சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஆலைகளை கரம்கூப்பி வரவேற்கும் தமிழக அரசு! மத்திய அரசு சொல்லி நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!

0
176
Courtesy - The Hindu

21.04.2023 அன்று சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அதே நாளில் எவ்வித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசால் பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தைத்தான் திமுக அரசு அவசரகதியில் நிறைவேற்றியுள்ளது. ஜனநாயக விரோதமான இந்த நடவடிக்கை கண்டிக்கப்பட வேண்டியது.

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்பு திட்டங்கள்) சட்டம் [Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023] என்னும் புதிய சட்ட மசோதாதான் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் உற்பத்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகவே இந்த நடவடிக்கை என தமிழக அரசு கூறுகிறது.

Also Read : காவல்துறை யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்! பிணையே கிடைக்காது! தனிமனித உரிமைகளை மீறும் சட்டத்திருத்தம்!

இந்த மசோதாவின்படி 100 ஹெக்டேருக்குக் குறையாத இடத்தில் நீர்நிலையோ, ஓடையோ, வாய்க்காலோ இருந்து, அந்த இடத்தில் உள்கட்டமைப்பு, வணிகம், தொழிற்துறை, வேளாண் சார்ந்த திட்டத்தை ஒருவர் செயல்படுத்த விரும்பினால், சிறப்புத் திட்ட அனுமதிகோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும்போதே, திட்ட நிலத்தில் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு குறைக்கப்படமாட்டாது, வாய்க்கால்கள், ஓடைகளின் கொள்திறன் அல்லது திட்ட நிலத்தின் மேல்பகுதியிலும் கீழ்பகுதியிலும் நீரோட்டமானது குறைக்கப்படாது என்கிற உறுதியுடன் சமர்ப்பிக்க வேண்டும் என மசோதா கூறுகிறது.

விண்ணப்பத்தை பரிசீலிக்கும் அரசு, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமென அதைக் கருதினால், அதை சிறப்புத் திட்டமாக அறிவித்து ஒரு நிபுணர் குழுவை உருவாக்கும். நான்கு அரசு அதிகாரி, அரசால் பரிந்துரைக்கப்படும் சுற்றுச்சூழல் நிபுணர் ஒருவர் உள்ளிட்ட 5 உறுப்பினர்கள் கொண்ட குழு பொதுமக்கள் கருத்துக் கூட்டம் ஒன்றை நடத்தி, தங்களது உள்ளீடுகளுடன்  வரைவு நில ஒருங்கிணைப்புத் திட்டம் ஒன்றை வெளியிடும். அந்த வரைவுத் திட்டத்தை அரசு மீண்டும் பரிசீலித்து, ஒப்புதல் அல்லது நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கி அரசிதழில் வெளியிடும்.

Also Read : தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திருத்தச் சட்டம்! திராவக மாடல் கொத்தடிமை அரசு திரும்பப் பெற வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல்!

இந்த நடைமுறை முழுவதும் திட்டங்களுக்குச் சாதகமானதாகவும் சுற்றுச்சூழலுக்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது. திட்டத்தை முன்னெடுப்பவரின் விண்ணப்பத்தை நிபுணர் குழு நினைத்தால் தள்ளுபடி செய்யலாம் என்கிற வாய்ப்பே இங்கு இல்லை. ஒப்புதல் அல்லது நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கப்படும் என்றே அரசும் குறிப்பிடப்பட்டுள்ளது. சூழல் பாதிப்பு அதிகமிருக்கும் என்றால் திட்டத்தை நிராகரிக்கலாம் என்கிற ஷரத்தே எங்கேயும் இல்லை.

நீர்நிலைகள் உள்ளடங்கிய 100 ஹெக்டேருக்கு அதிகமான பரப்பளவில் திட்டமிடப்படும் எந்த ஒரு திட்டத்திற்கும் அரசின் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டால், நீர்நிலைகளையும் திட்ட உரிமையாளர் தன் பயன்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறது இந்த சட்ட மசோதா.

இது நாள் வரையிலான சட்டங்கள், நீர் நிலைகள், பசுமையான வயல்வெளிகளை பெரு நிறுவனங்கள் ஆக்கிரமிக்க சில தடைகளை கொண்டிருந்தது. தற்போதைய சட்டத் திருத்தம் மூலம், தமிழக அரசு நினைப்பது, விவசாயத்தின் மூலமான பொருளாதார மேம்பாடெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதாகும். இந்த ஒட்டுமொத்த மசோதாவிலும், அரசு நீர்நிலையை, ஓடையை, வாய்க்காலை அதன் சூழல் முக்கியத்துவத்துடன் அணுகவில்லை என்பது தெளிவாகிறது. இதுபற்றியும் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் மவுனித்துதான் இருக்கின்றன.

Also Read : பரந்தூரில் விமான நிலையம்! பாதிப்புகளை பட்டியலிடும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு!

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இந்த மசோதாவிற்கு கடும் கண்டணம் தெரிவித்துள்ளது. நீர்நிலைகள் பாதுகாப்பிற்காக இருக்கக்கூடிய பிற சட்டங்கள் மற்றும் ஆணைகள் நீர்த்துப்போகும் வாய்ப்புகளையும் இந்த சட்ட மசோதா உருவாக்கியுள்ளது. மேலும், வேளாண்மை, மேய்ச்சல் சார்ந்த செயல்பாடுகளும் பாதிப்புகுள்ளாகும். நிலப்பயன்பாடு மாற்றப்படுவது புவி வெப்பமாதலை அதிகரிக்கும் என்று ஐ.பி.சி.சி. ஆய்வறிக்கைகள் கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே உடனடியாக இந்த சட்ட மசோதாவை திரும்பப்பெற பூவுலகின் நண்பர்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்” என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த மசோதா இன்னொரு வகையில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை செல்லாக்காசாக்கிவிடுகிறது. உள்ளாட்சி அமைப்புகள் இனி, ”ஐயோ எங்கள் கிராமத்தின் ஓடைகள், குளம், குட்டைகள் அழிகின்றனவே, நாங்கள் நிலத்தை தர ஒப்புதல் அளிக்க மாட்டோம்” என உரிமை பேச முடியாது. அந்த உரிமையை முற்றிலுமாக அவர்களிடம் இருந்து பறித்து, அரசு அமைக்கும் ஒரு குழுவிடம் தரப்பட்டுள்ளது.

இந்த மசோதா கடந்த மூன்றாண்டுகளாக மத்திய பாஜக அரசால் பரிந்துரைக்கப்பட்டு வந்தது தான். ஆனால், இதன் ஆபத்து கருதி பாஜக அல்லாத எந்த ஒரு மாநிலமும் இந்த மசோதாவை நிறைவேற்றத் துணியாத நிலையில், இதுபோன்ற ஆபத்தான மசோதாக்கள் தமிழக சட்டமன்றத்தில் எந்த கலந்துரையாடல் இன்றியும், சாதக, பாதகங்களை கணக்கில் கொண்டு விவாதிக்காமலும், கமுக்கமாக நிறைவேற்றப்படுவதை எப்படி புரிந்து கொள்வது? இந்தியாவிலேயே மற்ற எந்த மாநிலத்தைவிடவும் கிராமங்களை, ஊரகப் பகுதிகளை விழுங்கிய வண்ணம், அசுரத்தனமாக நகரமயமாக்கல் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

Also Read : என்.எல்.சி.யால் அதிகரிக்கும் சிறுநீரக செயலிழப்பு! பீதியில் கடலூர் மாவட்ட மக்கள்! நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்துமா தமிழக அரசு?

பரந்தூர் விமான நிலையத்திற்காக 4,000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களை எடுப்பதில் அரசு சந்திக்கும் சிக்கல்களை கருத்தில் கொண்டு தான், இது போன்ற படுமோசமான சுற்றுச் சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளதோ என்ற ஐயம் எழுகிறது. மத்திய அரசு பரிந்துரைக்கும் திட்டம் என்பதால், இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்துவிடுவார் என்பதில் சந்தேகமில்லை.

இந்த மசோதா சட்டமானால், வெளிநாட்டில் உள்ள பெரு நிறுவனங்கள் வந்து இங்குள்ள இயற்கையை அழித்து, மக்கள் வாழ்வாதரங்களை சூறையாடிச் செல்வதற்கு தான் உதவுமேயன்றி, மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்கவோ, அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்தவோ எந்த வகையிலும் துணையாக இருக்காது.

ஒரு நீர்நிலை என்பது தனித்த சூழல் அமைவு கிடையாது. அருகிலுள்ள வேளாண் நிலத்தோடோ, மேய்ச்சல் நிலத்தோடோ அல்லது கால்நடைகளுக்கு நீர் ஆதரமாகவோ எனப் பல பயன்பாடுகளை உள்ளடக்கிய பெரும் சூழல் சங்கிலியின் கண்ணியாக நீர்நிலை உள்ளது.  நீர்நிலையை மட்டும் வைத்துவிட்டு அதனைச் சுற்றியுள்ள நிலங்களின் பயன்பாட்டை மாற்றுவது அந்த நீர்நிலையின் அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry