சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் தமிழின விரோதப்போக்கு! தமிழ்நாட்டில் திறமையான இளம் வீரர்களே இல்லையா? என்ன செய்கிறது #TNCA?

0
96

தமிழர்கள் இல்லாத சிஎஸ்கே அணியைத் தடை செய்ய வேண்டும் என பேரவையில் பாமக எம்.எல்.ஏ. கோரிக்கை வைக்க, கிரிக்கெட் ஆர்வலர்களைத் தாண்டி மக்கள் மத்தியிலும் இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. TNCA எனப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் என்ன செய்துகொண்டிருக்கிறது? என்ற கேள்வியும் இதனூடே எழுகிறது.

சட்டப்பேரவையில் பேசிய தருமபுரி தொகுதி பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. எனவே, சிஎஸ்கே அணிக்குத் தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும், சிஎஸ்கே அணியில் ஒருவரைக் கூடத் தேர்வு செய்யவில்லை. பிற மாநில வீரர்களுக்கே அணியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழகம் சார்பில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணியாக சிஎஸ்கே அணி விளம்பரப்படுத்தப்பட்டு, பெரும் வர்த்தக லாபத்தை ஈட்டுகிறது. எனவே, தமிழக வீரர்கள் இல்லாத சிஎஸ்கே அணிக்குத் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்” என்று பேசினார்.

Also Read : என்.எல்.சி.யால் அதிகரிக்கும் சிறுநீரக செயலிழப்பு! பீதியில் கடலூர் மாவட்ட மக்கள்! நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்துமா தமிழக அரசு?

தருமபுரி எம்.எல்.ஏ. மட்டுமின்றி, தமிழின ஆர்வலர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ள ஆதங்கம் சரிதானா என்பதைப் பார்க்கலாம். நடப்பு (2023ம் ஆண்டுக்கான) ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் யாரும் இல்லை. வேறு சில அணிகள் தமிழக வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளன. குஜராத் டைட்ன்ஸ் அணி விஜய்சங்கரை தக்கவைத்துள்ளது.

அதே குஜராத் டைட்ன்ஸ் அணியில் மற்றொரு தமிழக வீரர் சாய் சுதர்ஷனும் இடம்பெற்றுள்ளார். சிறப்பாகவும் விளையாடி வருகிறார். நடப்பு சீசனுக்காக குஜராத் அணியால் அதிகத் தொகை கொடுக்கப்படும் தமிழக வீரர் என்றால் அது சாய் கிஷோர்தான். குஜராத் அணி நிர்வாகம் இவரை ரூ.3 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இப்படி மூன்று தமிழக வீரர்கள் குஜராத் அணியில் உள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கோவையைச் சேர்ந்த நாராயண் ஜெகதீசன் இடம்பெற்றுள்ளார். இதே அணியில் வருண் சக்ரவர்த்தி சிறப்பாக விளையாடி வருகிறார். இப்படி தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் கொல்கத்தா அணிக்காக விளையாடுகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பிரபல வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சிவகங்கைக்காரரான முருகன் அஸ்வின் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Also Read : அவுட் சோர்சிங் மூலம் ஓட்டுநர்கள் நியமனம்!“ஸ்டால்வார்ட் பீப்பிள் சர்வீசஸ்” என்ற நிறுவனம் மூலம் தேர்வு! படிப்படியாக தனியார்மயமாகிறதா அரசு போக்குவரத்துக்கழகம்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில், ‘சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்’ என வர்ணிக்கப்படும் நடராஜன் தனது கம்பேக்கை அழுத்தமாக பதிவு செய்து வருகிறார். சென்னையைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும் இதே அணியில் இடம்பெற்றுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஷாரூக் கானும் (ரூ.9 கோடிக்கு பஞ்சாப் அணி நிர்வாகம் இவரை தக்கவைத்தது), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பிரபல வீரர் தினேஷ் கார்த்திக்கும் களத்தில் உள்ளனர். ரூ.5.50 கோடிக்கு ஆர்சிபியால் தக்கவைக்கப்பட்ட தினேஷ் கார்த்திக், அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர்கள் மட்டுமின்றி, உத்தரப்பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டு தமிழக அணியில் இடம்பெற்று விளையாடி வரும் சோனு யாதவ் (ஆர்சிபி), கேரளத்தைப் பூர்வீகமாக கொண்டு தமிழக அணியில் இடம்பெற்று விளையாடிவரும் சந்தீப் வாரியர் (மும்பை) ஆகியோரும் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர்.

தமிழக கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களான பாபா இந்திரஜித், பாபா அபரஜித் அஜித், ராம், ஹரி நிஷாந்த், எம். சித்தார்த், சஞ்சய் யாதவ், அஜிதேஷ், சுரேஷ் குமார், ராக்கி பாஸ்கர், திரிலோக் நாக், அனிருத் சீதாராம், பி. சூர்யா போன்ற பல தமிழக வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. நடப்பு சீசனில், ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்பட்ட வீரர்கள், ஏலத்தில் தேர்வான வீரர்கள் என்று மொத்தமாக 11 தமிழக வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த சீசனுடன் ஒப்பிடும்போது 3 பேர் குறைவு.

Also Read: தரமற்ற பொருட்களை வாங்க நிர்ப்பந்தம்! அமைச்சர் பெயரால் மிரட்டல்! வேதனையில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி வார்டன்கள்!

இவர்கள் யாரும் சிஸ்கே அணி நிர்வாகத்தின் கண்ணில் படவில்லையா? அல்லது, தமிழ்நாட்டில் திறமைவாய்ந்த இளம் வீரர்களே இல்லை என்ற முடிவுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் வந்துவிட்டதா? சென்னை அணியில் தமிழ்நாட்டு வீரர்கள் தேர்வு ஆகாததற்கு தமிழ்நாடு கிரிக்கெட் அகாடெமியும் ஒரு காரணம் என்று சொல்லலாம். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர் அசோக் சிகாமணி தலைமையிலான தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் திறமையான இளம் வீரர்களை உருவாக்கவில்லையா? என்ற ஐயம் எழுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முகமாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரோகித் சர்மா, குஜராத் டைட்டன்ஸ் முகமாக அதே மாநிலத்தைச் சேர்ந்த ஹர்திக் பாண்டியா ஆகியோர் கோலோச்சி வருகின்றனர். 15 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னும், ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் மட்டும் தமிழ்நாட்டு வீரர்கள் யாரும் பெரிதாக முன்னிலைப்படுத்தபடவில்லை.

அதிலும், நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருமே இல்லை. 16வது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடும் 25 வீரர்களில் 8 வெளிநாட்டு வீரர்களும், 17 வெளிமாநில வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். கடந்த சீசனில் சென்னை அணியில் இடம்பெற்று இருந்த ஜெகதீசன் மற்றும் ஹரி நிசாந்த் இருவரையும்கூட சென்னை அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை.

Also Read : மதுக்கடை இல்லாத மதுவிற்பனை! மதுபாட்டில்கள் டோர் டெலிவரி! விற்பனையை முறைப்படுத்த சூப்பர் வழி! Vels Exclusive

ஐபிஎல் கிரிக்கெட்டோடு நெருங்கிய தொடர்புடையவர்களிடம் பேசியபோது, “சிஎஸ்கே அணிக்கு தேர்வாகும் அளவுக்கு தமிழ்நாட்டில் திறன்மிகுந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், மற்ற மாநில வீரர்களோடு ஒப்பிடுகையில், தமிழக இளம் வீரர்களிடம் தன் திறன் மீதான நம்பிக்கை குறைவாக இருப்பதாக தோன்றுகிறது. இதன்காரணமாக களத்தில் அவர்கள் பலவீனப்படுகிறார்கள், அச்சத்தின்பிடியில் சிக்குகிறார்கள். நெருக்கடியை கையாள முடியாமல் தவிக்கிறார்கள். அதேநேரம் மற்ற மாநில வீரர்களிடம் தாங்கள் மேன்மையானவர்கள், எதையும் செய்ய முடியும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது. இது அவர்களுக்கு கைகொடுக்கவும் செய்கிறது” என்று கூறுகிறார்கள்.

அணித் தேர்வர்களுக்கு வீரர்களின் மனநிலை என்பது மிக முக்கியமானதுதான். இதை பகுத்தாய்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன், இளம் வீரர்களுக்கான தன்னம்பிக்கை மேம்படுத்த, நெருக்கடியை திறம்படக் கையாள பயிற்சிகளை வழங்க வேண்டும். அப்படிச்செய்தாலே, தமிழக வீரர்கள் ஜொலிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

இதையொரு காரணமாகச் சொன்னாலும், களத்தில் நீருபித்த தமிழக வீரர்கள் 11 பேர், மற்ற அணிகளுக்காக விளையாடி வருகிறார்கள். அவர்களை சிஸ்கே நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. இதைப்பார்க்கும்போது, சி.எஸ்.கே. அணி நிர்வாகம் தமிழக வீரர்களைப் புறக்கணிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் என அணிக்கு பெயரை வைத்துக்கொண்டு, ஒரு தமிழக வீரரைக்கூட அணியில் சேர்க்காமல் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது தமிழின விரோதப் போக்காக அல்லது தமிழக வீரர்கள் திறமையற்றவர்கள் என உதாசீனம் செய்யும் போக்காக இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும். அடுத்த ஐபிஎல் சீசனிலாவது இது தவிர்க்கப்பட வேண்டும். குடத்திலிட்ட வைரமாக இருக்காமல், தமிழ்நாட்டு இளம் வீரர்கள் மைதானத்தில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry