என்.எல்.சி.யால் அதிகரிக்கும் சிறுநீரக செயலிழப்பு! பீதியில் கடலூர் மாவட்ட மக்கள்! நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்துமா தமிழக அரசு?

0
107

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.(Neyveli Lignite Corporation), கடந்த 1956ஆம் ஆண்டிலிருந்து நெய்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில், விவசாயிகளிடம் விளைநிலங்களைப் பறித்து, பூமிக்கடியில் படிமமாக இருக்கும் பழுப்பு நிலக்கரியைத் தோண்டி, எரித்து, அதிலிருந்து வெளிவரும் நீராவியின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

அதைத் தென்னிந்தியா முழுவதும் விநியோகம் என்ற பெயரில் வியாபாரம் செய்து வருகிறது. அதிக லாபம் ஈட்டுவதால், என்.எல்.சி, நிறுவனத்திற்கு நவரத்தின மதிப்பும் கிடைத்துள்ளது. ஆனால், விளைநிலத்தைப் பறிகொடுத்த விவசாயிகள் ஏதிலிகளாக இன்றுவரை ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.

Also Read : அவுட் சோர்சிங் மூலம் ஓட்டுநர்கள் நியமனம்!“ஸ்டால்வார்ட் பீப்பிள் சர்வீசஸ்” என்ற நிறுவனம் மூலம் தேர்வு! படிப்படியாக தனியார்மயமாகிறதா அரசு போக்குவரத்துக்கழகம்?

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக சுரங்கம் தோண்டுவதற்கு முன்பு, வெள்ளாற்றுப் படுகைப் பகுதி முப்போகம் விளையக்கூடியதாக இருந்தது. நிலத்தடி நீர்மட்டத்தைப் பொறுத்தவரை, கையால் தோண்டினாலே தண்ணீர் சுரக்கும் பூமியாக இருந்தது. தற்போது காவிரி, வீராணம் ஏரியினால், அந்தப் பகுதியில் ஓரளவிற்கு நவீன விவசாயம் செய்யும் அளவிற்குத்தான் நிலத்தடி நீர்மட்டம் இருக்கிறது.

செம்மண் பூமியான கெடிலம் ஆற்றிற்கு தென் பகுதியில், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, கடலூர், உளுந்தூர்பேட்டையை சுற்றியுள்ளப் பகுதியில், நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடங்குவதற்கு முன்பு வீட்டிற்கு ஒரு கிணறு இருந்தது. அதில் 10 – 15 அடியில் சுவையான நீர் சுரந்தது. மக்களும் ‘பூட்டாங்கயிற்றை’ (ஏர் உழுவதற்கும், வண்டியை இழுத்துச் செல்வதற்கும், மாட்டின் கழுத்தின் மேற்பகுதியில் வைக்கப்படும் நுகத்தடியும், மாடும் பிரிந்து சென்று விடாமல் பூட்டப்படும் கயிறு) குண்டானில் கட்டிக்கூட எளிதாகக் கிணற்றில் இருந்து நீரை எடுத்தார்கள்.

65 ஆண்டுகளாக நெய்வேலியில் 2 சுரங்கங்களில் பழுப்பு நிலக்கரியை எடுப்பதற்காக, பூமியைத் தோண்டி நிலத்தடி நீரை இராட்சச மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றி வருகிறார்கள். வற்றாத ‘ஜீவநதியைப்’ போல் ஆண்டு முழுவதும் கன்னியாக்கோயில் ஓடையில் ஓடும் தண்ணீரை பார்த்தாலே இதன் உண்மைத் தெரியும். (சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடலூருக்கும், நெய்வேலி ஆர்ச் கேட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் பயணம் செய்பவர்களுக்குத் தெரியும்).

Also Read: தரமற்ற பொருட்களை வாங்க நிர்ப்பந்தம்! அமைச்சர் பெயரால் மிரட்டல்! வேதனையில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி வார்டன்கள்!

கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்றிற்கு தெற்கேயும், வெள்ளாற்றிற்கு வடக்கேயும் உள்ள பகுதியில் (செம்மண் பகுதி, கரிசல் மண் பகுதி), 10 -15 அடி ஆழத்தில், மலைப் பகுதியில் கூட கிடைக்காத சுவையான குடிநீர் கிடைத்தது. அந்த மக்களுக்கு தங்கள் வீட்டின் கிணற்றில் இருந்தே மிக,  மிகச்(எத்தனை மிகை வேண்டும் என்றாலும் போடலாம்) சுவையான, அனைத்துச் சத்துகளும் சரியான விகிதத்தில் நிறைந்த குடிநீர் கிடைத்தது. மக்களும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள்.

சிறுநீரகச் செயலிழப்பால் மக்கள் பாதிப்பு

தற்போது அந்தச் தண்ணீரே மக்களின் உயிரைப் பறிக்கும் பரிதாபச் சூழல் ஏற்பட்டிருக்கிறது. 50 ஆண்டுகளாக நெய்வேலியைச் சுற்றியுள்ள சுமார் 30-40 கிலோ மீட்டர் சுற்று பரப்பளவில் நிலத்தடி நீர்மட்டம் ‘அதல பாதாளத்திற்கு’ சென்று கொண்டிருக்கிறது. 500 அடிக்கு மேல் ‘ஆழ்துளைக் கிணறு’ அமைத்துத்தான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

மட்டுமல்லாமல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சுரங்கம் அமைந்திருப்பது, ‘வங்காள விரிகுடா’ கடல் பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் என்பதால், ‘சவ்வூடு பரவல்’ மூலம் (Osmosis) கடல்நீர் நிலத்தடி நீரில் கலக்கிறது. இதனால் நிலத்தடி நீரானது சுவையற்ற, நச்சுத்தன்மையுள்ளதாக மாறிவிட்டது. இதன் தாக்கத்தால்தான், 10-15 ஆண்டுகளாக நெய்வேலியைச் சுற்றியுள்ள மக்கள், சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு பலியாகிறார்கள்.

Also Read: தமிழகத்தில் சொத்துவரி மீண்டும் 6% உயர்கிறது! ஏற்கெனவே பலமடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சி!

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடலூர் சிதம்பரம் இராஜ முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை, அங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் நாள்தோறும் சிறுநீரக செயலிழப்பால் எத்தனை நோயாளிகள் ‘டயாலிசிஸ்’ செய்து வருகிறார்கள் என்பதை கணக்கெடுத்தாலே, சிறுநீரகச் செயலிழப்பைப் பற்றிய உண்மைத் தன்மையை அறியலாம்.

5 ஆண்டுகளாக எனது சொந்த ஊரான ‘பெரியக்காட்டுப்பாளையம்’ என்ற கிராமத்தில் மட்டும், நானறிந்த வகையில், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என சிறுநீரகச் செயலிழப்பால் டயாலிசிஸ் செய்தும், நோய் முற்றியும் சுமார் 10 பேர் உயிரிழந்தனர். ஒரு சிலர் இன்றும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வாரம் இருமுறை ‘டயாலிசிஸ்’ செய்து கொண்டு, வாழ்நாளை எண்ணிக் கொண்டு வருகிறார்கள்.

ஒரு கிராமத்தில் மட்டும் 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 10 பேர் ‘சிறுநீரகச் செயலிழப்பால் மரணமடைந்தனர்’ என்றால், நெய்வேலியைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஊர்களில், எத்தனை பேர் ‘மரணித்தனர்’ என்று எண்ணிப் பார்க்கவேண்டும்.

Also Read : மதுக்கடை இல்லாத மதுவிற்பனை! மதுபாட்டில்கள் டோர் டெலிவரி! விற்பனையை முறைப்படுத்த சூப்பர் வழி! Vels Exclusive

இதுபற்றி ஒருமுறை எனது உறவினரும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியராக பணிபுரியும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரிடம் கேட்டபோது, இதன் உண்மைத் தன்மையை அறிய, அரசும், மக்கள் பிரதிநிதிகளும், மருத்துவக் கல்லூரியின் நிபுணர்களும் ஒருங்கிணைந்து, IIT போன்ற ஆராய்ச்சி நிறுவனம் மூலம் ஆய்வு நடத்தி பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.

சிறுநீரகச் செயலிழப்புக்கான காரணம் பல இருந்தாலும், இந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்படுவற்குக் குடிநீரில் கலந்துள்ள கடினமான ‘தனிமங்களே’ காரணம் என்று கூறலாம். சிறுநீரகம் கடினமான தனிமங்களை சுத்திரிக்க முயற்சித்து, ஒரு கட்டத்தில் செயலிழக்கிறது.

என்.எல்.சி. நிறுவனம் நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றுவதால், நெய்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் ‘அதல பாதாளத்திற்கு’ சென்றதோடு மட்டுமில்லாமல், நெய்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில், கடல் நீர், நிலத்தடி நீரில் கலப்பதால், அதன் சுவை மாறியதுடன், கடினமான ‘தனிமங்கள்’ நிலத்தடி நீரில் ‘செறிவுற்றுவிட்டன’. இதனால் என்.எல்.சி. சுரங்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரை குடிநீராகப் பருகும் மக்கள் ‘சிறுநீரக’ செயலிழப்பிற்கு ஆளாகி, மெல்ல, மெல்ல மரணிக்கிறார்கள்.

Also Read : சாப்பிட்டுவிட்டு 2 நிமிடம் நடந்தா போதும்! கட்டுப்பாட்டுக்குள் வரும் சர்க்கரை அளவு!

ஒளியின் (தீச்சுடரின்) ‘அழகில்’ கவரப்பட்டு மரணிக்கும் விட்டில் பூச்சியைப் போன்று, நெய்வேலி டவுன்ஷிப் என்ற ‘தித்திக்கும்’ ஊரின் புறத்தோற்றத்தை மட்டுமே ‘கண்டு களித்து’, அதன் அகத்தில் (சுரங்கத்தில்) உள்ள ஆபத்தினைப் பற்றி அறியாமலே மக்கள் மரணிக்கிறார்கள். வெளிமாவட்ட மக்களுக்கும் நெய்வேலி டவுன்ஷிப்பின் உண்மை முகம் தெரியவே இல்லை. நிலக்கரிச் சுரங்கங்கள் மக்களின் ஆரோக்கியத்தின் மீது ஏற்படுத்தும் தீய தாக்கங்களை பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் உணரவே இல்லை.

மலைப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் கண்களுக்கும், மனதிற்கும் ‘களிப்பாகத்தான்’ தோன்றும். ஆனால், அது ஒரு பசுமைப் போர்த்திய ‘பாலைவனம்’ என்பது எத்தனைப் பேருக்கு அறியும். அதைப் போன்றுதான் நெய்வேலி நகரியமும், நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி எடுக்கத் தோண்டும் மரணச் சுரங்கங்களும். இதுநாள் வரை விட்டில் பூச்சியாய் இருந்தது போதும்; இனி விழிப்புடன் இருப்போம்.

கட்டுரையாளர் : அரங்க. இளம்பரிதி, பத்திரிகையாளர். தொடர்புக்கு – parithifive@gmail.com

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry