத்துடன் அணுகவில்லை என்பது தெளிவாகிறது. நீர்நிலைகள் உள்ளடங்கிய 100 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் வரும் எந்த ஒரு திட்டத்திற்கும் அரசின் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டால், நீர்நிலைகளையும் திட்ட உரிமையாளர் தன் பயன்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என இந்தச் சட்டம் கூறுகிறது. நீர் நிலைகள் மீதும் மேய்ச்சல் மற்றும் பொது நிலங்களின்மீதும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும், கால்நடைகள் உள்ளிட்ட பிற உயிரினங்களுக்கும் இருக்கின்ற உரிமையை இந்தச் சட்டம் முற்றிலுமாக பறிக்கிறது.

இந்தச் சட்டத்தால் பரந்தூர் விமான நிலையம் போன்ற பெரிய திட்டங்களுக்கு, திட்ட அமைவிடத்தில் நீர் நிலைகளைக் கொண்டிருந்தாலும் நிலம் கையகப்படுத்துவது மிகச் சுலபமானதாகிவிடும். அப்படி நடந்தால், விமான நிலையம் உருவான பிறகு அதை அதானி போன்ற பெரு நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு தாரை வார்க்கும் என்பதை கூறித் தெரிய வேண்டியதில்லை.

Also Read : கதிரியக்க நீரைக் கடலில் கலக்கவிடும் ஜப்பான்! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கை என கண்டனம்!

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை தரக்கூடிய எத்தனையோ மசோதாக்களை கையெழுத்திடாமல் காலம் தாழ்த்திய ஆளுநர், சட்டப்பேரவையில் எவ்வித விவாதமுமின்றி அறிமுகம் செய்யப்பட்ட நாள் அன்றே நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவுக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார் என்றால் இத்திட்டம் யாருக்கு பலனிக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகள், சூழல் அமைப்புகள் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துள்ளன. நிலம், நீர் நிலைகள் மீது கிராம, உள்ளாட்சி அமைப்ப்புகளுக்கு இருக்கும் உரிமையினையும், அவற்றைப் பாதுகாக்க ஏற்கெனவே உருவாக்கப்பட்ட சட்டங்களையும், தீர்ப்புகளையும் நீர்த்துப்போகச் செய்யும் நில ஒருங்கிணைப்புச் (சிறப்புத் திட்டங்கள்) சட்டம் 2023-ஐ தமிழ்நாடு அரசு செயல்பாட்டிற்குக் கொண்டுவரக் கூடாது என்பதே அனைவரது எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

Thanks : https://poovulagu.org/

Recommended Video

நீர்நிலைகளை தனியார்மயமாக்குவதா?அரசு செய்வது ஜனநாயக விரோதம்! Land Consolidation! Poovulagin Nanbargal

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry